Pregnancy Health: வேலைக்குச் செல்லும் கர்ப்பிணிகளுக்கு 20 டிப்ஸ்!
''கர்ப்பக் காலத்தில் பெண்கள், ஒவ்வொரு நொடிப் பொழுதையும் ரசித்து, மகிழ்ந்து, மனதையும், உடலையும் உற்சாகமாக வைத்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம். அலுவலகத்துக்குச் சென்று வரும் பெண்களுக்கு, அதனால் ஏற்படும் பயணக் களைப்பு, வேலையை முடிக்க வேண்டுமே என்ற பரபரப்பால் ஏற்படும் மன அழுத்தம் எனப் பல்வேறு காரணங்களால், உடல் நலம் பாதிக்கப்படும். தாயைவிட, வயிற்றில் உள்ள குழந்தை அதிகப் பாதிப்புக்கு உள்ளாகலாம். ஆனால், சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால், இந்தப் பிரச்னைகளைத் தவிர்க்க முடியும்'' என்கிறார் ராஜபாளையத்தைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் பிரேமலதா.
1. கர்ப்பக் காலத்தில் செரிமான மண்டலம் மெதுவாகத்தான் இயங்கும். குழந்தையின் வளர்ச்சியால் வயிறும் பெரிதாகிக்கொண்டே போகும். இதனால், ஒரே நேரத்தில் நன்றாகச் சாப்பிட முடியாது. ஆனால், இந்தத் தருணத்தில்தான் உடலுக்கு அதிக அளவு சத்துக்கள் தேவைப்படும். எனவே, மூன்று வேளை என்பதை, சிறிது சிறிதாகப் பிரித்து ஆறு வேளைகளாகச் சாப்பிடுங்கள். சரியான நேரத்தில், போதிய இடைவெளியில் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இது, வயிற்றில் வளரும் குழந்தைக்கும் என்பதை மனதில்கொள்ள வேண்டும்.
2. வீட்டை விட்டுக் கிளம்பும்போது ஆப்பிள், கொய்யா, வாழைப் பழம், பேரிக்காய் போன்ற சத்துள்ள பழங்களை நறுக்காமல், எடுத்துச்செல்ல வேண்டும். பழங்களைக் கடித்துச் சாப்பிடுவது நல்லது. முடியாதபட்சத்தில் ஜூஸாகச் செய்து சாப்பிடலாம். உடல் வறட்சி நீங்குவதுடன் வயிறும் நிறையும்.
3. எப்போதும் காய்ச்சி ஆறவைத்த நீரை உடன் எடுத்துச்செல்ல வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை என 12 டம்ளர் தண்ணீர் குடிப்பது நல்லது.
4. உடலுக்கு ஆற்றல் தரக்கூடிய உலர் பழங்களைக் கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். அதிக வேலைச் சுமையின்போது, வாயில் போட்டு மென்று சாப்பிடலாம்.
5. நீண்ட நேரம் சாப்பிடாமல் இருந்தால், ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவு குறைய ஆரம்பித்துவிடும். இதனால், சிசுவின் வளர்ச்சி பாதிக்கப்படலாம். எனவே, எப்போதும் கையில் ஒரு பிஸ்கட் பாக்கெட்டைவைத்துக் கொண்டு, வயிற்றைக் காயப்போடாமல், பசிக்கும்போது சாப்பிடுவது அவசியம்.
6. இரவில் ஆவியில் வேகவைத்த அல்லது எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவுகளைச் சாப்பிடுவது நல்லது.
7. நெஞ்செரிச்சல், எதுக்களிப்பு போன்ற பிரச்னைகள் இருந்தால், வறுத்த, பொரித்த, அதிகம் காரம், எண்ணெய் உணவுகளைச் சாப்பிடக் கூடாது.
8. அலுவலகத்தைச் சுற்றி நடைப்பயிற்சி செய்யுங்கள். நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் காலில் ரத்தம் தங்குதல், வெரிகோசிஸ் வெய்ன், ரத்தம் கட்டிப்போதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். இதற்கான வாய்ப்பை நடைப்பயிற்சி தடுக்கிறது. கடினமான உடற்பயிற்சிகள், அதிக எடைகொண்ட பொருள்களைத் தூக்குவது போன்றவற்றைத் தவிர்த்துவிடுங்கள்.
9. அலுவலகம் முடிந்து வீடு வந்ததும், நல்ல வெளிச்சமான பகுதியில் காலாற சிறிது நேரம் நடக்கலாம். கடின வேலைகளைத் தவிர்த்து, முடிந்தவரை கர்ப்பக் காலத்தில் எடையையும் கட்டுப்பாட்டுக்குள் வைக்கலாம்.
10. அலுவலகத்தில் போதிய இடைவெளியில் ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள். அந்த நேரத்தில் ஓய்வாக அமர்ந்து மனதை அமைதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இது, வேலையால் ஏற்படக்கூடிய மன அழுத்தத்தைப் போக்க உதவும்.
11. வேலைக்குச் செல்லும்போது, பருத்தி ஆடைகளை அணிவதன் மூலம், இறுக்கத்தைத் தவிர்க்கலாம்.
12. பஸ்ஸில் அலுவலகம் செல்லும்போது குமட்டல், வாந்தி, சோர்வு ஏற்படலாம். தானாகவே மருந்துகளை வாங்கிச் சாப்பிடக் கூடாது.
13. பேருந்து, அலுவலகம் என எந்த இடத்திலும் பதினைந்து நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து நிற்பது நல்லதல்ல. கால் நரம்புகள் சுருண்டுகொள்ளும். கெண்டைக்கால் வலி வரலாம். Deep Vein Thrombosis பிரச்னை ஏற்படும். உட்கார்ந்து பயணிப்பது நல்லது. வீடு திரும்பியதும் மிதமான வெந்நீரில் கால்களைவைத்து எடுக்கவும். இரண்டு வேளைகள் குளிப்பது நல்லது.
14. இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை, அவசியம் சிறுநீர் கழிக்க வேண்டும். சிறுநீரை அடக்கிவைப்பதால், நீர்க்கடுப்பு, கல் அடைப்பு வரலாம்.
15. கணவருடன் டூவீலரில் பயணிக்கும்போதும், வண்டியை ஓட்டிக்கொண்டு செல்லும்போதும் மேடு பள்ளம் பார்த்துச் செல்ல வேண்டும். இதனால், வயிற்றில் உள்ள குழந்தைக்கு அதிர்வு ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
16. ஹீல்ஸ் அணியவே கூடாது. தடுக்கி விழ நேரலாம். இதுவும் குழந்தைக்கு அதிர்வை ஏற்படுத்தும்.
17. பேறு காலத்தில் மசக்கையால் வாந்தி, மயக்கம், அஜீரணம், சோர்வு காரணமாக சாப்பாட்டில் நாட்டமின்மை ஏர்படலாம். தூக்கமின்றித் தவிக்கலாம். அல்லது அதீதத் தூக்கம் வரலாம். அலுவலகத்தில் நடந்த சில கசப்பான விஷயங்களால் தூக்கம் இல்லாமல் போகலாம். தூக்கம் தொலைந்தால், மறுநாள் அன்றாடக் கடமைகளைக்கூடச் செய்ய முடியாமல் அவதிப்பட வேண்டியிருக்கும். மேலும், இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்காக எழுவதும், கால் நரம்புகள் முறுக்கேறிக்கொள்வதும் சகஜம்.
18. குறிப்பிட்ட நேரத்தில் தூங்கிவிடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். குறைந்தது ஆறு முதல் எட்டு மணி நேரத் தூக்கம் அவசியம். இது, வயிற்றில் வளரும் குழந்தைக்கும் நல்லது.
19. படுக்கச் செல்வதற்கு முன்பு, அகலமான வாளியில் வெந்நீரை நிரப்பி, அதில் எலுமிச்சைச் சாறுவிட்டு 10 நிமிடங்கள் கால்களை அதில் வைத்து, எடுத்துத் துடைத்த பின் தூங்கச் செல்லலாம்.
20. கர்ப்பிணிகளுக்கென்று விற்கப்படும் சற்றே உயர்ந்த தலையணைகளை வாங்கிப் பயன்படுத்துவது நல்லது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.