Doctor Vikatan: கர்ப்ப காலத்தில் குழந்தையின் அசைவு எந்த மாதத்தில் தெரியும்?
Doctor Vikatan: என் வயது 26. இப்போது ஐந்து மாத கர்ப்பமாக இருக்கிறேன். பார்ப்பவர்கள் எல்லாம் குழந்தையின் அசைவு தெரிகிறதா என்று கேட்கிறார்கள். ஆனால், எனக்கு அது தெரியவில்லை. குழந்தையின் அசைவு தெரியாதது என்னை ஒருவித பதற்றத்துக்கு ஆளாக்குகிறது. குழந்தையின் அசைவு எந்த மாதம் தெரியும்... அது எப்படி இருக்கும்... கர்ப்பிணிகளைப் பார்த்து 'வயிறு இறங்கிடுச்சு..' என்று சொல்வதன் அர்த்தம் என்ன என்பதையும் விளக்கவும்.
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.
முதல்முறை கர்ப்பமாக இருக்கும் பெண்கள் என்றால், குழந்தையின் அசைவை உணர்வதில் சற்று தாமதமாகலாம். அதாவது கர்ப்பத்தின் 5 அல்லது 6-வது மாதத்தில்தான் குழந்தையின் அசைவை அவர்கள் உணர்வார்கள்.
வயிற்றுக்குள் குழந்தையின் அசைவு என்பது பட்டாம்பூச்சி பறப்பது போன்ற உணர்வு போல இருக்கும். இரவு தூங்கிக் கொண்டிருக்கும்போது குழந்தை திடீரென வயிற்றில் உதைப்பதை உணர்வார்கள். அதுவே ஏற்கெனவே குழந்தை பெற்ற அனுபவம் உள்ள பெண்களுக்கு குழந்தையின் அசைவானது முன்னரே தெரிந்துவிடும். அந்த அசைவானது எப்படி இருக்கும் என்பதும் அவர்களுக்குத் தெரியும். எனவே, முதல்முறை கர்ப்பமாக இருக்கும் பெண்கள், குழந்தையின் அசைவை உணர்வதில் ஏற்படும் தாமதம் குறித்து பயப்படத் தேவையில்லை.
சில பெண்கள் கர்ப்பத்தின் 6-வது, 7-வது மாதங்களில் குழந்தையின் அசைவே தெரியவில்லை, என்ன செய்வது என்ற கேள்வியோடு மருத்துவரை அணுகுவார்கள். குழந்தையின் அசைவு என்பது அம்மாவின் எதிர்பார்ப்புக்கேத்தபடி இருக்காது. அதாவது நீங்கள் விரும்பும்போதும், எதிர்பார்க்கும்போதும் குழந்தை அசையாது. குழந்தைக்கும் தூக்கம், விழிப்பு என்ற சுழற்சி இருக்கும். அதற்கேற்பவே அதன் அசைவு இருக்கும்.

குழந்தையின் அசைவு தெரியவில்லை என நீங்கள் நினைத்தால், ஒரு டம்ளர் பால் குடித்துவிட்டோ, ஏதேனும் சாப்பிட்டுவிட்டோ இடது பக்கமாகத் திரும்பிப் படுத்துப் பாருங்கள். அசைவு தெரிய வாய்ப்பு உண்டு. அதுவே நீண்ட நேரத்துக்கு அசைவே இல்லை என நினைத்தால், மருத்துவரை அணுகுங்கள்.
வயிறு இறங்குவது என்பது வேறொன்றுமில்லை... குழந்தையின் தலை திரும்பி, நீங்கள் பிரசவத்துக்குத் தயாராகிவிட்டதையே குறிக்கும். இதை 'லைட்டனிங் ஃபினாமினென்' (lightning phenomenon) என்று சொல்வோம். அதாவது திடீரென கர்ப்பிணிக்கு வயிறு லைட்டானது போன்ற உணர்வு ஏற்படும். இது கர்ப்பத்தின் 9-வது மாதம் நிகழும். இதைத்தான் பெரியவர்கள் 'வயிறு இறங்கிடுச்சு... சீக்கிரமே டெலிவரி ஆயிடும்' என அனுபவத்தின் பேரில் சொல்வார்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.