வங்காளதேசம்: டாக்கா விமான நிலையத்தில் பயங்கர தீ விபத்து; விமான சேவைகள் பாதிப்பால...
Doctor Vikatan: சீக்கிரமே உடல் பருமனைக் குறைக்க உதவுமா சித்த மருந்துகள்?
Doctor Vikatan: நான் பல வருட காலமாக உடல் எடையைக் குறைக்கப் போராடிக் கொண்டிருக்கிறேன். உடல் எடையைக் குறைக்க உதவுவதாகச் சொல்லும் மாத்திரைகள்கூட பயன்படுத்தியிருக்கிறேன். ஆனால், எதிலுமே எனக்குத் தீர்வு கிடைக்கவில்லை. இந்நிலையில், சித்த மருத்துவத்தில் வெயிட்லாஸுக்கென்றே நிறைய மருந்துகள் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். அது எந்த அளவுக்கு உண்மை?
பதில் சொல்கிறார், திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார்
உடல் எடையைக் குறைப்பதற்கு எப்போதுமே மருந்துகளைத் தீர்வாக நாடாமல், மருந்துகளை துணை ஆதரவாக வைத்துக்கொள்வதுதான் சிறந்தது. அதாவது, உடல் எடையைக் குறைப்பதில் கூட்டு சிகிச்சை முறைதான் சிறந்தது.
நல்ல உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு ஆகியவற்றோடு கொழுப்புச்சத்தைக் குறைப்பதற்கான மருந்துகள், குறிப்பாக, கெட்ட கொழுப்பைக் குறைக்கும் மருந்துகள் போன்றவற்றையும் எடுத்துக்கொள்ளும்போது உடல் எடை வெகுவாகக் குறையும்.
சித்த மருத்துவத்திலும் அதற்கு நிறைய தீர்வுகள் உள்ளன. உதாரணத்துக்கு, திரிபலா சூரணம். ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கவும், கொழுப்பு அதிகரிக்காமல் இருக்கவும் திரிபலா பயன்தரும்.
அதேபோல நத்தைச்சூரி சூரணம் என்றொரு மருந்து இருக்கிறது. இதயத்தின் செயல்பாடுகளைச் சிறப்பாக்கும் மருதம்பட்டைச் சூரணம், வெண் தாமரை சூரணம் போன்ற மருந்துகளையும், சித்த மருத்துவரின் ஆலோசனையோடு எடுத்துக்கொள்ளலாம்.

புடலங்காய், பீர்க்கங்காய், பூசணிக்காய், முள்ளங்கி போன்ற நீர்க்காய்கறிகளை நிறைய எடுத்துக்கொள்ளலாம்.
குறிப்பாக, மதிய உணவுக்கு புரோபயாடிக் சத்து நிறைந்த பானகம், பழைய சாத நீர், மோர் போன்றவற்றையும் அதிகம் சேர்த்துக்கொள்வது அவசியம்.
செரிமான மண்டலத்துக்கு நலம் செய்யக்கூடிய கிருமிகளை அதிகரித்தாலே உடல் பருமன் வராமல் தடுக்கலாம் என்ற கருத்தும் சமீபகாலமாக வலுப்பெற்று வருகிறது.
உடல் பருமனைக் குறைப்பதற்கு குறுக்கு வழிகளே கிடையாது. உடல் பருமனைக் குறைக்க நடைப்பயிற்சி மிகமிக முக்கியம். உணவுக்கட்டுப்பாடும் அவசியம். மருந்துகள் என்பவை கூடுதலாகப் பலன் தரும், அவவ்ளவுதான்.
மருந்துகளை மட்டுமே நம்பி, அவை மட்டுமே உடல் பருமனில் இருந்து தீர்வளிக்கும் என்று நினைக்க வேண்டாம்.
உடல் பருமன் வராமல் தடுக்கும் கொள்ளு சட்னி, கொள்ளு துவையல், கொள்ளு ரசம் போன்ற இயற்கையிலேயே உடலில் வெப்பத்தை அதிகரிக்கக்கூடிய உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்வதும் பலன் தரும்.
இன்றைய டிஜிட்டல் உலகில், உடல் பருமனைக் குறைப்பதாக உத்தரவாதம் தரும் மருந்துகளின் விளம்பரங்களை அதிகம் பார்க்க முடிகிறது. அவை, மலமிளக்கி போல செயல்படும். அதனால் உடல் எடை குறைந்தது போன்ற ஒரு மாயை ஏற்படும். மற்றபடி அது நிரந்தர தீர்வாகாது.
தினமும் மலமிளக்கி எடுத்துக்கொள்வதெல்லாம் சரியான விஷயமல்ல. நீரைப் பெருக்கும் மருந்துகளும் அப்படித்தான்... உடலை லேசாக்கியது போல உணர்வோம். ஆனால், அவை உடல் எடையைக் குறைக்காது. எனவே, எந்தக் குறுக்கு வழியையும் நாடாமல், மருத்துவரின் வழிகாட்டுதலோடு இந்த விஷயத்தை அணுகுவதுதான் நிரந்தர பலன் தரும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.