ஊட்டி: 'புரோக்கோலி ரூ. 250; சுக்குனி ரூ. 85' - எகிறும் சைனீஸ் காய்கறிகளின் வி...
Doctor Vikatan: ஜலதோஷத்துக்குப் பிறகு நிரந்தரமாக மாறிப்போன குரல்.. பழையபடி மாறுமா?
Doctor Vikatan: நான் 70 வயதுப் பெண். எனக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜலதோஷம் பிடித்திருந்தது. தொண்டைக்கட்டும் இருந்தது. அதன் பிறகு இதுவரை என் தொண்டைக்கட்டு சரியாகவில்லை. வழக்கமான குரல் மாறி, கரகரப்பாகவே பேசிக்கொண்டிருக்கிறேன். கூகுள் செய்து பார்த்ததில் acute laryngitis பிரச்னையாக இருக்கும் என்று வந்தது. அப்படியென்றால் என்ன? என் குரல் பழையபடி மாற வாய்ப்பில்லையா... எனக்கு எப்படிப்பட்ட சிகிச்சை அவசியம்?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மருத்துவர் தீபிகா

மூன்று வாரங்களுக்கும் மேலாக குரல் மாற்றம் தொடர்கிறது என்றால் அதை அலட்சியப்படுத்தக்கூடாது. உங்களுடைய வயது 70 என்கிறீர்கள். அதையும் இதில் முக்கியமாக கவனிக்க வேண்டும்.
உங்களுடைய குரல் மாற்றத்துக்கு பல காரணங்கள் இருக்கலாம். குரல்வளையில் ஏற்பட்ட வீக்கம் ஒரு காரணமாக இருக்கலாம். குரல் வளையில் பலவீனம் ஏற்பட்டிருக்கலாம்.
எனவே, முதலில் காது, மூக்கு, தொண்டை மருத்துவரை நேரில் அணுகுங்கள். அவர் உங்களைப் பரிசோதித்துவிட்டு, தேவைப்பட்டால் வீடியோ லாரிங்கோஸ்கோப்பி (video laryngoscopy ) டெஸ்ட்டை செய்து பார்ப்பார். அந்தப் பரிசோதனையில் குரல்வளையின் தன்மையையும் அது இயங்கும் விதத்தையும் முழுமையாகப் பார்க்க முடியும்.

உங்கள் பிரச்னையின் அறிகுறிகளை வைத்து நீங்களாக கூகுள் செய்து, அதில் வரும் தகவல்களை அப்படியே நம்பவோ, பின்பற்றவோ வேண்டாம். நீங்கள் தெரிந்துகொண்ட 'அக்யூட் லாரிங்கைட்டிஸ்' (acute laryngitis ) பிரச்னையானது ஒருவகையான இன்ஃபெக்ஷன். அது தானாகவே குணமாகக்கூடியது.
ஆனால், உங்களுக்கு வந்திருப்பது அதுதானா என்பதை மருத்துவர்தான் உறுதிசெய்ய வேண்டும். உங்கள் விஷயத்தில் 3 வாரங்களுக்கும் மேலாக குரல் மாற்ற பிரச்னை இருப்பதாகக் குறிப்பிட்டிருப்பதால், வேறு ஏதேனும் பிரச்னையாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம். சரியாக கவனிக்காமல் விட்டால் இது புற்றுநோய் ஆபத்தில்கூட கொண்டுவிடலாம். அதற்காக உடனே பயப்படாதீர்கள். ஆண்களிடம்தான் அந்த ரிஸ்க் அதிகம். நம் நாட்டில் பெண்களுக்கு அந்த ரிஸ்க் குறைவுதான். ஆனாலும், நீங்கள் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.