``ரஷ்ய எண்ணெய் கொள்முதல் செய்தால் கூடுதல் வரி விதிப்போம்" - மீண்டும் முருங்க மரம...
Doctor Vikatan: `தீபாவளி லேகியம்' எல்லா நாள்களிலும் சாப்பிடலாமா, குழந்தைகளுக்குக் கொடுக்கலாமா?
Doctor Vikatan: தீபாவளிக்குச் செய்கிற லேகியத்தில் என்ன ஸ்பெஷல்? அதை தீபாவளி அன்று மட்டும்தான் சாப்பிட வேண்டுமா, மற்ற நாள்களிலும் சாப்பிடலாமா? குழந்தைகளுக்குக் கொடுக்கலாமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர்.

தீபாவளி லேகியத்தின் சிறப்பே செரிமானத்துக்கு உதவும் அதன் தன்மைதான். தீபாவளி அன்று, மற்ற நாள்களைவிட, வழக்கத்துக்கு அதிகமான இனிப்பு, எண்ணெய், நெய் போன்றவற்றைச் சாப்பிடுவோம். அவையெல்லாம் செரிப்பதற்காகவே ஸ்பெஷலாகத் தயாரிக்கப்படுவது தான் தீபாவளி லேகியம்.
தீபாவளி லேகியத்தில் ஒரு டீஸ்பூன் அளவு சாப்பிட்டாலே செரிமானம் சீராக இருக்கும். இதை எல்லா வயதினருமே கொஞ்சம் எடுத்துக் கொள்ளலாம். அதே சமயம், குழந்தைகளின் செரிமான திறனுக்கேற்ப பார்த்துக் கொடுப்பது நல்லது.
இதை மற்ற நாள்களிலும் எடுத்துக் கொள்ளலாமா என்றால், எப்போதுமே செரிமான கோளாறு உள்ளவர்கள் எடுத்துக் கொள்ளலாம், தவறில்லை. லேகியம் என்பது மருந்துப் பொருள் என்றாலும் அளவு தாண்டாதவரை பாதுகாப்பானது தான். அதில் சேர்க்கப்படுகிற இனிப்பு, நெய் போன்றவற்றையும் கருத்தில் கொண்டு, அளவோடு எடுத்துக்கொள்வதுதான் சரியானது.

தீபாவளி லேகியத்தில் சேர்க்கப்படுகிற சுக்கு, திப்பிலி உள்ளிட்ட பல மூலிகைப் பொருள்களும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியவை.
தீபாவளியின்போது பட்டாசுப் புகையால் சிலருக்கு உடல்நலம் பாதிக்கப்படும். இன்னும் சிலருக்கு வயிற்றுத் தொந்தரவுகள் வரும். நிறைய உணவுகளை வழக்கத்தைவிட அதிக அளவில் சாப்பிடுவதால் ஏற்படும் வயிற்று உப்புசம் வயிற்றுப் பொருமல் போன்றவற்றுக்கும் தீபாவளி லேகியம் சிறந்த மருந்து.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.