Doctor Vikatan: 20 வருடங்களாக நீரிழிவு, சமீபத்தில் மாரடைப்பு... மாற்று மருத்துவம் உதவுமா?
Doctor Vikatan: என் அம்மாவுக்கு 56 வயது. அவர் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக நீரிழிவு நோயாளியாக இருக்கிறார். மூன்று வருடங்களுக்கு முன்பு அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்தது. மருத்துவமனையில் அட்மிட் செய்து ஸ்டென்ட் பொருத்தப்பட்டது. இப்போது அவருக்கு சுவாசத்தில் பிரச்னை இருக்கிறது. கடந்த ஒரு வருடமாக அவருக்கு நெஞ்சுவலி இருந்ததால் மீண்டும் மருத்துவமனையில் அட்மிட் செய்து, ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டது. மருத்துவர்கள் அவருக்கு ஓப்பன் ஹார்ட் சர்ஜரி செய்ய வேண்டும் என்றும் அப்படியே செய்தாலும் அதில் குணமாவதற்கான வாய்ப்பு வெறும் 5 சதவிகிதம் மட்டுமே என்றும் சொன்னார்கள். அதனால் நாங்கள் அந்தச் சிகிச்சையைச் செய்யவில்லை. அவருக்கு மாற்று மருத்துவத்தில் ஏதேனும் தீர்வுகள் இருக்குமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி
உங்களுடைய கடிதத்தைப் படிக்கும்போது உங்கள் அம்மா நீண்டகாலத்துக்கு சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டிருந்ததும், அது ஏற்படுத்திய விளைவால், இதய பாதிப்பில் முடிந்திருப்பதும் தெரிகிறது.
இவ்வளவு சிக்கலான பிரச்னைக்கு வெறும் வாய்வழியே சிகிச்சைகளையோ, சிகிச்சைக்கான இடங்களையோ பொத்தாம் பொதுவாகப் பரிந்துரைக்க முடியாது. அவரது உடல்நலம் எப்படியிருக்கிறது என்பதை நேரில் பார்த்துப் பரிசோதித்த பிறகுதான் எந்த முடிவுக்கும் வர முடியும். மாற்று மருத்துவத்தை முயற்சி செய்ய நினைப்பது உங்களுடைய விருப்பம். ஆனால், சித்தாவோ, ஆயுர்வேதாவோ... எதுவானாலும் அதில் சிறந்த மருத்துவரை நாடுங்கள்.
ஒவ்வொரு மருத்துவ முறைக்கும் பிரத்யேக பரிசோதனைகளும் சிகிச்சைகளும் இருக்கும். எனவே, வாய்வழியாகவோ, ஆன்லைன் மூலமோ உங்கள் அம்மாவுக்கான சிகிச்சையைப் பரிந்துரைக்க முடியாது. உங்கள் இருப்பிடத்தின் அருகில் உள்ள அரசு சித்தா, ஆயுர்வேத மருத்துவமனைகளை அணுகி, சித்தாவோ, ஆயுர்வேதமோ உங்களுக்கு விருப்பமான மருத்துவரை அணுகி, உங்கள் அம்மாவின் உடல்நிலை குறித்தும், அவருக்குக் கொடுக்கும் சிகிச்சைகள் குறித்தும் சொல்லுங்கள். அம்மாவின் உடல்நிலைக்கேற்ப அவர்கள் சிகிச்சையைப் பரிந்துரைப்பார்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.