பராசக்தி படத்துல என்னை reject பண்ணிட்டாங்க! - Actress Papri Ghosh| Kaathuvaakula...
Doctor Vikatan: சித்த மருந்துகளில் போலி; தரமான மருந்துகளை எங்கே வாங்குவது, எப்படி உறுதிசெய்வது?
Doctor Vikatan: சித்த மருந்துகளை வாங்கும்போது, பல கடைகளிலும் போலியான மருந்துகளைக் கொடுத்து ஏமாற்றுவதாகக் கேள்விப்படுகிறோம். அரசு அங்கீகாரம் பெற்ற மையங்களில் மட்டுமே சித்த மருந்துகளை வாங்க வேண்டுமா? அவற்றின் தரத்தை எப்படி உறுதிசெய்வது?
பதில் சொல்கிறார், திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார்
சித்த மருந்து தயாரிப்பைப் பொறுத்தவரை, அவற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் மூலிகைகளில் தொடங்கி, உப பொருள்கள் வரை அனைத்தின் தரமும் பரிசோதிக்கப்படும்.
பாரம்பர்ய சித்த மருத்துவர்களுக்கு இது குறித்த விழிப்பு உணர்வும் தெளிவான பார்வையும் இருப்பதால் அவர்கள் இவற்றைச் சரியாகப் பின்பற்றுவார்கள்.
போலி மருத்துவர்களால் பிரச்னைகளே வருகின்றன. தரமற்ற, விலை மலிவான மூலிகைகளையும் பொருள்களையும் பயன்படுத்தி மருந்துகள் தயாரிக்கும்போதுதான் சித்த மருந்துகளில் பிரச்னைகள் வருகின்றன.
யார் மருந்து தயாரிக்கலாம் என்ற வரைமுறை மீறப்படும்போதுதான் சிக்கல் எழுகிறது. அரசு மருந்து நிலையம் அல்லது பதிவுபெற்ற மருந்து நிலையத்திலிருந்து தயாராகி வரும் மருந்துகள், தரப்படுத்தப்பட்ட செயல்பாட்டு வழிமுறைகளை (Standard Operating Procedures) நிச்சயம் பின்பற்றியிருப்பார்கள்.
மருந்தின் லேபிளில் அது எப்போது தயாரிக்கப்பட்டது, அதன் காலாவதி தேதி, என்னென்ன மூலிகைகள் சேர்க்கப்பட்டுள்ளன என்ற தகவல்கள் சேர்க்கப்பட்டிருந்தால், பயமின்றி பயன்படுத்தலாம்.
அலோபதியில் போலி மருத்துவர்கள் உள்ளதுபோல சித்த மருத்துவத்திலும் இருக்கிறார்கள்.
டாம்ப்கால், இம்ப்காப்ஸ் போன்ற மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களும் சரி, தனியார் நிறுவனங்களும் சரி, மருந்துகள் லேபிளுடன் வரும் போது, பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தரக்கட்டுப்பாட்டையும் பின்பற்றியிருப்பார்கள் என்று நம்பலாம்.
எந்த நடைமுறையையும் பின்பற்றாமல், மருந்து தயாரிப்பில் ஏமாற்று வேலைகளைச் செய்வோரிடம் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.

உதாரணத்துக்கு, நிலவேம்புக் குடிநீரை எடுத்துக்கொள்வோம். அதில் முறையாகச் சேர்க்க வேண்டிய பொருள்களை, சரியான பக்குவத்தில் சேர்க்க வேண்டும். ஆனால், சந்தனம் விலை அதிகம் என்பதால் அதைச் சேர்க்காமல் விடுவோரும் இருக்கிறார்கள்.
இதுபோல விலை அதிகம் என்பதற்காக, அவசியமான பொருள்களையே தவிர்ப்பது போலி மருத்துவர்களிடம் நடக்கும். அப்படித் தயாராகும் மருந்துகள் நமக்குப் பலன் கிடைக்காது. அதேபோல, போலி மருத்துவர்களாக இருப்போர், விலை மலிவான, சாதாரண சித்த மருந்தைக் கூட பல மடங்கு விலை வைத்து விற்பார்கள். அவர்களிடமும் கவனமாக இருக்க வேண்டும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.