Asia Cup : India Vs Pakistan போட்டியில் வீரர்கள் கைகொடுத்துக் கொள்ளாததன் பின்னணி...
Doctornet: சிறுநீரக நோயாளிகளுக்கான உதவிக்குழு சந்திப்பு; உதவிக்கரம் நீட்டும் 'டாக்டர் நெட்' இயக்கம்
சிறுநீரக நோயாளிகளுக்கான பரஸ்பர உதவிக் குழு சந்திப்பு செப்டம்பர் 21 2025 அன்று காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை டாக்டர் நெட் இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது.
டாக்டர்நெட் இந்தியா, தமிழ்நாட்டில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கும் தக்க விழிப்புணர்வு கிடைக்காத மக்களுக்கும் மருத்துவ வசதிகளை அணுகுவதற்கு, இலாப நோக்கமற்ற அமைப்பாகச் செயல்படுகிறது.
டாக்டர்நெட், 600-க்கும் மேற்பட்ட அனுபவமுடைய சேவை நோக்கம் கொண்ட மருத்துவ நிபுணர்களுடன் இணைந்து, அரசு காப்பீட்டுத் திட்டங்கள் அல்லது மானியங்களின் கீழ் மருத்துவமனைகளில் ஆலோசனை/சிகிச்சை பெறுவதற்கு அவர்களுக்கு வழிகாட்டுகிறது.

டாக்டர்நெட்டின் முக்கிய பலம், சிகிச்சை காலத்தில் வழங்கப்படும் உணர்வுப்பூர்வமான ஆதரவாகும். சுகாதார சேவைகளைப் பின்தங்கிய மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் இயங்கி வரும் பதிவு செய்யப்பட்ட இலாப நோக்கமற்ற நிறுவனம் DoctorNet India, கடந்த 7 ஆண்டுகளாக தமிழகத்தின் 25 மாவட்டங்களில் 2,500க்கும் மேற்பட்ட மக்களைச் சென்றடைந்து வருகிறது.
“அனைவருக்கும் சுகாதாரம்” என்ற பார்வையுடன் செயல்படும் இந்நிறுவனம், 25க்கும் மேற்பட்ட அடிப்படை சுகாதார மையங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து, 600க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், மருத்துவமனைகள், உளவியல் நிபுணர்களின் தன்னார்வப் பங்களிப்புடன் கிராமப்புற மக்களுக்கு (80%) சிகிச்சை ஆலோசனைகள் வழங்கி வருகிறது.
கோவிட் காலத்தில் 500க்கும் மேற்பட்ட கிராமங்களில் 150க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு தொலைப்பேசி மருத்துவ ஆலோசனை மற்றும் மனநலம் சார்ந்த சேவைகள் வழங்கப்பட்டதுடன், கர்ப்பிணிப் பெண்கள், புற்றுநோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு மனப்பூர்வ ஆதரவும் வாழ்வாதார ஆலோசனைகளும் அளிக்கப்பட்டன.
சமூகத்தின் பாராட்டைப் பெற்றுள்ள DoctorNet India, சுகாதார சேவைகளில் தமிழகத்தில் சுகாதார சமத்துவத்திற்கு முக்கிய பாலமாகத் திகழ்கிறது.

சிறுநீரக நோயாளிகளுக்கான பரஸ்பர உதவிக் குழு சந்திப்பு, பங்கேற்பாளர்கள் அனைவரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ள ஒரு சிறிய ஆக்டிவிட்டியுடன் தொடங்கியது.
பின்னர், டயாலிசிஸ் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பெற்றவர்கள் மற்றும் அவர்களுடைய கேர் டேக்கர் தங்கள் எண்ணங்கள், மற்றவர்களுக்கு அறிவுரைகள் மற்றும் அவர்கள் எதிர்கொண்ட சிரமங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
அதைத் தொடர்ந்து, சிறுநீரக நோயாளிகளுக்கான பரஸ்பர உதவிக் குழு சந்திப்பில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட சிறுநீரக நிபுணர் டாக்டர் மதுசங்கர், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மற்றும் டயாலிசிஸ் – இது இரண்டையும் ஒப்பிடுகையில் ஏன் மக்கள் பெரும்பாலும் அறுவை சிகிச்சை காட்டிலும் டயாலிசிஸ் தேர்வு செய்கிறார்கள் என்பதற்கு மூன்று காரணங்களாகத் தக்க விழிப்புணர்வில்லாமை, செலவில் ஏற்படும் வேறுபாடுகள், சிறுநீரகம் கிடைக்காமை போன்றவற்றைக் கூறினார்.

மேலும், 'இந்த இரண்டின் மூலம் வாழ்நாளை நீட்டித்த பிறகு வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக எவ்வாறு வாழ வேண்டும். அவ்வாறு வாழ்வது நம்முடைய கையில்தான் இருக்கிறது. எனவே காலத்தில் நம் பிறருக்கு உதவி செய்து வாழ வேண்டும்' என்பன குறித்து விரிவாகப் பேசினார்.
எளிமையான முறையில் வழங்கிய அவரது விளக்கங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றோருக்கு எளிதில் புரிந்தன. நிகழ்ச்சி, கடினமான காலங்களில் உதவியவர்களுக்குப் பங்கேற்பாளர்கள் நன்றி தெரிவித்த நெகிழ்ச்சியான நன்றி அமர்வுடன் முடிவடைந்தது.