தோ்தல் ஆணைய கடவு எண்ணை தனியாருக்கு கொடுத்தது யாா்? செல்வப்பெருந்தகை கேள்வி
Exclusive: 'அதிமுக தொண்டர்களை அரவணைக்கும் சரணாலயம்தான் அறிவாலயம்!'- திமுகவில் இணைந்த மருது அழகுராஜ்
அதிமுகவின் அதிகாரபூர்வ நாளேடுகளின் முன்னாள் ஆசிரியராக இருந்த மருது அழகுராஜ் ஓ.பி.எஸ் அணியில் இருந்தார்.
ஆனால், சமீபமாக விஜய்க்கும் தவெக-வுக்கும் ஆதரவாக பல்வேறு கருத்துகளையும் பேசி வந்தார்.
அவர் தவெக-வில் இணைவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று(செப்.18) ஸ்டாலின் தலைமையில் திமுக-வில் இணைந்திருக்கிறார்.

அதிமுக-வில் இருந்து விலகி திமுக-வில் இணைந்த அன்வர் ராஜா, மைத்ரேயன் வரிசையில் தற்போது மருது அழகுராஜூம் இடம் பிடித்திருக்கிறார்.
இந்நிலையில் சில கேள்விகளுடன் மருது அழகுராஜினைத் தொடர்புகொண்டு பேசினோம். அந்தக் கேள்விகளும் பதில்களும் இங்கே!
திமுக எதிர்ப்புதான் அதிமுக-வின் உயிர்நாடி, அப்படி திமுக-வை எதிர்த்தவர்களெல்லாம் வரிசையாக அறிவாலயம் பக்கமாக செல்கிறீர்களே?
அதிமுக-வும், திமுக-வும் எதிர் இயக்கங்கள் என்று சொல்வதை விட மதர் இயக்கங்கள் என்று சொல்லலாம். அதாவது ஒரு தாயின் இரு பிள்ளைகள். 1972-ல் கட்சி பிளவுற்ற நிலையில் அந்தப் பிளவை சரிசெய்து திராவிட இயக்கங்கள் ஒன்றிணைய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் ஆன முயற்சிகள் நடந்தன.

அன்றைக்கு புதுச்சேரி முதலமைச்சராக இருந்த பாரூக் மரைக்காயர், பீகாரின் முதலமைச்சராக இருந்த பிஜூ பட்நாயக் எல்லாம் திராவிட இயக்கங்கள் ஒன்றிணைய எவ்வளவோ முயற்சிகள் செய்தார்கள். கலைஞரையும், புரட்சி தலைவரையும் கரம்கோக்க வைக்க வேண்டும் என்று எண்ணினார்கள். ஆனால் இன்று அது எடப்பாடியின் புண்ணியத்தால் ஒன்றாகும் முயற்சி கைகூடி வருகிறது என்று கருதுகிறேன்.
காரணம் என்னவென்றால் அதிமுக-வை அவர் அபகரித்துவிட்டார். அவரிடம் இருந்து கட்சியைப் பாஜக அபகரித்துவிட்டது. இதையெல்லாம் பார்த்து அதிமுக தொண்டர்களுக்கு விழிநீர் கசிகிறது. தாய் இயக்கமான திமுக-வின் தலைவர் மு.க ஸ்டாலின் நடத்துவது அரவணைப்பு அரசியல். எடப்பாடி நடத்துவது அபகரிப்பு அரசியல்.

தாயுமானப் பண்போடு தலைமையை முன்னெடுக்கக்கூடிய ஸ்டாலின் தலைமையை நோக்கி 1972-ல் புரட்சி தலைவர் காலத்தில் தொண்டராக இருந்த அன்வர் ராஜா, அம்மா காலத்தில் அவரால் மதிக்கப்பட்ட மைத்ரேயன் ஆகியோர் திமுக-வில் இணைந்தனர். இன்றைக்கு அந்த வழியில் நானும் இணைந்துவிட்டேன். அதிமுக ஒன்றுப்படாது. ஒன்றுப்படுவதற்கு பாஜக அனுமதியும் கொடுக்காது. இந்த நிலையில் தாய் இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு செல்வதுதான் மரியாதை என்பதால் நான் இதில் இணைந்திருக்கிறேன். இது போன்ற இணைப்புகள் இனி தொடர்ந்து நடக்கும்.
ஓ.பி.எஸ், டிடிவி, சசிகலா மற்றும் உங்களைப் போன்ற அதிருப்தியாளர்கள் யாருடனும் எடப்பாடி சமரசத்துக்கு இறங்கியே வரமாட்டார் எனும் முடிவுக்கு வந்துவிட்டீர்களா?
ஒருங்கிணைப்பு நடந்து கட்சி ஒற்றுமையாக இருந்திருந்தால் திமுகவும்- அதிமுகவும் போட்டி என்று களம் கடந்திருக்கும். ஆனால் இன்றைக்கு எடப்பாடி அதிமுகவைப் பிளவுப்படுத்தி இருக்கிறார். இதில் பெரும்பங்கு பாஜகவிற்கு இருக்கிறது. இதெல்லாம் தெரிந்தும்கூட எடப்பாடி ஏன் ஒன்றுமைக்கு மறுக்கிறார். ஒன்றுமையை கெட்டவார்த்தை என்று நினைக்கிறாரா என்று தெரியவில்லை. பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன்

எல்லோரையும் சேர்த்துக்கொண்டு முதலமைச்சர் ஆன பிறகு அவர்களைத் தூக்கிப்போடுகின்ற அரசியல்வாதிகளைக் கூட நாம் பார்த்திருப்போம். ஆனால் நானும் எனது கட்சியும் ஆட்சிக்கு வராவிட்டாலும் பரவாயில்லை, பிரிந்தவர்களைக் கட்சியில் சேர்க்க மாட்டேன் என்ற வன்மம் நிறைந்த அரசியல்வாதியாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. குறிப்பாக சொல்லப்போனால் அவருக்கு முதலமைச்சர் பதவியைக் கொடுத்த சசிகலா, இருக்கையில் அமரவைத்த தினகரன், அவரது ஆட்சிக்கு நான்கறை ஆண்டுகள் ஆதரவு கொடுத்துக் காப்பாற்றிய ஓபிஎஸ் போன்றவர்களைத்தான் அவர் கட்சியில் இணைத்துக்கொள்ள மாட்டேன் என்று சொல்கிறார்.
உதவியவர்களுக்கு எல்லாம் கெடுதல் செய்கிறார். ஆகவே இந்த இயக்கம் ஒன்றிணைவதற்கானச் சந்தர்ப்பம் இல்லை என்ற மனநிலைக்கு அதிமுக தொண்டர்கள் வந்துவிட்டார்கள். அதனால் ஸ்டாலின் அவர்களின் அரவணைப்பு ஆறுதலையும், நம்பிக்கையும் கொடுக்கின்ற காரணத்தால் இனி அதிமுகவில் இருந்து திமுகவை நோக்கி அதிமுகவைச் சேர்ந்தவர்களும், தொண்டர்களும் செல்வதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இன்றைக்கு அண்ணா அறிவாலயம் என்பது அதிமுக தொண்டர்களை அரவணைக்கக்கூடிய ஒரு அன்பு சரணாலயமாக மாறிக்கொண்டிருக்கிறது.

திமுக எதிர்ப்பை பேசிய உங்களைப் போன்றவர்கள் இப்போது திமுகவில் இணைகிறீர்கள். திமுக ஆட்சியின் மீதும் எக்கச்சக்க அதிருப்தி இருக்கிறதே. அதையெல்லாம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
திமுகவின் வெற்றி திமுக தொண்டர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது. 11.69 என்ற அளவில் பொருளாதார வளர்ச்சியைத் தந்திருக்கிறது திமுக ஆட்சி. ‘நெல்லுக்கும் உண்டு. நீருக்கும் நுரை உண்டு, புல்லிதழ் பூவிற்கும் முள் உண்டு’ என்று சொல்வார்கள். ஒரு ஆட்சியில் எதாவது ஒரு குறை இருக்கதான் செய்யும். அதனைப் பூதாகரப்படுத்திக்கொண்டு சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று சொல்வது அரசியல் கால்புணர்ச்சியே தவிர வேறு ஒன்றும் கிடையாது.
நீங்கள் விஜய்க்கு ஆதரவாக தொடர்ந்து கருத்துகளை வெளியிட்டுக் கொண்டிருந்தீர்களே? திமுக முகாமுக்கு சென்றுவிட்டதால் இனி விஜய்யை எதிர்க்க வேண்டி வருமே?
புதிதாக ஒரு கட்சியைத் தொடங்கக்கூடிய யாராக இருந்தாலும் நான் வாழ்த்துவேன். அவர்களுக்கும் வருங்காலம் நன்றாக அமைய வேண்டும் என்று சொல்வேன். ஒரு கச்சேரி நன்றாக இருக்க வேண்டும் என்று சொல்லி விசில் அடிக்கிறோம், கைத்தட்டுகிறோம் என்பதற்காக அந்த கச்சேரி மேடையில் ஏறி அமர்ந்து வாத்தியங்களை எடுத்து வாசிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

விஜய் ஒரு புதிய அரசியல் முனைவராக இருக்கும்போது அவரை நான் வாழ்த்துகிறேன். அதற்காக அவரது கட்சியில் இணையும் திட்டம் எல்லாம் எனக்கு இருந்தது இல்லை. எடப்பாடியின் பிளவுவாத அரசியலை எதிர்ப்பதற்கு விஜய் வருகிறார். அதிமுக, திமுக என்ற இரு துருவங்களை விட்டால் வேறு யாரும் இல்லை என்ற எண்ணம் உங்களுக்கு வேண்டாம் என்று எச்சரிப்பதற்காகத்தான் நான் விஜய்யை சில நேரங்களில் பாராட்டி பேசியிருந்தேன்.
திமுக-வை தேர்ந்தெடுத்தது ஏன்?
எடப்பாடி தன் கட்சியைத் தானே உடைத்து அதிமுகவை நாசப்படுத்தி இருக்கிறார். ஆட்சியையும் சிறப்பாக நடத்திக்கொண்டு, கட்சியையும் ஒற்றுமையாக வைத்துக்கொண்டு, கூட்டணியையும் எந்தவிதமான பிளவும் இல்லாமல் திரு. ஸ்டாலின் அவர்கள் முன்னெடுக்கக்கூடிய இந்த அரவணைப்பு அரசியல் மீது எனக்கு ஒரு மரியாதை உண்டு. அந்த அடிப்படையில் திமுக எனக்கு பிடித்த இயக்கமாக மாறிவிட்டது என்பதுதான் உண்மை.

கூட்டணி வலுவாக இருக்கிறதென கூறி 120 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் எடப்பாடி பிரசாரம் செய்துவிட்டாரே? தொண்டர்களின் மனநிலை என்னவாகத்தான் இருக்கிறது?
எடப்பாடி பொய் பேசுகிறார். மெகா கூட்டணி அமைப்போம் என்று கடந்தக் கூட்டணியில் சொன்னார். இப்போது ஒரு பெரியக் கட்சி அதிமுகவில் வந்து இணையப்போகிறது என்று சொன்னார். அது எந்தப் பெரிய கட்சி என்று எனக்கு தெரியவில்லை. அவர் கூட்டணிக்கு வரும் என்று எதிர்ப்பார்த்த பாமகவும் இரண்டாக உடைந்துபோய் இருக்கிறது. கூட்டணியில் இருந்த தேமுதிகவும் ஜனவரியில் தான் கூட்டணி குறித்து முடிவு செய்வோம் என்று விலகி நிற்கிறார்கள்.
சில கட்சிகளும் கூட்டணியில் இருந்து விலகி நிற்கிறது. கட்சியும் ஒற்றுமையுடன் இல்லை. அவர் தொண்டர்களை ஏமாற்றுகிறார். ஒற்றும் இல்லை உறவும் இல்லை என்று பாஜகவைச் சொல்லிவிட்டு ஈரோட்டில் சம்பந்தி வீட்டில் நடந்த அமலாக்கத்துறை சோதனைக்காகக் கூட்டணி வைத்துவிட்டு நான் நன்றிக்கடன் ஆற்றுகிறேன் என்று சொல்கிறார்.

உண்மையிலேயே இவர் பாஜகவிற்கு எப்போது நன்றிக்கடன் ஆற்றி இருக்க வேண்டும்? 2024 தேர்தலில் மோடி மூன்றாவது முறையாகப் பிரதமராக நிற்கும்போது அவர் ஆதரவைத் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் அப்போது எடப்பாடி ஆதரவு தெரிவிக்கவில்லை. அப்படியென்றால் அவர் சொல்லும் நன்றிக்கடன் பொய்தானே? இதுதான் உண்மை” என்று நம்மிடம் தெரிவித்தார் திமுகவில் இணைந்த மருது அழகுராஜ்.