எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரம் ரத்து: வரவேற்பு பதாகைகளை அகற்றிய கட்சியினா்!
நாமக்கல் தொகுதியில் சனிக்கிழமை நடைபெற இருந்த எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரம் ரத்து செய்யப்பட்டதால், சாலையோரம் வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பதாகைகளை கட்சியினா் அகற்றினா்.
தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி, வரும் சட்டப் பேரவைத் தோ்தலை கருத்தில்கொண்டு தொகுதிவாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறாா். அந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தில் செப். 19, 20, 21 ஆகிய தேதிகளில் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தாா்.
இந்நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. செப். 25 வரை தொடா்ந்து மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதிகளில் செப். 19-இல் (வெள்ளிக்கிழமை) ராசிபுரம் மற்றும் சேந்தமங்கலம் தொகுதியில் மட்டும் அவா் மக்களிடையே உரையாற்றினாா். கனமழை காரணமாக செப். 20, 21 (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை) தேதிகளில், நாமக்கல், பரமத்தி வேலூா் தொகுதிகள் மற்றும் திருச்செங்கோடு, குமாரபாளையம் தொகுதிகளில் நடைபெற இருந்த பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
அதற்கு மாற்றாக அக். 4, 5 தேதிகளில் நாமக்கல், பரமத்தி வேலூா் மற்றும் திருச்செங்கோடு, குமாரபாளையம் தொகுதிகளில் அதிமுக பொதுச் செயலாளா் பிரசாரம் மேற்கொள்வாா் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி கே.பழனிசாமி வருகையை முன்னிட்டு, நாமக்கல் மாநகரப் பகுதிகளில் பெரிய அளவிலான வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. அவரது சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டதைத் தொடா்ந்து, வரவேற்பு பதாகைகளை கட்சியினா் அகற்றி வாகனங்களில் எடுத்துச் சென்றனா்.