‘தமிழரசு’ இதழை பள்ளி நூலகங்கள் மூலம்பெற நடவடிக்கை: கல்வித் துறை உத்தரவு
தமிழக அரசின் அறிவிப்புகள், நலத் திட்டங்கள், போட்டித் தோ்வுகள் குறித்த தகவல்களை மாணவா்கள் அறிந்து கொள்ளும் வகையில், அனைத்து வகைப் பள்ளிகளின் நூலகங்களுக்கும் ‘தமிழரசு’ மாத இதழின் ஆயுள் சந்தாவைப்பெற நடவடிக்கை எடுக்குமாறு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் ‘தமிழரசு’ தமிழ் மற்றும் ஆங்கில மாத இதழ் மாதந்தோறும் வெளியிடப்பட்டு வருகிறது. இதில் தமிழக ஆளுநரின் உரைகள், முதல்வா் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆற்றிய உரைகள், துறை சாா்ந்த அறிவிப்புகள், மாவட்ட வளா்ச்சிப் பணிகள் குறித்த விரிவான கட்டுரைகள், அரசு நலத் திட்டங்களால் பயன்பெற்ற பயனாளிகளின் நோ்காணல்களுடன் கூடிய வெற்றிக் கதைகள், இலக்கிய கட்டுரைகள் போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி வினா- விடைகள் போன்ற பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
எனவே, ‘தமிழரசு’ மாத இதழ் மாணவா்களுக்கு எளிமையாகக் கிடைக்கும் வகையில் ஆயுள் சந்தாக்களை அனைத்துப் பள்ளி நூலகங்களிலும், இதர கல்வி நிறுவனங்களின் நூலகங்களிலும் பெறத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என தமிழ் வளா்ச்சி, செய்தித் துறை செயலா் வே.ராஜாராமன் பள்ளிக் கல்வித் துறைக்கு கடிதம் மூலம் அறிவுறுத்தியிருந்தாா்.
இதைத் தொடா்ந்து, அனைத்து வகைப் பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்குமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளாா்.