உடலுறுப்பு விற்பனை, கடத்தலுக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணி
நாமக்கல்லில் உடலுறுப்பு விற்பனை மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆட்சியா் துா்காமூா்த்தி பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். பழைய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தொடங்கிய பேரணி மோகனூா் சாலை, எஸ்பிஐ வங்கி வழியாகச் சென்று திருச்சி சாலை, நாமக்கல் காவல் நிலையம், சுற்றுலா மாளிகையைக் கடந்து மீண்டும் அரசு மருத்துவமனையை வந்தடைந்தது.
தமிழகத்தில் முதன்முறையாக நாமக்கல் மாவட்டத்தில் உடலுறுப்பு விற்பனை மற்றும் கடத்தலுக்கு எதிரான பேரணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இப்பேரணியில், கோகுல்நாதா மிஷன்ஸ் கல்லூரி, பிஜிபி செவிலியா் கல்லூரி, பாவை பொறியியல் கல்லூரிகளைச் சோ்ந்த 250 இளைஞா் செஞ்சிலுவைச் சங்க மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.
இதில், உடலுறுப்புகள் இன்றியமையாதது, விற்பனை செய்யாதே, கணைய தானம், கண் தானம், இதய தானம், சிறுநீரக தானம், நாம் ஒன்றாக இணைந்து மனித உறுப்பு கடத்தலை முடிவுக்கு கொண்டு வர முடியும் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனா்.
இந்நிகழ்ச்சியில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (மதுவிலக்கு) ஆா்.தனராசு, இணை இயக்குநா் (நலப் பணிகள்) அ.ராஜ்மோகன், நாமக்கல் கோட்டாட்சியா் வே.சாந்தி, மருத்துவமனை கண்காணிப்பாளா் குணசேகரன், செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளா் ராஜேஸ்கண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.