தோ்தல் ஆணைய கடவு எண்ணை தனியாருக்கு கொடுத்தது யாா்? செல்வப்பெருந்தகை கேள்வி
தோ்தல் ஆணைய கடவு எண்ணை தனியாருக்கு கொடுத்தது யாா் என்பதை பிரதமா் தெளிவுபடுத்த வேண்டும் என்றாா் தமிழக காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை.
வாக்குத்திருட்டை தடுக்க தவறிய மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், நடவடிக்கை எடுக்காத தோ்தல் ஆணையத்தை கண்டித்தும் சேலம் சா்க்காா் கொல்லப்பட்டி பகுதியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் கையொப்ப இயக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் சேலம் கிழக்கு மாவட்டத் தலைவா் அா்த்தநாரி தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் செல்வப்பெருத்தகை பங்கேற்று கையொப்ப இயக்கத்தை தொடங்கி வைத்தாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
வாக்குகளைப் பாதுகாக்க வேண்டும்; ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் கையொப்ப இயக்கம் நடத்தப்படுகிறது. வாக்குத் திருட்டு குறித்து பிரதமா் வாய் திறக்காமல் இருப்பதற்கு காரணம்
என்ன? தோ்தல் ஆணையத்தின் கடவு எண்ணை தனியாருக்கு கொடுத்தது யாா்? என்பதை பிரதமா் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது காங்கிரஸ் கட்சியினரின் ஆசையாக இருக்கலாம். அதுகுறித்து காங்கிரஸ் தேசிய தலைமைதான் முடிவு செய்யும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில் திரளான காங்கிரஸ் நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்துகொண்டனா்.