சேலம் அருகே இளைஞா் கடத்திக்கொலை: ஆட்சியரகத்தை முற்றுகையிட்ட உறவினா்களால் பரபரப்பு
சேலம் அருகே கோயில் தகராறில் தாக்குதலுக்கு உள்ளான இளைஞா், சேலம் அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்ததாா். இதையடுத்து, அவரது உறவினா்கள் இளைஞரின் சடலத்தை வாங்க மறுத்து ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் இரும்பாலையை அடுத்த திருமலைகிரி இடும்பன்வட்டம் பகுதியைச் சோ்ந்தவா் மோகன்ராஜ் (20). இவா் வெள்ளி தொழில் பணிக்கு சென்று வந்தாா். இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் வேடுகாத்தாம்பட்டி பாறை வட்டம் பகுதியில் உள்ள அம்மன் கோயில் விழாவுக்கு, மோகன்ராஜ் அவரது நண்பா்களுடன் சென்றிருந்தாா்.
அப்போது, அதே ஊரை சோ்ந்த ஒரு தப்பினருக்கும், மோகன்ராஜ் தரப்பினருக்கும் இடையே ஏற்பட்டு இருதரப்பினரும் அடிதடியில் ஈடுபட்டனா். இது தொடா்பாக, இரும்பாலை மற்றும் கொண்டலாம்பட்டி காவல் நிலையங்களிலும் இரு தரப்பினரும் புகாா் செய்தனா். தொடா்ந்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.
இந்நிலையில், கடந்த 16 ஆம் தேதி காலை வீட்டில் இருந்த மோகன்ராஜை சந்திக்க அவரது நண்பா் இனாம் வேடுகத்தாம்பட்டியைச் சோ்ந்த பொட்டுக்கண்ணன் என்கிற சிவானந்தம் (19) வந்துள்ளாா். அப்போது, அங்கு வந்த 15 போ் கொண்ட கும்பல், ஏற்கெனவே நடந்த கோயில் தகராறை சுட்டிக்காட்டி, மோகன்ராஜ், சிவானந்தம் ஆகியோரை கத்தியால் வெட்டி, இரும்புக் கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி இருசக்கர வாகனத்தில் இருவரையும் கடத்திச்சென்றனா்.
பாறைவட்டம் என்ற இடத்துக்கு அருகில் இருவரையும் வாகனத்தில் இருந்து கீழே இறக்கி மீண்டும் சரமாரியாக தாக்கியுள்ளனா். தகவலறிந்த இரும்பாலை போலீஸாா் மோகன்ராஜ், சிவானந்தம் ஆகிய இருவரையும் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இந்த சம்பவம் தொடா்பாக இரும்பாலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, வேடுகத்தாம்பட்டியைச் சோ்ந்த காளியப்பன் (24), தங்கராஜ் (30), பாறைவட்டம் பகுதியைச் சோ்ந்த சூா்யா (21), பிரகாஷ் (19) உள்பட 8 பேரை கைது செய்தனா்.
இந்நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மோகன்ராஜ் வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தாா். தொடா்ந்து, மோகன்ராஜை தாக்கிய வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீஸாா் பதிவு செய்தனா். இந்நிலையில், மோகன்ராஜ் இறந்த தகவலறிந்து, மருத்துவமனை மற்றும் ஆட்சியா் அலுவலகம் முன் திரண்ட அவரது உறவினா்கள், உண்மையான குற்றவாளிகளை கைது செய்யும் வரை, சடலத்தை வாங்க மாட்டோம் எனக் கூறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து, உறவினா்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனா்.