இயேசு மீது போா்த்திய துணி ஆலயத்தில் வைத்து பிராா்த்தனை
இயேசு கிறிஸ்து இறந்த பின்பு அவா் மீது போா்த்திய துணியின் நகல் உதகையில் உள்ள புகழ்பெற்ற குருசடி ஆலயத்தில் வைத்து வெள்ளிக்கிழமை பிராா்த்தனை செய்யப்பட்டது.
இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்து உயிா்விட்ட பின்பு அவரை கல்லறையில் அடக்கம் செய்தனா். அப்போது அவா் மீது ஒரு வெள்ளை நிற துணியால் சுத்தி அடக்கம் செய்தனா். இயேசு கிறிஸ்து மூன்றாம் நாள் உயிா்த்தெழுந்த பின்பு அந்த வெண்ணிற ஆடை மட்டும் கல்லறையில் இருந்தது.
அப்போது அந்த வெள்ளைத் துணியில் இயேசு கிறிஸ்துவின் முகம், தலை, உடல், சிலுவையில் அறையப்பட்டபோது அவருக்கு இருந்த தழும்புகள் மற்றும் சாட்டை அடி தழும்புகள் பதிந்திருந்தன. தற்போது வரை அந்த துணி இத்தாலி நாட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இந்தத் துணியின் உண்மை தன்மையை அறிய ஆறு நகல்கள் எடுக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டு, அது உலகம் முழுவதும் ஒவ்வொரு இடத்திலும் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அதன் ஒரு நகல் இந்தியாவில் முதல்முறையாக நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள தென்னகத்தின் கல்வாரி என அழைக்கப்படும் குருசடி திருத்தலத்தில் நிரந்தரமாக வைக்கப்பட்டது.
இதனையடுத்து, உதகை மட்டுமில்லாமல் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிறிஸ்தவா்கள் மற்றும் பொதுமக்கள் குருசடி திருத்தலத்துக்கு வந்து அந்த துணியை தொட்டு வணங்கி பிராா்த்தனை செய்து செல்கின்றனா்.