திருமணத்தை மீறிய உறவு: ரூ.2.1 கோடியை கொடுத்துவிட்டு திரும்பக் கேட்ட பெண் - நீதிம...
Gold Rate: இப்போது தங்கம் விலை பவுனுக்கு ரூ.85,120; புதிய உச்சம்! இன்னும் உயருமா? வாங்கலாமா? | FAQ
தங்கம் விலை தற்போது (இன்று மதியம் 3 மணி நிலவரப்படி) அதிரடியாக கிராமுக்கு ரூ.10,640 ஆகவும், பவுனுக்கு ரூ.85,120 ஆகவும் உயர்ந்துள்ளது.
தற்போது தங்கம் வாங்கலாமா... இப்படியே சென்றால் என்ன செய்வது என்ற ஏகப்பட்ட கேள்விகள் உங்களிடம் எழுந்திருக்கும். அதற்கான பதில் இதோ...
இன்றைய தங்கம் விலை என்ன?
இன்று காலை முதல் மதியம் 3 மணி வரை, தங்கம் கிராமுக்கு ரூ.10,500 ஆகவும், பவுனுக்கு ரூ.84,000 ஆகவும் விற்பனையாகி வந்தது.
தற்போது, கிராமுக்கு ரூ.10,640 ஆகவும், பவுனுக்கு ரூ.85,120 ஆகவும் உயர்ந்துள்ளது.

இன்று மட்டும் எத்தனை ரூபாய் உயர்வு?
இன்று ஒரே நாளில் மட்டும் தங்கம் கிராமுக்கு ரூ.210-உம், பவுனுக்கு ரூ.1,680-உம் உயர்ந்துள்ளது.
இரண்டு நாள்களில் தங்கம் எவ்வளவு ரூபாய்க்கு உயர்ந்துள்ளது?
நேற்று காலை முதல் தற்போது வரை தங்கம் விலையில் நான்கு முறை மாற்றம் நடந்துள்ளது.
நேற்று காலை தங்கம் கிராமுக்கு ரூ.10,360-க்கும், பவுனுக்கு ரூ.82,880-க்கும் விற்பனை ஆனது.
பின்னர், மதியம் 3 மணிக்கு மேல், கிராமுக்கு ரூ.10,430-க்கும், பவுனுக்கு ரூ.83,440-க்கும் விற்பனை ஆனது.
ஆக, நேற்று முதல் இப்போது வரை தங்கம் கிராமுக்கு ரூ.280-உம், பவுனுக்கு ரூ.2,240-உம் உயர்ந்துள்ளது.
தங்கம் விலை ஏன் இப்படி உயர்ந்து வருகிறது?
அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் இருந்து தொடர்ந்து வரும் அதிரடி அறிவிப்புகளும், அதிரடி நடவடிக்கைகளும் இதற்கு முக்கிய காரணங்கள் ஆகும்.
அடுத்ததாக, பொதுவாக, அமெரிக்க டாலரின் மதிப்பு இறங்குமுகத்தில் செல்லும்போது, தங்கம் விலை அதிகரிக்கும். இதுதான் இப்போதும் நடந்து வருகிறது.
அமெரிக்க கருவூலப் பத்திரங்களை விற்று தற்போது உலக நாடுகள் தங்கங்களை வாங்கி குவித்து வருகிறது. இதற்கு உலக நாடுகளுக்கு அமெரிக்க கருவூலப் பத்திரங்கள் மீது நம்பிக்கை இல்லாமல் போனதே முக்கிய காரணம்.
அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது. மேலும் நான்கு முறை வட்டி குறைப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. இதனால், முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளைத் தங்கத்தின் பக்கம் திருப்பி வருகின்றனர்.

உலக அளவில் பல நாடுகள் அரசியல் மற்றும் பொருளாதார பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றன.
தற்போது உலக நாடுகளுக்கு இடையே வர்த்தக பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது. இதுவும் மிக முக்கிய காரணம்.
தங்கத்தின் தேவை அதிகரித்துகொண்டேதான் இருக்கிறது. ஆனால், உலகில் இருக்கும் 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட தங்கம் தோண்டியெடுக்கப்பட்டுவிட்டது என்று கூறப்படுகிறது. அதனால், தேவைக்கு ஏற்ப, தங்கத்தின் சப்ளை இனி இருக்காது.
இந்தியாவைப் பொறுத்தவரை, அடுத்தடுத்து பண்டிகைகள், முகூர்த்தங்கள் வர உள்ளன. அதனால், தங்கம் வாங்க மக்கள் அதிக ஆர்வத்தைக் காட்டுவார்கள். இதுவும் தங்கத்தின் விலையை அதிகரிக்கும்.
ஜி.எஸ்.டி 2.0-ஆல் தங்கம் விலை குறையுமா?
2017-ம் ஆண்டு இந்தியாவில் ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது தங்கம் மீது 3 சதவிகித வரியும், செய்கூலி மீது 5 சதவிகித வரியும் விதிக்கப்பட்டது.
தற்போது மாறியுள்ள ஜி.எஸ்.டி 2.0-ல், தங்கத்தைப் பொறுத்தவரை எந்த மாற்றமும் இல்லை.
இப்போது தங்கம் வாங்கலாமா... வேண்டாமா?
பண்டிகை, முகூர்த்தம், பயன்பாடு... என அதுவும் அவசியமாக இருந்தால் மட்டும் ஆபரணத் தங்கமாக வாங்குங்கள். இல்லையென்றால், கோல்டு இ.டி.எஃப், பங்குச்சந்தை எனத் தங்கத்தில் முதலீடு செய்யலாம். இதில் செய்கூலி, சேதாரமாக இருக்காது. ஆக, பிற்காலத்தில் இந்த முதலீடுகளில் தங்கத்தின் விலைக்கு ஏற்ப கூடுமே தவிர... குறையாது.

தங்கத்தில் முதலீடு செய்ய தெரியாதா?
தங்கத்தில் முதலீடு செய்ய தெரியாது என்றால் கவலை வேண்டாம். நிதி ஆலோசர், மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்ட்ரிபியூட்டர், பங்குச்சந்தை நிபுணர் ஆகியோரின் உதவியை நாடலாம். ஆனால், அவர்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்துகொள்ளுங்கள்.
தங்கம் விலை இன்னும் உயருமா?
தற்போது இருக்கும் சர்வதேச சூழல்கள் தங்கம் விலை உயர்விற்குச் சாதகமாக உள்ளது. அதனால், தங்கத்தின் விலை உயர்வதற்கான வாய்ப்புகளே அதிகம்.
வெள்ளி விலை என்ன?
தற்போது வெள்ளி கிராமுக்கு ரூ.150-க்கு விற்பனை ஆகி வருகிறது.

வெள்ளியில் முதலீடு செய்யலாமா?
இப்போது இருக்கும் நிலவரப்படி, குறைந்தபட்சம் இந்த ஆண்டு இறுதிவரை வெள்ளி விலை உயர்வு இருக்கலாம். அதனால், அதில் முதலீடு செய்வதும் நல்லது தான்.