Gold Rate: தாறுமாறான தங்க விலை ஏற்றம், இந்தியர்கள் அதிகம் வாங்குவதுதான் காரணமா?
தங்கம் விலை
தங்கத்தின் விலை கடந்த ஓராண்டு காலத்தில் தாறுமாறாக உயர்ந்திருக்கிறது. சர்வதேச சந்தையில் ஓராண்டுக்கு முன்பு சுமார் 2600 அமெரிக்க டாலர்களாக இருந்த ஒரு அவுன்ஸ் (31 கிராம்) தங்கம் விலை தற்போது 3,700 டாலர்களைத் தொடவிருக்கிறது.
கடந்த ஆண்டு சென்னையில் ரூ.6695-ஆக இருந்த ஒரு கிராம் (22 காரட்) தங்கம் விலை, இப்போது ரூ.10,280-ஆக இருக்கிறது.
தங்கத்தின் விலை உயர உயர அதை வாங்குகிற மக்களின் கூட்டம் நகைக் கடைகளில் அதிகமாகவே பார்க்க முடிகிறது. முன்பு தங்கம் விலை குறைந்தால்தான் நகைக்கடைகளில் அதிகமான கூட்டம் இருந்தது. இப்போது விலை உயர்ந்தாலும் அதிகமான கூட்டம்தான் இருக்கிறது.
தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என்ன?
நம் மக்கள் அதிகமான அளவில் தங்கம் வாங்குவதுதான் தங்கம் விலை உயர்வுக்கு முக்கியமான காரணம் என்று நம்மில் பலரும் நினைக்கிறோம்.
இது முக்கியமான காரணமா என்று கேட்டால், இல்லை என்பதே சரியான பதில். அப்படியானால், முக்கியக் காரணம் என்று கேட்கிறீர்களா?

தங்கத்தின் விலை உயர்வுக்கு மிக முக்கியமான காரணம், உலக நாடுகள் பலவும் தங்கத்தை எக்கச்சக்கமாக வாங்கிக் குவிப்பதுதான்.
உலக நாடுகளில் பல அரசு வங்கிகள் முந்தைய காலத்தைவிட அதிகமான அளவில் தங்கத்தை வாங்கிக் குவிக்கின்றன.
தங்கம்: மூன்றாவது இடத்தில் இந்தியா
கடந்த ஆண்டில் போலந்து 89.5 டன் அளவுக்கு வாங்கிக் குவித்து உலக நாடுகளில் அதிகளவில் தங்கம் வாங்கிய நாடுகளில் முதலிடத்தில் இருக்கிறது.
துருக்கி 77.4 டன் என்கிற அளவில் தங்கத்தை வாங்கி இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
இந்தியா 72.6 டன் என்கிற அளவில் தங்கத்தை வாங்கி மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

கடந்த ஜூன் மாத நிலவரப்படி, இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருக்கும் தங்கம் 880 டன் ஆகும். இதன் மதிப்பு 93 பில்லியன் டாலர் ஆகும்.
ஆனால், இந்தியாவின் தங்கக் கையிருப்பை சீனாவின் தங்கக் கையிருப்போடு ஒப்பிட்டுப் பார்த்தால், மிக மிகக் குறைவாகும்.
சீன மத்திய வங்கி கிட்டத்தட்ட 2,298.5 டன் அளவுக்குத் தங்கத்தை வைத்திருக்கிறது. இதன் மதிப்பு 242.9 பில்லியன் டாலர் ஆகும்.
நம் மக்கள் கில்லாடிகள்
ஆதிகாலம் முதல் தங்கம்தான் அதிக மதிப்பு வாய்ந்ததாக இருந்துவந்தாலும், கடந்த 50 ஆண்டுகளில் உலக அளவில் அமெரிக்க டாலர்தான் மிக அதிகமான மதிப்பு கொண்டதாக இருந்தது.
தங்கம் அமெரிக்க டாலரின் மதிப்பு மெதுவாகக் குறைந்து, தங்கத்தின் மதிப்பு மீண்டும் உயரத் தொடங்கி இருக்கிறது.
முக்கியமாக, அமெரிக்க டாலரைப் பெருமளவில் வைத்திருந்த சீனா, அந்த டாலர்களை விற்றுவிட்டு, தங்கத்தை வாங்கிக் குவிக்க ஆரம்பித்திருக்கிறது.

உலக நாடுகள் இப்போதுதான் தங்கம் வாங்கிக் குவிக்க ஆரம்பித்திருந்தாலும், நம் மக்கள் தங்கத்தின் அருமை பெருமையை அறிந்து, ஆதிகாலத்திலேயே வாங்கிக் குவித்திருப்பதைப் பார்க்க ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
இந்தியாவின் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டால், உலகின் வேறு எந்த நாட்டு மக்களும் இவ்வளவு தங்கத்தை வைத்திருப்பார்களா என்பது சந்தேகமே! அந்த வகையில் நம் மக்கள் கில்லாடிகள்தான்!
Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4
வணக்கம்,
Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.
கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...