ஏர் இந்தியா விபத்து: போயிங், ஹனிவெல் நிறுவனங்கள் மீது வழக்கு!
அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் போயிங் மற்றும் ஹனிவெல் நிறுவனங்கள் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து லண்டனுக்கு கடந்த ஜூன் 12-ஆம் தேதி வெளிநாட்டினா் உள்பட 230 பயணிகள், 12 ஊழியா்களுடன் புறப்பட்ட ஏா் இந்தியா விமானம், ஒரு நிமிஷத்துக்குள்ளாகவே அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தில் மோதி, வெடித்துச் சிதறியது.
இந்த விபத்தில் ஒரேயொரு பயணி தவிர விமானத்தில் இருந்த 241 பேரும், விடுதி வளாகத்தில் 19 பேரும் பலியாகினர். இந்த விபத்து தொடர்பாக விமானப் போக்குவரத்து அமைச்சகம் நடத்திய முதல்கட்ட விசாரணையில், எரிபொருள் ஸ்விட்ச் அணைக்கப்பட்டிருந்ததே விபத்து ஏற்படக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்த நான்கு பேரின் குடும்பத்தினர், அமெரிக்காவின் டெலாவேர் மாகாண நீதிமன்றத்தில் போயிங் மற்றும் ஹனிவெல் நிறுவனங்களுக்கு எதிராக மனு அளிக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில், “தவறான எரிபொருள் ஸ்விட்ச் வடிவமைப்பால் இந்த விபத்து ஏற்பட்டதாகவும், அபாயங்கள் குறித்து அறிந்திருந்தும் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், போயிங் மற்றும் ஹனிவெல் நிறுவனங்கள் நஷ்டஈடு வழங்க உத்தரவிடக் கோரப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை விரைவில் நீதிபதியின் முன் பட்டியலிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, ஏர் இந்தியா விமான விபத்தில் மீட்கப்பட்ட கருப்புப் பெட்டி, விமானிகள் அறை குரல் பதிவு உள்ளிட்டவற்றின் முழுமையான அறிக்கையை உடனடியாக வெளியிட உத்தரவிடக் கோரி தில்லி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.