Good Bad Ugly: "கண்டிப்பாக சிம்ரன் மேம் மாதிரி என்னால பண்ணாவே முடியாது!'' - ப்ரியா வாரியர் ஷேரிங்ஸ்
அஜித்தின் 'குட் பேட் அக்லி' திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. ஃபேன் பாயாக ஆதிக் அஜித்தை வைத்து பல காட்சிகளில் மாஸ் காட்டியிருக்கிறார். அதிலும் படத்தில் வின்டேஜ் பாடல்களுக்கு இடையில் இடம்பெற்றிருக்கும் சண்டை மற்றும் நடனக் காட்சிகள் படத்தின் ஹைலைட் எனச் சொல்லலாம்.
அப்படி `தொட்டு தொட்டு சுல்தானா' பாடலுக்கு நடனமாடி மீண்டும் டிரெண்டிங்கில் ரேங்க் அடித்திருக்கிறார் ப்ரியா வாரியர். இந்த டிரெண்ட் இவருக்கு புதிதல்ல.

கடந்த 2018-ம் ஆண்டு 'ஒரு அடார் லவ்' திரைப்படத்தில் ஒரு கண் சிமிட்டல் காட்சியின் மூலம் பலர் இளைஞர்களின் க்ரஷாக உருவெடுத்திருந்தார். தற்போது 'குட் பேட் அக்லி' மூலமாக தமிழ் மக்களுக்கு இன்னும் ஆழமாக பரிச்சயமாகியிருக்கிறார் ப்ரியா வாரியர்.
படத்துக்கு வாழ்த்துச் சொல்லி பலக் கேள்விகளைக் கேட்டோம். சிரித்த முகத்துடன் அனைத்து கேள்விகளுக்கு அழகு தமிழிலேயே பதில்களை அடுக்கினார்.
தமிழ் சினிமாவுல இப்படியான ஒரு அடையாளம்
ப்ரியா வாரியர் பேசுகையில், " மக்களுடைய வரவேற்பு பெரும் மகிழ்ச்சியைக் கொடுக்குது. 2018-க்குப் பிறகு மக்கள் என்னை இப்படியான வழிகள்ல அடையாளப்படுத்துறாங்க.
தியேட்டர்ல என்னுடைய காட்சிகள் வரும்போது மக்கள் கொண்டாடுறாங்க. முக்கியமாக, தமிழ் சினிமாவுல இப்படியான ஒரு அடையாளம் கிடைச்சதுல ரொம்பவே சந்தோஷம்.
நான் சிம்ரன் மேம் டான்ஸ் ஆடின பாடலை ரீகிரியேட் பண்ணி டான்ஸ் பண்ணப் போறேன்னு சொன்னதும் அதை நான் பிரஷராக எடுத்துக்கக்கூடாதுனு நினைச்சேன். என்னால கண்டிப்பாக சிம்ரன் மேம் பண்ணின மாதிரி பண்ணவே முடியாது.

இதுல கம்பாரிஷன்ங்கிற விஷயம் இருக்கவே கூடாது. என்னால முடிஞ்ச அளவுக்கு அவங்களுக்கு டிரிப்யூட் கொடுக்கணும்ங்கிறதுதான் என்னுடைய முக்கிய எண்ணமாக இருந்துச்சு. மேம் பண்ண மாதிரியே க்யூட்டாக என்னோட ஸ்டைல்ல பண்ணிடனும்னு திட்டமிட்டு பண்ணினேன்.
படம் வெளியானதுக்குப் பிறகு அந்தக் காட்சி தொடர்பானதை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில போட்டிருந்தேன்.
அந்த ஸ்டோரியை சிம்ரன் மேம் பார்த்துட்டு எனக்கு ரிப்ளை பண்ணினாங்க. அவங்களுக்கு என்னுடைய பெர்பாமென்ஸ் பிடிச்சருந்ததாக மெசேஜ்ல என்கிட்ட சொன்னாங்க. காத்திருந்தால் சரியான விஷயங்கள் சரியான நேரத்துல நம் கைகூடி வரும்னு நான் நம்புறேன்.
இந்தப் படத்துல எனக்கு சில ஸ்டண்ட் காட்சிகள் இருந்தது. அதுதான் எனக்கு கொஞ்சம் சவாலான விஷயமாக இருந்துச்சு.

நான் முதல்ல பயந்தேன். சுப்ரீம் சுந்தர் மாஸ்டர் எனக்கு நம்பிக்கைக் கொடுத்தாரு. அப்படி ஒரு காட்சியில அப்படியே பின்னாடி விழுகணும். அந்த நேரத்துல முகத்தை கீழ வைக்கக்கூடாது.
ஆனால், நான் முகத்தை வச்சிட்டேன். அந்த ஸ்டன்ட் காட்சியை ஸ்பெயின்ல முடிச்சிட்டு வந்ததுக்குப் பிறகு இங்க பிசியோதெரபிக்கு நான் போக வேண்டியதாக இருந்தது. கொஞ்சம் எதிர்பார்க்காத பிரச்னைகள் வந்தது.
இனிமேல் நான் கவனமாக இருந்திடுவேன். " என்றவர், அர்ஜூன் தாஸ் பற்றி, " நாங்க ரெண்டு பேரும் பயங்கரமாக ஃபன் பண்ணீட்டுதான் இருப்போம்.
அவர் இரட்டை வேடத்துல நடிக்கிறதுனால அவர் பரபரப்பாக இருப்பார். சொல்லப்போனால், ஒரு ஷாட் முடிச்சிட்டு உடனடியாக மற்றுமொரு கதாபாத்திரத்துக்கு தயராகுறதுக்கு வேகமாக போயிடுவார். ஸ்பெயின்ல பயங்கரமான குளிர் இருக்கும்.
என்னால குளிர் தாங்க முடியாமல் எப்போதும் ஜாக்கெட் பயன்படுத்திட்டு இருந்தேன். ஆனால், அவர் சாட்டின் சட்டைகளைப் போட்டுட்டு அவர்பாட்டுக்கு இருப்பார்.
அர்ஜூஸ் தாஸ் அவருடைய காட்சிகள் முடிச்சதும் என்னை சிரிக்க வைக்கிறதுக்கு எதாவது விஷயங்கள் பண்ணீட்டே இருப்பார். " எனச் புன்முறுவல் காட்டியவரிடம் அஜித் இருக்கும் படப்பிடிப்பு தளம் பற்றி கேட்டோம்.

அதற்கு அவர், "அஜித் சாரோட நடவடிக்கைல அவர் ஒரு சூப்பர் ஸ்டார்ங்கிற எண்ணமே தெரியாது. எல்லோருமே சமமானவங்கதான்னு அவர் நினைக்கிற விஷயம்தான் அவருடைய ஸ்பெஷல். நான் திரைப்படம் வெளியான அன்னைக்கு சென்னையில இருந்தேன்.
இயக்குநர் ஆதிக்கும் சென்னை திரையரங்குகள்ல படம் பார்க்கச் சொன்னாரு. நான் கேரளாவின் திரிச்சூர் பகுதியில இருந்து வர்றேன். அங்க திரிச்சூர் பூரம்னு ஒரு கொண்டாட்டம் நடக்கும். அந்த மாதிரிதான் படத்தோட முதல் காட்சி இருந்தது." என உற்சாகத்துடன் முடித்துக் கொண்டார்.