Google Top 10: இந்தியர்கள் அதிகம் தேடிய உணவு ரெசிப்பி - ஆச்சர்யம் தரும் கூகுள் லிஸ்ட்!
ஒவ்வொரு ஆண்டும் கூகுள் தளத்தில் மக்களால் அதிகம் தேடப்பட்ட விவரங்களை அந்த ஆண்டின் இறுதியில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டு உள்ளது கூகுள் நிறுவனம். அந்த வகையில் கூகுளில் 2024 ஆம் ஆண்டில் இந்தியர்கள் அதிகம் தேடிய உணவு ரெசிப்பி குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன. புதிய புதிய உணவு வகைகளை தெரிந்துகொண்டு கூகுளில் தேடி அதற்கான செய்முறைகளையும் அறிந்து சமைப்பது என்பது பெரும்பாலான மக்களின் பழக்கமாக மாறியுள்ளது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டில் இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட 10 உணவு வகைகளை பட்டியலிட்டு உள்ளது கூகுள். அந்த உணவு வகைகளை குறித்து பார்ப்போம்.
போன் ஸ்டார் மார்ட்டினி என்னும் பெயரில் அழைக்கபடும் இந்த ட்ரிங் (Drink) முதல் இடத்தில் உள்ளது. முதலில் இந்த டிரிங் (Drink) மாவெரிக் மார்ட்டினி என்னும் பெயரில் அழைக்கப்பட்டது. வெண்ணிலா வோட்கா, பேஷன் ஃப்ரூட், எலுமிச்சை சாறு, வெண்ணிலா சிரப், ஐஸ் க்யூப்ஸ் ஆகியவை கொண்டு நன்கு கலக்கப்பட்டு இந்த ட்ரிங்க் தயாரிக்கப்படுகிறது. இந்த ட்ரிங்க் 2024 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட உணவு வகைகளில் முதலிடத்தை பிடித்துள்ளது.
இந்தியர்களுக்கு தங்களுடைய உணவுகளுடன் ஊறுகாய் சேர்த்து சாப்பிடுவது என்பது வழக்கமாக உள்ளது. அதுவும் மாங்காய் ஊறுகாய் என்றால் பெரும்பாலானோருக்கு பார்க்கும் பொழுதே நாவில் எச்சில் ஊரும் அளவிற்கு மிகவும் பிடித்த ஊறுகாயாக உள்ளது. புளிப்பும் காரமும் சேர்ந்து சாப்பிடும் உணவிற்கு மேலும் சுவையூட்டுவதாக உள்ளது. மாங்காய் ஊறுகாய் செய்வதற்கான செய்முறைகளை ஒவ்வொரு குடும்பமும் அவர்களுக்கென பிரத்தியேகமாக ஒரு முறையினை வைத்துள்ளனர். அதன்படி அவர்கள் பாரம்பரியமாக இந்த உணவை தயாரிக்கின்றனர். இந்த மாங்காய் ஊறுகாய் உணவு 2024 ஆம் ஆண்டில் இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட உணவு வகைகளில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
தனியா பஞ்சுரி என்பது வட இந்தியாவில் கோயில்களில் தரும் பிரசாத உணவு வகையாக உள்ளது. கிருஷ்ணரின் ஜென்மாஷ்டமி அன்று பிரசாதமாக தனியா பஞ்சிரி (Dhaniya Panjiri) வழங்கப்படுகிறது. வறுத்த தனியாவை அரைத்து அதனுடன் சர்க்கரை மற்றும் நெய் ஆகியவை சேர்க்கப்பட்டு இந்த உணவு வகை தயாரிக்கப்படுகிறது. இந்த உணவு வகை விரதம் இருப்பவர்களுக்கு விரதத்தை முடிக்கும் போது தரப்படுகிறது. இந்த தனியா பஞ்சிரி உணவு 2024 ஆம் ஆண்டில் இந்தியர்களால் கூகுளில் அதிகம் தேடப்பட்ட உணவு வகைகளில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
தெலுங்கு மற்றும் கன்னட புத்தாண்டு தினத்தை கொண்டாடும் நாளான உகாதி நாளில் இந்த உகாதி பச்சடி செய்யப்படுகிறது. புத்தாண்டை வரவேற்கும் விதமாக தெலுங்கு, கன்னட மற்றும் மகாராஷ்டிரா மக்களிடையே இந்த உணவு வகை தயாரிக்கப்படுகிறது. இதில் உப்பு, மிளகு தூள், மாங்காய், தேங்காய், வெல்லம், புளி தண்ணீர், வேப்பம்பூ ஆகியவை கொண்டு தயாரிக்கப்படுகிறது.
இந்த உகாதி பச்சடியில் இனிப்பு, புளிப்பு, கசப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு என ஆறு சுவைகளும் அடங்கி உள்ளது. அந்த ஆறு சுவைகள் வாழ்க்கையில் ஏற்படும் ஆறு வகையான உணர்வுகளான மகிழ்ச்சி, துக்கம், பயம், ஆச்சரியம், கோபம் மற்றும் வெறுப்பு ஆகியவற்றை உணர்த்துவதாக அமைந்துள்ளது என மக்கள் நம்புகின்றனர். இந்த உகாதி பச்சடி உணவு 2024 ஆம் ஆண்டில் இந்தியர்களால் கூகுளில் அதிகம் தேடப்பட்ட உணவு வகைகளில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.
சர்னாமிர்த் என்று அழைக்கப்படும் இந்த உணவு ஒரு வகையான பஞ்சாமிர்தம் ஆகும். இதில் பால், தயிர், தேன், சர்க்கரை மற்றும் நெய் ஆகிய ஐந்து பொருட்களை சேர்த்து செய்யப்படுகிறது. தேவைக்கு ஏற்றார் போல் இதில் துளசி, குங்குமப்பூ, உலர் பழங்கள் சேர்க்கப்படுகின்றன. இந்தியா முழுவதும் பல்வேறு பெயர்களால் அறியப்படும் இந்த உணவு வகை பஞ்சாமிர்த வகையாகும். பல பகுதிகளில் இந்துக்களின் புனித உணவாகவும் இந்த உணவு இருக்கிறது. இந்த சர்னாமிர்த் உணவு 2024 ஆம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட உணவு வகைகளில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.
எமா தட்ஷி என்பது பூட்டான் நாட்டின் தேசிய உணவாகும். இதில் மிளகாய், வெங்காயம், சீஸ் ( Cheese), வெஜிடபிள் ஆயில் (Vegetable Oil), உப்பு ஆகிய பொருட்களை வைத்து இந்த உணவு வகை தயாரிக்கப்படுகிறது. பூட்டான் உணவு வகைகளில் மிகவும் காரசாரமான உணவு வகையாக இந்த எமா தட்ஷி உள்ளது. இந்த எமா தட்ஷி 2024 ஆம் ஆண்டில் இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட உணவு வகைகளில் ஆறாம் இடத்தில் உள்ளது.
சிலருக்கு காபி (Coffee) இல்லாமல் காலை நேரம் என்பது விடிவதே இல்லை. அந்த அளவிற்கு காபி என்பது பெரும்பாலானோருக்கு பிடித்தமான ஒன்றாக உள்ளது. பிளாட் ஒயிட் ... உயர்தரமான பாலில் லேசான நுரையை மேலே மிதக்க விடுவது இந்த உணவின் சிறப்பம்சமாகும். இந்த உணவு வகை காபியில் தான் செய்யப்படுகிறது. இந்த உணவு வகை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் தான் முதலில் தோன்றியதாக கூறப்படுகிறது. இந்த பிளாட் ஒயிட் உணவு 2024 ஆம் ஆண்டில் இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட உணவு வகைகளில் ஏழாவது இடத்தை பெற்றுள்ளது.
இந்த உணவு வகை ஹோலி பண்டிகை அன்று செய்யப்படுகிறது. பொதுவாக கஞ்சி என்பது புளிக்க வைக்கப்பட்ட ஒரு பானம் ஆகும். தண்ணீருடன் கேரட், பீட்ரூட், பாசி பருப்பு, பெருங்காயம் ஆகியவை கொண்டு தயாரிக்கப்படுகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் புரோபயாடிக் நிறைந்த இந்த உணவு செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. புளிப்பு சுவையுடன் கூடிய அதிக சத்தும் நிறைந்த பண்டிகை கால உணவாக இந்த உணவு உள்ளது. இந்த கஞ்சி உணவு 2024 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட உணவு வகைகளில் எட்டாம் இடம் பெற்றுள்ளது.
சங்கர்பாலி என்று அழைக்கப்படும் இந்த உணவு தமிழ்நாட்டில் கலகலா என்றும் அழைக்கப்படுகிறது. இந்த உணவு ஒரு மொறுமொறுப்பான தின்பண்டமாக (Snacks) உள்ளது. இது சக்கரப்பரா மிட்டாய் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த உணவு மைதா மாவில் செய்யப்படுகிறது. மக்களின் தேவைக்கேற்ப இனிப்பாகவும், காரமாகவும், உவர்ப்பாகவும் சமைத்து சாப்பிடுகின்றனர். இந்த சங்கர்பாலி உணவு வகை 2024 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட உணவு வகைகளில் ஒன்பதாவது இடத்தை பெற்றுள்ளது.
தென்னிந்தியாவில் குறிப்பாக கேரளா மற்றும் ஆந்திராவில் சம்மந்தி என்று அழைக்கப்படும் இந்த உணவு வகை மிகவும் பிரபலமானது. இது துருவிய தேங்காய், காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம், புளி மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் இல்லாமல் அரைக்கப்படுகிறது. இதனை தேவைக்கேற்ப இட்லி மற்றும் தோசையுடன் சேர்த்து சாப்பிடுகின்றனர். மேலும் இதில் சுவையூட்ட இஞ்சி, கருவேப்பிலை, மற்றும் பச்சை மிளகாய் ஆகியவை தேவைக்கேற்ப சேர்க்கப்படுகின்றன. இந்த சம்மந்தி உணவு 2024 ஆம் ஆண்டு அதிகம் தேடப்பட்ட இந்திய உணவு வகைகளில் பத்தாவது இடத்தைப் பெற்றுள்ளது.
நீங்கள் இந்த ஆண்டில் கூகுளில் தேடி சமைத்த ஒரு உணவை கமெண்டில் சொல்லுங்களேன்..!