திண்டுக்கல்: மருத்துவமனையில் தீ விபத்து! 5-க்கும் மேற்பட்டோர் பலி!
Gukesh: 'உலக சாம்பியனான குகேஷ்!' - டிங் லிரனை எப்படி வீழ்த்தினார்?
சிங்கப்பூரில் நடந்து வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிச்சுற்று ஆட்டம் நடந்து முடிந்திருக்கிறது. குகேஷ் இந்தச் சுற்றை வென்று உலக சாம்பியன் ஆகியிருக்கிறார்.
சிங்கப்பூரில் நடந்து வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் தொடங்குவதற்கு முன்பாக குகேஷ்தான் இந்தத் தொடரின் ஃபேவரைட்டாக இருந்தார். கேரி கேஸ்பரோவ், மேக்னஸ் கார்ல்சன் போன்ற ஜாம்பவான்களே குகேஷ்தான் இந்த உலக செஸ் சாம்பியன்ஷிப்பை வெல்வார் எனக் கணித்திருந்தனர். இயான் நெப்போம்னியாச்சிக்கு எதிராக ஆடி உலக சாம்பியன் பட்டத்தைக் கடந்த ஆண்டு வென்ற பிறகு லிரனின் பார்ம் மோசமானது. நிறையப் போட்டிகளில் தோல்வியைத் தழுவியிருந்தார்.
சமீபத்தில் செஸ் ஒலிம்பியாடில் சீனாவுக்கும் இந்தியாவுக்குமான போட்டியின்போது குகேஷூக்கு எதிரான போட்டியில் லிரன் ஆடாமல் ஓய்வையே எடுத்திருந்தார். மனரீதியாகத் தான் அயர்ச்சியாக இருப்பதாக லிரனே வெளிப்படையாகப் பேசினார். இதனால் குகேஷ்தான் வெல்லப்போகிறார் என்பதுதான் அனைவருடைய கணிப்பாகவும் இருந்தது. ஆனால், குகேஷ் லிரனை அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவர் கட்டாயம் சவாலளிப்பார் என நம்பினார். அதற்கேற்ற வகையில் தயாரும் ஆகியிருந்தார்.
குகேஷ் எதிர்பார்த்ததுதான் நடந்தது. லிரன் கடும் சவாலளித்தார். முதல் சுற்றிலேயே லிரன் வென்று முன்னிலையைப் பெற்றார். இரண்டாவது சுற்று டிரா ஆனது. மூன்றாவது சுற்றில்தான் குகேஷ் மீண்டு வந்தார். வெற்றியைப் பெற்றார். இதன்மூலம் இருவரும் தலா 1.5-1.5 புள்ளிகளோடு போட்டியைச் சமநிலைக்குக் கொண்டு வந்தனர். இதன்பிறகான 7 சுற்றுகளுமே டிராவில் முடிந்தது. 11 வது சுற்றில் வெள்ளைக் காய்களுடன் ஆடிய குகேஷ் திறம்பட அந்தப் போட்டியை வென்று முன்னிலை பெற்றார். ஆனால், 12 வது சுற்றிலேயே லிரனும் கம்பேக் கொடுத்தார்.
'நான் நெப்போம்னியாச்சிக்கு எதிரான போட்டியிலும் இப்படித்தான் பின்னடைவைச் சந்தித்திருந்தேன். ஆனால், இதேமாதிரியே 12 வது சுற்றில் வென்று கம்பேக் கொடுத்திருப்பேன். எனக்கு நம்பிக்கையிருக்கிறது' எனப் பேசியிருந்தார். சொன்னதைப் போலவே 12 வது சுற்றை வென்றார் லிரன். இதன்மூலம் ஆட்டம் மீண்டும் 6-6 எனச் சமநிலைக்கு வந்தது. நேற்று (டிசம்பர் 11) நடந்த 13 வது சுற்றும் டிராவில் முடிந்தது. இந்நிலையில், இறுதிச்சுற்றான இன்றைய சுற்றின் மீது பெரும் எதிர்பார்ப்பு தொற்றிக் கொண்டது.
கிட்டத்தட்ட 4 மணி நேரத்துக்கும் மேல் நடந்த இந்தச் சுற்றில் வெற்றியைப் பெற குகேஷ் எவ்வளவோ போராடினார். இறுதியில் 58 நகர்வில் வெல்லவும் செய்தார்.
இதன்மூலம் உலக சாம்பியனான மிக இளம் வயது வீரர் எனும் பெருமையை குகேஷ் பெற்றிருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...