Inbox 2.0 Eps 21: Harris Jayaraj இசையமைத்த விண்ணைத்தாண்டி வருவாயா! | Cinema Vika...
Jay Shah : `ஐ.சி.சியின் தலைவராக ஜெய்ஷா!' - முன் நிற்கும் சவால்கள் என்னென்ன?
கிரிக்கெட் உலகின் முக்கியப் பொறுப்பில் அமர்ந்திருக்கிறார் ஜெய் ஷா. ஆம், நேற்று முதல் ஐ.சி.சியின் சேர்மன் பதவியை ஏற்றிருக்கிறார். இதுவரை பிசிசிஐயின் செயலாளராக இருந்து இந்திய கிரிக்கெட்டைக் கவனித்தவர், இனி உலகக் கிரிக்கெட்டை நிர்வகிக்கப் போகிறார். அவர் முன் இருக்கும் சவால்கள் என்ன?
ஐ.சி.சியின் இயக்குனர் குழு உறுப்பினர்கள் நாமினேட் செய்துதான் ஒரு சேர்மனை தேர்ந்தெடுக்க முடியும். ஜெய் ஷாவுக்கு ஐ.சி.சியின் இயக்குனர் குழுவின் அத்தனை உறுப்பினர்களுமே வாக்களித்தார்கள். அவரை எதிர்த்து நிற்க ஆளே இல்லை. ஒருமித்த கருத்தோடு அன்அப்போஸ்ட்டாகவே ஜெய் ஷா ஐ.சி.சியின் சேர்மனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஜெய் ஷாவின் முன் நிற்கும் முதல் சவால் சாம்பியன்ஸ் டிராபியை நடத்தி முடிப்பதுதான். பாகிஸ்தானுக்கு இந்தியா வந்தே ஆக வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்ட் அடம்பிடிக்கிறது. என்ன ஆனாலும் பாகிஸ்தானுக்கு மட்டும் செல்லமாட்டோம் என பிசிசிஐ அடம்பிடிக்கிறது. பிப்ரவரி மாதம் தொடங்கவிருக்கும் இந்த சாம்பியன்ஸ் டிராபிக்கான போட்டி அட்டவணையை கடந்த நவம்பர் 11 ஆம் தேதியே வெளியிடுவதாக இருந்தார்கள்.
பாகிஸ்தான் கிரிக்கெட் போர்ட், பிசிசிஐ என இருதரப்பும் முறுக்கிக்கொண்டு நின்றதால் ஐ.சி.சி இன்னமும் அட்டவணையை வெளியிடவே இல்லை. 'ஹைப்ரிட் மாடல்' க்கு பாகிஸ்தான் கிரிக்கெட் போர்ட் ஒத்துக்கொண்டதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.
அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இப்படியொரு கட்டத்தில்தான் ஜெய் ஷா ஐ.சி.சி க்கு சேர்மன் ஆகியிருக்கிறார். இதுவரை இந்தியாவின் குரலாக ஒலித்தவர் இனி இருதரப்புக்கும் பாதகம் இல்லாமல் நடந்துகொள்ள வேண்டும். அரசியல் பின்னணி கொண்ட ஜெய் ஷா அப்படி இருதரப்புக்கும் நியாயமாக நடந்துகொள்வாரா எனும் சந்தேகம் அனைவருக்குமே இருக்கிறது.
ஐ.சி.சி சேர்மனாக பதவியேற்கப் போகிறேன் என ஜெய்ஷா X தளத்தில் அறிவித்த போதே டெஸ்ட் கிரிக்கெட்டை மேம்படுத்தும் விவகாரங்களில் கவனம் செலுத்துவேன் என்றார். இது மிக முக்கியமான ஸ்டேட்மென்ட். ஏனெனில், டெஸ்ட் கிரிக்கெட்டை வளப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரே நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், இது நடத்தப்படும் பார்மட்டின் மீது நிறைய விமர்சனங்கள் இருக்கிறது. ஒரே ஒரு இறுதிப்போட்டியாக இல்லாமல் மூன்று இறுதிப்போட்டிகளை நடத்த வேண்டும் என இந்தியாவே கடந்த காலங்களில் கோரிக்கை வைத்திருக்கிறது. மேலும், இப்போதைய பார்மட் படி அதே டாப் 4 அணிகள்தான் மாறி மாறி இறுதிப்போட்டிக்குத் தகுதிப்பெறுகின்றன. ஆக, இந்த வடிவத்தை விடுத்து மற்ற ஐ.சி.சி தொடர்களைப் போல ரவுண்ட் ராபின் முறையில் போட்டிகளை நடத்த வேண்டும் எனும் பேச்சும் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. டெஸ்ட் போட்டிகளில் பயன்படுத்தப்படும் பிட்ச் சார்ந்தும் தெளிவான வழிகாட்டுதல்களை ஐ.சி.சி கட்டாயம் அறிவிக்க வேண்டும்.
ஜெய் ஷா குறிப்பிடுவதைப் போலவே கிரிக்கெட் இப்போது ஒரு 'Transforming' காலக்கட்டத்தில் இருக்கிறது. சர்வதேச கிரிக்கெட்டைக் கடந்து லீக் போட்டிகள் முக்கிய இடத்தைப் பிடித்து வருகின்றன. வருடம் முழுவதும் எதோ ஒரு நாட்டில் எதோ ஒரு டி20 லீக் தொடர் நடந்துகொண்டே இருக்கிறது. இந்த டி20 லீகுகளில் மட்டுமே கவனம் செலுத்தும் பொருட்டு சர்வதேச கிரிக்கெட்டை வீரர்கள் துறக்கும் சம்பவமும் அரங்கேறத் தொடங்கியிருக்கிறது. வருங்காலத்தில் இந்த எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான் செல்லும். சர்வதேச கிரிக்கெட்டே ஆடாமல் வெறுமென லீக் போட்டிகளில் மட்டுமே சர்வதேச கிரிக்கெட் வீரர்களை விட அதிகம் புகழை எட்டப்போகிறவர்கள் விரைவிலேயே உருவாகுவார்கள். கேட்பதற்கு கற்பனை போன்று இருந்தாலும் அந்த நிலையை விரைவிலேயே எட்டுவோம். ஆக, சர்வதேச கிரிக்கெட்டின் மவுசை குறையாமல் பேண வேண்டிய பொறுப்பும் ஐ.சி.சிக்கு இருக்கிறது
கிரிக்கெட்டை அதன் எல்லையை கடந்து விஸ்தரிக்கும் முனைப்பில் ஐ.சி.சி இருக்கிறது. அதனால்தான் டி20 உலகக்கோப்பையில் அதிகமான அணிகளை கலந்துகொள்ள வைக்கிறார்கள். உலகக்கோப்பையை அமெரிக்காவில் நடத்துகிறார்கள். ஒலிம்பிக்ஸில் கிரிக்கெட்டை அறிமுகப்படுத்தவிருக்கிறார்கள். இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய தேவையும் இருக்கிறது. அதேநேரத்தில் ஏற்கனவே கிரிக்கெட் ஆடிக்கொண்டிருக்கும் பல நாடுகளின் கிரிக்கெட் போர்டுகளுமே நொடிந்து போகும் நிலையில் இருக்கின்றன. முதலில் அந்த கிரிக்கெட் போர்டுகளுக்கு தேவையான உதவிகளைச் செய்து தேற்ற வேண்டிய கடமையும் ஐ.சி.சிக்கும் ஜெய்ஷாவுக்கும் இருக்கிறது. முன்பைப் போலவே அந்த டாப் 3 நாடுகளின் மீதே ஒட்டுமொத்த கவனத்தையும் குவிக்காமல் பரந்துப்பட்ட அளவில் யோசித்தால் மட்டுமே கிரிக்கெட்டை அதன் எல்லையை தாண்டி விஸ்தரிக்க முடியும்.
பெண்கள் கிரிக்கெட்டிலும் கூடுதலான வணிகத்தை உள்ளிழுத்து வர வேண்டிய தேவை இருக்கிறது. பெண்கள் கிரிக்கெட்டை பின் தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் யோசிக்க வேண்டும்.
ஜெய் ஷா எல்லாவற்றையும் சமாளிப்பாரா என்பதைப் பொறுத்திருந்துப் பார்ப்போம்.