Karnataka: ``பெண் அமைச்சரிடம் தகாத வார்த்தை.." - பாஜக நிர்வாகி சி.டி.ரவி கைது
நாடாளுமன்றத்தில் அண்ணல் அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்த கருத்து நாடுமுழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ், கர்நாடகாவில் மாநில சட்ட மேலவையில் போராட்டம் நடத்தியது. இதற்கு பா.ஜ.க உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நேரத்தில், பா.ஜ.க எம்.எல்.சி, சி.டி.ரவிக்கும் அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது லட்சுமி ஹெப்பால்கருக்கு எதிராக சி.டி.ரவி தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
அதனால், லட்சுமி ஹெப்பால்கரின் ஆதரவாளர்கள் தன்னைத் தாக்கியதாக குற்றம் சாட்டிய சி.டி ரவி, "நான் எந்த தவறான மொழியையும் பயன்படுத்தவில்லை. என்னைக் கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். ஒரு எம்.எல்.ஏ.வுக்கே இங்குப் பாதுகாப்பு இல்லை என்றால், மாநிலத்தில் உள்ள மற்ற எம்.எல்.ஏ.க்களின் நிலை என்ன?" என்று காங்கிரசுக்கு எதிராக தர்ணா போராட்டம் நடத்தினார்.
சிடி ரவி கைது
ஆட்சேபனைக்குரிய வார்த்தையைப் சிடி ரவி பயன்படுத்தியதையடுத்து, சபாநாயகர் பசவராஜ் ஹொரட்டியிடம் அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் புகார் அளித்தார். காவல்நிலையத்திலும் புகாரளித்து சட்ட நடவடிக்கை மேற்கொண்டார். புகாரின் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த ஹிரேபகேவாடி காவல்துறை, தர்ணாவில் அமர்ந்திருந்த சி.டி.ரவியை கைது செய்தது. கே.எஸ்.ஆர்.பி படைப்பிரிவின் பாதுகாப்பில் சி.டி.ரவி நந்தகடா காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.