குஜராத்: ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த இளம் பெண்ணை மீட்கும் பணி தீவிரம்!
Kenya: வானிலிருந்து விழுந்த 500 கிலோ வளையம்... அதிர்ஷ்டவசமாக தப்பிய கிராமத்தினர் - ISROதான் காரணமா?
கென்யா நாட்டின் ஒரு அமைதியான கிராமத்தில் நண்பகல் 3 மணியளவில் மிகப் பெரிய வட்ட வடிவ உலோகம் வானிலிருந்து விழுந்து உள்ளூர் மக்களைப் பயத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
8 அடி விட்டம் கொண்ட அதன் எடை 500 கிலோவுக்கும் அதிகம். கென்யா ஸ்பேஸ் ஏஜென்சி (KSA) அந்த பொருள் ஒரு விண்வெளிக் குப்பை என்பதை உறுதி செய்துள்ளது. சமீபத்திய ராக்கெட் ஏவுதலில் உள்ள பொருள் என்றும் கூறியுள்ளனர்.
இத்தனை எடை கொண்ட பொருள் வானிலிருந்து விழுவது பெரும் ஆபத்துகளை விளைவிக்கக் கூடும். ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாரும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.
உலோக வட்டம் விழுந்த சத்தத்தைக் கேட்ட உள்ளூர் மக்கள் குண்டு வெடிப்பாக இருக்கலாம் என நினைத்துள்ளனர். பின்னர் கென்யா ஸ்பேஸ் ஏஜென்சியைச் சேர்ந்த மேஜர் அலோய்ஸ் இதனைக் கண்டறிந்துள்ளார்.
இந்த வட்ட தகட்டைக் கையகப்படுத்தியுள்ள அதிகாரிகள், இது எந்த பொருளிலிருந்து வந்துள்ளது என்பதைக் கண்டறிய விசாரணை நடத்தத் தொடங்கியுள்ளனர். இதற்குக் காரணமான நிறுவனத்தைக் கண்டறிந்த பின்னர், சர்வதேச சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளனர்.
ISRO காரணமா?
நேஷன்.ஆப்ரிக்கா செய்திதளம் இந்த அபாயகரமான சம்பவத்துக்கு இந்தியாதான் காரணம் என்றும், கென்ய அரசு இந்தியாவிடம் இழப்பீடு கேட்டதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் கென்ய ஸ்பேஸ் ஏஜென்சி இந்த தகவலை மறுத்துள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை எந்த தகவலையும் மக்கள் நம்ப வேண்டும் என்றுக் கூறியுள்ளது.
விண்வெளிக் குப்பைகள்!
இந்த சம்பவம் விண்வெளியில் மனிதர்கள் உருவாக்கி வைத்திருக்கும் குப்பைகள் குறித்து மீண்டும் கவலை ஏற்படுத்தியிருக்கிறது. 2024 வரை சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 250 விண்கலங்கள் ஏவப்படுகின்றன. இதனால் இதுபோன்ற அபாயகரமான சம்பவங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகரித்திருக்கின்றன.
பொதுவாக விண்வெளிக் குப்பைகள் மீண்டும் பூமிக்குத் திரும்பினால், சிதைந்து விடும் விதமாக அல்லது ஆழ்கடல் போன்ற ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் விழும்படி வடிவமைக்கப்படும். ஆனால் முழுவதுமாக அவற்றைக் கட்டுப்படுத்த முடியாது என்பதையே இதுபோன்ற விஷயங்கள் காட்டுகின்றன. உதாரணமாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் செயற்கைக் கோளிலிருந்து கடந்த ஆண்டு ஒரு உலோக துண்டு வடக்கு கரோலினா மாகாணத்தில் மலையேற்றம் செய்தவர்களுக்கு அருகில் விழுந்தது குறிப்பிடத்தக்கது.