தஞ்சை பெருநந்திக்கு 2 ஆயிரம் கிலோ காய்கறி, பழங்களால் அலங்காரம்!
Kumbh Mela களைகட்டும் கும்பமேளா; `கமலா' எனப் பெயர் மாற்றிக்கொண்டு புனித நீராடும் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி
உத்தரப்பிரதேசத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகாகும்பமேளா இன்று பிரயக்ராஜ் நகரில் தொடங்கியது. இன்று காலை தொடங்கிய கும்பமேளாவில் கங்கா, யமுனா, சரஸ்வதி ஆறுகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் காலையில் இருந்தே பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். இன்று பெளஷ் பூர்ணிமாவாகும். இன்றைய தினத்தில் புனித நீராடுவது மிகவும் சிறப்பானது ஆகும். வடமாநிலங்களில் இப்போது கடுமையான குளிர் நிலவுகிறது. இக்குளிரையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் ஆர்வமாக புனித நீராடினர். இந்திய பக்தர்கள் மட்டுமல்லாது வெளிநாட்டு பக்தர்களும் முதல் நாளில் புனித நீராடினர். மோட்சத்தை தேடி முதல் முறையாக இந்தியாவிற்கு வந்துள்ள பிரேசில் நாட்டை சேர்ந்த பிரான்சிகோ புனித நீராடிய பிறகு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ''இங்கு இருப்பது அற்புதமான உணர்வாக இருக்கிறது.
திரிவேணி சங்கமத்தில் தண்ணீர் மிகவும் குளிர்ச்சியாக இருக்கிறது. ஆனாலும் புனித நீராடிய பிறகு எனது மனம் இதமாக இருக்கிறது. நான் இந்தியாவிற்கு முதல் முறையாக வந்திருக்கிறேன். இங்கு யோகா பயிற்சியில் ஈடுபட்டேன். மோட்சத்தை தேடி அலைந்து கொண்டிருக்கிறேன். இங்கு மிகவும் அற்புதமாக இருக்கிறது. உலகத்தில் இந்தியா ஆன்மீகத்தின் இதயமாக இருக்கிறது'' என்று தெரிவித்தார்.
ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மற்றொரு பக்தர் இது குறித்து கூறுகையில், ``புனித நீராடியது எனது அதிர்ஷ்டம். ஸ்பெயின், போர்ச்சுக்கல், பிரேசில் நாட்டை சேர்ந்த எனது நண்பர்களும் இங்கு வந்திருக்கின்றனர். நாங்கள் ஆன்மிக பயணம் வந்துள்ளோம். புனித நீராடியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்று" குறிப்பிட்டார். மைசூரை சேர்ந்த ஜிதேஷ் என்பவர் இப்போது ஜெர்மனியில் இருக்கிறார். அவர் ஜெர்மனியில் இருந்து தனது மனைவி மற்றும் மகனுடன் வந்துள்ளார். ஜிதேஷ் இது குறித்து கூறுகையில், ''நான் இந்தியாவில் இருக்கிறேனா இல்லையா என்பது முக்கியமல்ல. ஆனால் இந்தியாவுடன் தொடர்பில் இருக்கவேண்டும். நான் தினமும் யோகா செய்கிறேன். நான் கும்பமேளாவிற்கு வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது'' என்று தெரிவித்தார்.
கும்பமேளாவிற்கான ஏற்பாடுகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பே தொடங்கி நடந்து வந்தது. இக்கும்பமேளாவிற்கு நாடு முழுவதும் இருந்து 45 கோடி பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி 23ம் தேதி வரை நடக்கும் கும்பமேளாவிற்கு மாநில அரசு பிரமாண்ட ஏற்பாடுகளை செய்துள்ளது. பாதுகாப்புக்கு தண்ணீருக்குள் செல்லக்கூடிய ட்ரோன்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அதோடு முழுமையாக கண்காணிக்க ஏ.ஐ.தொழில் நுட்பத்துடன் 2700 கண்காணிப்பு கேமராக்கள் நகர் முழுவதும் பொருத்தப்பட்டுள்ளது. வெளியில் இருந்து வரும் பக்தர்களுக்காக மாநில அரசு 1.50 லட்சம் தற்காலிக குடில்கள் அமைத்திருக்கிறது. கழிவறை வசதிகள், எலக்டரிக் பஸ்கள் என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
கும்பமேளாவிற்காக 92 சாலைகள் புதுப்பிக்கப்பட்டு 30 பாலங்கள் புதிதாக கட்டப்பட்டுள்ளது. கும்பமேளாவிற்கு வரும் பக்தர்களுக்காக நாடு முழுவதும் இருந்து 98 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. பாதுகாப்புக்கு லட்சக்கணக்கான போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கும்பமேளாவின் போது பக்தர்கள் புனித நீராடுதல் மட்டுமல்லாது பிரார்த்தனை, மத ஊர்வலம் போன்றவற்றிலும் ஈடுபடுவர். 6 வாரம் நடக்கும் இக்கும்பமேளாவில் ஜனவரி 13, 29, பிப்ரவரி 26 ஆகிய நாட்கள் மிகவும் முக்கியமான நாட்கள் ஆகும். கும்பமேளாவிற்கு உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள், சன்னியாசிகள், சாதுக்கள் வருகின்றனர். ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி லாரன் போவல் கும்பமேளாவிற்கு வந்துள்ளார். அவர் தனது பெயரை கமலா என்று மாற்றிக்கொண்டுள்ளார்.