900 புள்ளிகளைக் கடந்த அபிஷேக் சர்மா..! டி20 தரவரிசையில் கோலி, சூர்யா சாதனை சமன்!
Living Together: பெண்ணின் விருப்பம் முதல் குழந்தையின் சொத்துரிமை வரை; சட்டம் என்ன சொல்கிறது?
திருமணம் செய்துகொள்ளாமல் 'லிவ்விங் டுகெதர்' முறையில் சேர்ந்து வாழ்கிற வாழ்க்கை முறை நார்மலைஸ் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
''இது அந்தக் காலத்தில் இருந்த 'கந்தர்வ விவாகம்' தான்'' என்கிற வழக்கறிஞர் சாந்தகுமாரி அவர்களிடம், லிவ்விங் டுகெதர் வாழ்க்கை முறை பற்றி சட்டம் என்ன சொல்கிறது என்று கேட்டோம். விரிவாகப் பேசினார்.

ஓர் ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமல், கணவன், மனைவியாக நீண்ட காலம் சேர்ந்து வாழ்வதுதான் லிவ்விங் டுகெதர் ரிலேஷன்ஷிப். இதற்குப் பதில், ஓர் ஆணும் பெண்ணும் ஒரு மாதமோ அல்லது இரண்டு மாதமோ சேர்ந்திருப்பது 'லிவ்விங் டுகெதர்' உறவின் கீழ் வராது.
ஏனென்றால், 2010-ல் நடைபெற்ற வேலுச்சாமி vs பச்சையம்மாள் வழக்கில், நீண்ட காலம் ஒன்று சேர்ந்து தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபட்டிருப்பதுதான் 'லிவ்விங் டுகெதர்' உறவு என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
அந்த ஆணும் பெண்ணும் ஒரே இடத்தில் லிவ்-இன் உறவில் வாழ்ந்திருக்க வேண்டும். ஆண் ஓரிடத்திலும் பெண் ஓரிடத்திலும் இருந்துகொண்டு லிவ்-இன் உறவில் இருக்கிறோம் என்று சொல்ல முடியாது.
ஓர் ஆணும் பெண்ணும் 'லிவ்விங் டுகெதர்' உறவில் வாழ்கிறார்கள் என்றால், அந்த ஆணிடம் பெண்ணுக்கு என்னென்ன உரிமைகள் உண்டு; அந்தப் பெண்ணிடம் ஆணுக்கு என்னென்ன உரிமைகள் உண்டு?
'லிவ்-இன்' உறவில் வாழ்ந்து வருகிற ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒரு சொத்தை வாங்கி இருந்தாலோ அல்லது ஒரு சொத்தை வாங்குவதற்கு பணம் வழங்கி இருந்தாலோ அந்தச் சொத்தில் அவரவர் பங்கிற்கான உரிமை இருவருக்கும் உண்டு.

பொதுவாக கணவன்-மனைவி அல்லாதவர்களுக்குப் பிறக்கிற குழந்தையை முறைகேடான உறவு வழி பிறந்த குழந்தை (Illegitimate Child) என்பார்கள். ஆனால், நீண்ட காலம் லிவ்-இன் உறவில் வாழ்ந்து வருகிற தம்பதியருக்கு ஒரு குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தையை முறைகேடான உறவு வழி பிறந்த குழந்தை என்று சொல்லக்கூடாது. அது முறையான (Legitimate Child) குழந்தை.
முறையான (Legitimate Child) குழந்தை என்பதால், லிவ்-இன் மூலம் பிறந்த குழந்தைக்கு அதன் அப்பாவின் சொத்தில் பங்கு உண்டு. அதே நேரம் அந்த அப்பாவின் மூதாதையர் சொத்தில் இந்தக் குழந்தை பங்கு கேட்க முடியாது. ஆனால், அந்தக் குழந்தையின் தாத்தா-பாட்டி அவர்களாகவே விருப்பப்பட்டு அந்தக் குழந்தைக்குப் பரிசாக ஒரு சொத்தை எழுதி வைத்தால் அது சட்டப்படி செல்லும்.

ஒருவேளை லிவ்-இன்னில் வாழ்கிற ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ அவர்களுடைய பெற்றோர் அல்லது மூதாதையர் எழுதி வைத்த சொத்தை அவர்கள் தன்னுடன் லிவ்-இன் உறவில் வாழ்கிற துணையின் பெயரில் எழுதி வைக்கலாம் அல்லது அந்த உறவில் பிறந்த பிள்ளைக்கும் கொடுக்கலாம். இதுவும் சட்டப்படி செல்லும்.
ஓர் ஆணோ அல்லது பெண்ணோ சட்டப்படி ஒரு திருமண உறவில் இருந்துகொண்டு இன்னொரு நபருடன் லிவ்-இன் உறவில் இருக்க முடியாது. ஆனாலும், ஒரு நபர் திருமண உறவிலும் இருந்துகொண்டு, கூடவே நீண்ட காலம் ஒரு லிவ்-இன் உறவிலும் இருந்து ஒரு குழந்தையும் பெற்றுக் கொண்டால், அந்தக் குழந்தைக்கு அதன் தந்தையிடம் சட்டப்படி எல்லா உரிமையும் உண்டு.

லிவ்-இன் உறவில் வாழ்கிற பெண்களுக்கும் சட்டப்படி குடும்ப வன்முறையில் இருந்து பாதுகாப்பு உண்டு. மேரிட்டல் ரேப், அடிப்பது, வீட்டை விட்டு விரட்டுவது, உணவு வழங்காமல் இருப்பது போன்ற வன்முறைகளுக்கு எதிராக அந்தப் பெண் சட்டத்தின் உதவியை நாடலாம்.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், நான் ஏற்கனவே சொன்னதுபோல அவர்கள் இருவரும் நீண்ட காலம் லிவ்-இன் உறவில் சேர்ந்து வாழ்ந்திருக்க வேண்டும். தவிர, லிவ்-இன் உறவில் வாழ்கிற பெண்ணுக்கும் கணவருடைய வீட்டில் வாழ்கிற உரிமை உண்டு.
'இந்திரா ஷர்மா' என்றவருடைய வழக்கில், ஆணும், பெண்ணும் லிவ்-இன் உறவில் நீண்ட காலம் சேர்ந்து வாழ்ந்திருக்கும் பட்சத்தில், கணவரிடம் பராமரிப்புத்தொகை கேட்க முடியும் என்றும், குற்றவியல் சட்டத்தின் 125-வது விதிப்படி பராமரிப்புத் தொகை கொடுக்க வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறது உச்ச நீதிமன்றம்.

எஸ். குஷ்பு vs கன்னியம்மாள் வழக்கு, ஒரு பெண்ணுடைய அல்லது ஆணுடைய உரிமையை மதிக்க வேண்டும் என்கிறது. 2010-ல் நடந்த இந்த வழக்கின் சாரம்சம், 'என் வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுப்பதற்கு எனக்கு உரிமை இருக்கிறது. அந்தத் துணையுடன் நான் வாழ்வதால் என்னை மோசமானவள் என்று மற்றவர்கள் சொல்ல முடியாது' என்பதுதான்.
அதாவது ஒரு பெண் ஒரு நபருடன் சேர்ந்து வாழ்வது குற்றமாகாது. இப்படி வாழும் பெண்களின் நடத்தையை தவறாகப் பேசுவதற்கு ஜனநாயக நாட்டில் இடமில்லை என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது.
லிவ்-இன் உறவில் வாழ விருப்பமுள்ளவர்கள், திருமணத்திற்கு முந்தைய ஒப்பந்தம் (Prenuptial agreement) போட்டும் வாழ ஆரம்பிக்கலாம். உதாரணத்துக்கு, பிடிக்கும் வரை இருவரும் சேர்ந்து வாழ்வோம்; இருக்கும் வரை இருவரும் பகிர்ந்து வாழ்வோம்; ஒருவேளை இந்த உறவை விட்டு நான் பிரிந்துவிட்டால் உன்னிடம் பராமரிப்புத் தொகை கேட்க மாட்டேன்; நீ என்னிடம் குழந்தையின் மீதான உரிமையைக் கேட்கக்கூடாது; நமக்குள் எந்தவொரு பண பரிவர்த்தனையும் தேவையில்லை என்று ஓர் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு வாழ ஆரம்பிக்கலாம்.
இந்த ஒப்பந்தத்தை மீறி எதுவும் கேட்க முடியாது. இந்த ஒப்பந்தத்தை அவர்களாகவே எழுதிக் கொள்ளலாம் அல்லது ஒரு ரெஜிஸ்டர் ஆபீசில்கூட பதிவு செய்துகொள்ளலாம்'' என்கிறார் வழக்கறிஞர் சாந்தகுமாரி.