``ரஷ்ய எண்ணெய் கொள்முதல் செய்தால் கூடுதல் வரி விதிப்போம்" - மீண்டும் முருங்க மரம...
Louvre Museum: `விலைமதிப்பற்ற' நெப்போலியன் நகைகள் திருட்டு; உச்ச பாதுகாப்பை தாண்டி எப்படி நடந்தது?
உலகிலேயே மதிப்புமிக்க வரலாற்றுக் கலைப்பொருட்கள் இருக்கும் அருங்காட்சியகம் பாரிஸில் உள்ள லூவர். மோனா லிசா போன்ற அதீத முக்கியத்துவம் கொண்ட பொருட்கள் இங்கு உயர் தொழில்நுட்ப கண்காணிப்பில் உள்ளன. இங்கிருந்து நெப்போலியனின் நகை திருடப்பட்டுள்ள சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியளித்திருக்கிறது.
Louvre Museum கொள்ளை - எப்படி நடந்தது?
பிரான்ஸ் உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனேஸ் இது 'மிகப் பெரிய கொள்ளை' எனத் தெரிவித்துள்ளார். விலை மதிப்பில்லாத நகை ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 19) காலை 9:30 மணியளவில் திருடப்பட்டுள்ளது. சரியாக 7 நிமிடத்துக்குள் நகையைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாகவும் பிரெஞ்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொள்ளையர்கள் கட்டுமானத்தில் உள்ள சீன் ஆற்றை நோக்கியிருக்கும் முகப்பு வழியாக அருங்காட்சியக வளாகத்துக்குள் நுழைந்துள்ளனர்.
டிஸ்க் கட்டர் (மரம் வெட்டும் கருவி) மூலம் ஜன்னலின் நிலைகளை வெட்டி உள்ளே சென்றுள்ளனர். ஒருவகையான ஹைட்ராலிக் ஏணியைப் பயன்படுத்தி அப்பல்லோ கேலரிக்குள் சென்றுள்ளனர்.
நெப்போலியனின் நகைகள் வைக்கப்பட்டிருக்கும் இடத்திலிருந்து 9 நகைகளை அவர்கள் எடுத்துச் சென்றுள்ளதாகவும், அதில் ஒன்று அருங்காட்சியகத்துக்கு வெளியே கண்டறியப்பட்டதாகவும் Le Parisien செய்தி தளம் கூறுகிறது.
வெளியில் கண்டறியப்பட்ட நகை பேரரசி யூஜெனியின் கிரீடம் என்றும் அது உடைந்திருந்ததாகக் கூறப்படுகிறது.
கொள்ளைக் கும்பலில் குறைந்தபட்சம் 4 பேர் இருந்ததாகவும், நன்கு திட்டமிட்டு வேவு பார்த்து இந்தக் கொள்ளையை நடத்தியிருப்பதாகவும் அமைச்சர் நுனேஸ் தெரிவித்திருக்கிறார்.
ஒட்டுமொத்த கொள்ளையும் 7 நிமிடங்களில் நடந்து முடிந்திருக்கிறது. புகழ்பெற்ற லூவர் அருங்காட்சியகம் இதுவரையில் கொள்ளை குறித்து கருத்துத் தெரிவிக்கவில்லை. உலகிலேயே அதிகமாக பயணிகள் வந்து செல்லும் அருங்காட்சியகம் இதுதான்.
தினமும் 30,000 பேர் வந்துசெல்லும் அருங்காட்சியகம் கொள்ளை காரணமாக ஞாயிறு முழுவதும் மூடப்பட்டுள்ளது.
'Louvre Museum கொள்ளை - சினிமாவில் மட்டுமே சாத்தியம்'
"இதுநாள் வரையில் திரைப்படங்களில் கதையாக மட்டுமே சொல்லப்பட்டு வந்த லூவர் அருங்காட்சியகத்தில் கொள்ளையடிப்பது நடந்துள்ளது அதிர்ச்சியாக இருக்கிறது" எனக் கூறியுள்ளார் பாரிஸின் மேயர்.
1793ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த லூவர் அருங்காட்சியகத்தில் பழங்காலப் பொருட்கள், சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் என 33,000 கலைப்பொருட்கள் உள்ளன.
இதுவரை இங்கு பல திருட்டு முயற்சிகள் நடந்துள்ளன. 1911ஆம் ஆண்டு இங்கு பணியாற்றிய ஊழியர் மோனலிசா ஓவியத்தைத் திருடினார். 2 ஆண்டுகள் கழித்து அது மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடைசியாக 1983ஆம் ஆண்டு மறுமலர்ச்சிக் கால கவசங்கள் 2 திருடப்பட்டு, கடந்த 2021ஆம் ஆண்டு அவை மீட்கப்பட்டன.