Modi : ஏப்ரல் 6-ம் தேதி எடப்பாடி, பன்னீரை தனித்தனியே சந்திக்கும் மோடி? - பரபரக்கும் அரசியல் களம்!
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம், டெல்லிக்குச் சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தார். அப்போதே, அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி அமையப்போவது உறுதி என்று அரசியல் வட்டாரங்களில் பேச்சுக்கள் அடிபட்டன. அதற்கேற்றாற்போல எடப்பாடி பழனிசாமி, "கூட்டணி வேறு, கொள்கை வேறு" என்று அமித் ஷாவுடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மீண்டும் கூட்டணி
பின்னர், எடப்பாடி பழனிசாமி டெல்லியிலிருந்து திரும்பியவுடன், அமித் ஷாவை சந்தித்த மாநில பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, "கூட்டணி குறித்து நான் பேச முடியாது. உள்துறை அமைச்சரின் கருத்தையே இறுதியாக எடுத்துக் கொள்ளுங்கள்" என்று கூறவே, அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி குறித்தான பேச்சுக்கள் அதிகமாகப் பரவின.
இதற்கிடையில், "எல்லாம் நன்மைக்கே" என்று ஓ. பன்னீர்செல்வமும் கூறியிருந்தார்.

இதுவரையில், அ.தி.மு.க, பா.ஜ.க தரப்பிலிருந்து கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக யாரும் எதையும் தெரிவிக்கவில்லையென்றாலும், இத்தகைய சம்பவங்கள் கூட்டணிக்கான அறிகுறி என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஏப்ரல் 6-ம் தேதி ராமேஸ்வரத்தில் புதிய பாம்பன் பாலத்தை திறந்துவைக்கத் தமிழ்நாட்டுக்கு வருகை தரவிருக்கும் பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமியையும், ஓ. பன்னீர்செல்வத்தையும் தனித்தனியே சந்திக்க நேரம் ஒதுக்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்தச் சந்திப்பில், அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தை எட்டும் என்றும் அதிமுக அணிகள் இணைப்பு குறித்தும் பேசப்படலாம் என்றும் அரசியல் களத்தில் பேசப்படுகிறது.