A.R. Rahman: `அர்த்தத்தைத் தேடுகிறோம்!' - விவாகரத்து குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் சொல்...
Mohammed Shami: `ஒரு மேட்சைப் பார்த்து அணியிலெடுப்பதா?' - ஷமி குறித்து முன்னாள் இந்திய வீரர்
இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்குப் பின்னர் முழங்கால் காயத்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி, கடந்த வாரம் ரஞ்சி டிராபி தொடரில் கம்பேக் கொடுத்தார். மத்தியப் பிரதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் இரண்டு இன்னிங்ஸையும் சேர்த்து ஏழு விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார் ஷமி. அதற்கடுத்த நாள்முதல், பார்டர் கவாஸ்கர் தொடருக்கான இந்திய அணியில் ஷமியையும் சேர்க்க வேண்டும் எனப் பேச்சுகள் எழுந்தது.
வரும் வெள்ளிக்கிழமை (நவம்பர் 22) ஆஸ்திரேலியாவில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. தனிப்பட்ட காரணங்களுக்காக ரோஹித் இந்த டெஸ்டில் பங்கேற்க மாட்டார் என்றும், முதல் டெஸ்டில் அணியை பும்ரா வழிநடத்துவார் என்றும் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது. மேலும், இரண்டாவது டெஸ்டில் ரோஹித் பங்கேற்பார் என்று கூறப்பட்ட நிலையில், இரண்டாவது டெஸ்ட்டுக்கு ரோஹித்துடன் ஷமியும் ஆஸ்திரேலியாவுக்குப் புறப்படுவார் என்று தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், ஓராண்டாகக் கிரிக்கெட் விளையாடாத ஒருவரின் ஒரு மேட்சைப் பார்த்து ஆடவைப்பது நியாயமற்றது என முன்னாள் இந்திய வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா கூறியிருக்கிறார்.
தனது யூடியூப் சேனலில் இது குறித்துப் பேசிய ஆகாஷ் சோப்ரா, ``ரோஹித்துடன் ஷமியையும் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப இந்திய தேர்வுக்குழுவினர் ஆர்வமாக இருக்கின்றனர். எனினும், ஒரு ஆண்டில் ஒரே போட்டி விளையாடியிருக்கிறார் என்பதால் ஷமி இன்னும் கொஞ்சம் விளையாட வேண்டும் என இந்திய அணி விரும்புவதாகவும் பேச்சுக்கள் அடிபடுகிறது. திடீரென்று ஆஸ்திரேலிய பயணம், அதுவும் நேராக டெஸ்ட் போட்டி என்பது கேட்பதற்குச் சற்று அதிகமாக இருக்கலாம்.
ஒரே மேட்ச் தான் ஆடியிருக்கிறார். அதுவும் ஒளிபரப்பப்படாததால் அவரின் பந்துவீச்சைப் பார்க்க முடியவில்லை. அவர் எடுத்த விக்கெட்டுகளைப் பார்க்கையில், இன்னும் முழுமையாக அவர் வெளிப்படவில்லை என்று நான் கூறுவேன். ஷமி இருக்க வேண்டும் என்றே நாம் விரும்புகிறோம். ஏனெனில், பும்ரா, ஷமி, சிராஜ் லைன் அப் தனி ரகம். இதுவே, பும்ரா, சிராஜ், ஆகாஷ் தீப்/பிரசித் கிருஷ்ணா லைன் அப்பில் அனுபவமின்மையைக் காண முடிகிறது.
இருப்பினும், ஷமியை இவ்வளவு வேகமாக டெஸ்ட் போட்டிக்குள் தள்ளுவது கேள்விக்குரியதாக இருக்கும். ஏனெனில், ஒருவருடமாக எந்தவொரு கிரிக்கெட்டும் அவர் ஆடவில்லை. இப்போது திடீரென்று, ஓராண்டுக்குப் பிறகு ஒரு போட்டியில் ஆடியதும் டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும் என்று சொல்வது நியாயமாக இருக்காது. ஷமி இன்னும் கொஞ்சம் விளையாடட்டும். விரைவில் அவர் இந்தியாவுக்காக மீண்டும் விளையாட வேண்டும் என்றே நாங்களும் விரும்புகிறோம். ஆனால், நீங்கள் அவசரப்பட்டால், சில நேரங்களில் இடைவெளி அதிகமாகும்." என்று கூறினார்.
இந்திய டெஸ்ட் அணியில் 10 போட்டிகள் ஆடியிருக்கும் ஆகாஷ் சோப்ரா, முதல் தர கிரிக்கெட்டில் 162 போட்டிகளில் விளையாடி 10,000-க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பார்டர் கவாஸ்கர் தொடரில் ஷமி சேர்க்கப்படுவாரா, அப்படிச் சேர்த்தால் சரியாக இருக்குமா என்பது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதைக் கமெண்ட் பண்ணுங்க!