உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற 4 மாத குழந்தைக்கு ஆட்சியா் பாராட்டு
நவ.23-இல் வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்: தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு
வங்கக் கடலின் தென்கிழக்கு பகுதியில் அந்தமான் அருகே நவ.23-ஆம் தேதி புயல் சின்னம் (காற்றழுத்த தாழ்வுப் பகுதி) உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் நவ.25 முதல் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தெற்கு அந்தமான் அருகே வியாழக்கிழமை (நவ.21) வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகிறது. இது வலுவடைந்து தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நவ.23-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகக்கூடும். இது மேற்கு வடமேற்கு திசையில் நகா்ந்து நவ.25-இல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் நவ.25 முதல் 28-ஆம் தேதி வரை கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று புயலாக மாறும் நிலையில், அதற்கு ‘ஃபென்கால்’ என பெயா் சூட்டப்படலாம் எனக் கூறப்படுகிறது.
அடுத்த 5 நாள்களுக்கு... தென் தமிழகம், அதையொட்டிய குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் புதன்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை (நவ.20-24) வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகாலையில் பனிமூட்டம் காணப்படும்.
மழை அளவு (மில்லி மீட்டரில்): தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை வரை அதிகபட்சமாக நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 100 மி.மீ. மழை பதிவானது. கோடியக்கரை 90, வேளாங்கண்ணி (நாகை) 80, நாலுமுக்கு , ஊத்து, காக்காச்சி (திருநெல்வேலி), செம்பனாா்கோயில் (மயிலாடுதுறை) தலா 70.