Murmu: சட்டென மாறிய வானிலை; சாலை மார்க்கமாக வந்த வான்படை; பாதுகாப்பாக ஊட்டி சென்ற குடியரசுத் தலைவர்!
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அரசு முறை பயணமாகத் தமிழ்நாட்டிற்கு இன்று (நவம்பர் 27) காலை வருகை தந்திருக்கிறார். நீலகிரி மாவட்டம் குன்னூர், வெலிங்டன் பகுதியிலுள்ள முப்படை அதிகாரிகளுக்கான ராணுவப் பயிற்சி கல்லூரியில் நாளை (நவம்பர் 28) நடைபெற இருக்கும் விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்த இருக்கிறார். நாளை மறுநாள் (நவம்பர் 29) ஊட்டியில் பழங்குடி மக்களைச் சந்தித்துக் கலந்துரையாட இருக்கிறார்.
திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் 30ஆம் தேதி நடைபெறவுள்ள 9வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க இருக்கிறார். குடியரசுத் தலைவரின் வருகைக்காக நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. ஹெலிகாப்டர் இறங்குத் தளங்கள் முதல் நிகழ்ச்சி அரங்குகள் வரை ராணுவ அதிகாரிகள், வருவாய்த்துறை உயர் அதிகாரிகள் ஒத்திகை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து வந்தனர்.
குடியரசுத் தலைவரை வரவேற்க நேற்றிரவே ஊட்டி ராஜ்பவன் வந்தடைந்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி. திட்டமிட்ட படி இன்று காலை டெல்லியிலிருந்து விமானம் மூலம் கோவை மாவட்டம் சூலூர் விமான நிலையம் வந்தடைந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
சூலூர் விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஊட்டிக்குச் செல்ல திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இன்று காலை வானிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக ஹெலிகாப்டர் பயணம் ரத்து செய்யப்பட்டது. பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுக்க உச்சபட்ச பாதுகாப்புடன் சாலை மார்க்கமாக ஊட்டி ராஜ்பவனைச் சென்றடைந்தார் குடியரசுத் தலைவர். ஆளுநர், முதல்வர், ஆட்சியர் வரை அரசுத்துறை சார்பில் குடியரசுத் தலைவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இது குறித்து தெரிவித்த வருவாய்த்துறை அதிகாரிகள், "கடந்த ஒரு வாரமாகக் காலநிலையில் தொடர் மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. இன்று காலை கடுமையான பனி மூட்டம் நிலவியது. சமவெளிப் பகுதிகளிலிருந்து மலையை நோக்கி ஹெலிகாப்டரை இயக்குவதிலும், ஊட்டியில் தரையிறங்குவதிலும் சிக்கல் ஏற்படலாம் என எச்சரிக்கை அறிகுறிகள் கிடைக்கப்பெற்றது.
வான்படை அதிகாரிகளின் அறிவுறுத்தலைப் பின்பற்றி ஹெலிகாப்டர் பயணம் ரத்து செய்யப்பட்டது. கோவையிலிருந்து மேட்டுப்பாளையம், கோத்தகிரி வழியாக ஊட்டி ராஜ்பவனை வந்தடைந்தார். சுமார் ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்" என்றனர்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...