அதானி வீட்டில்தான் அதிகாரப் பகிர்வு பேச்சு நடந்தது! சரத் பவார்
Ola: `100 கி.மீ கூட ஓடலை; ஒரு வருஷமா அலையறோம்'- பழுதான ஓலா; போராட்டத்தில் இறங்கிய பொள்ளாச்சி மக்கள்!
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இருந்து உடுமலை செல்லும் சாலையில் சின்னம்பாளையம் பகுதி உள்ளது. அங்கு ஓலா இருசக்கர வாகன விற்பனை மையம் உள்ளது. சமீபகாலமாக மக்களிடம் மின்சார வாகனங்கள் குறித்து விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.
இதனால் ஓலா பைக்குகளையும் மக்கள் அதிகளவு வாங்கி வருகின்றனர். அதன்படி பொள்ளாச்சியில் ஓலா விற்பனை மையத்திலும் ஏராளமான மின்சார இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்தாலும், ஓலா மின்சார இருசக்கர வாகனங்கள் அடிக்கடி பழுதாவதாக புகார் எழுந்தது. வாகனம் வாங்கிய குறுகிய காலத்திலேயே பழுதாவதால் மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
சர்வீஸ் செய்தாலும் மீண்டும், மீண்டும் வாகனம் பழுதாவதாக கூறப்படுகிறது. மேலும் வாடிக்கையாளர்களின் புகார்களை, ஓலா நிர்வாகம் தொடர்ந்து புறக்கணித்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இதனால் கொந்தளித்த வாடிக்கையாளர்கள் பலரும் ஒன்றிணைந்து, ஓலா விற்பனை மையத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘வாங்காதே.. வாங்காதே.. ஓலா வண்டியை வாங்காதே..’ ‘ஏமாறாதே.. ஏமாறாதே..’,
‘தடை செய்.. தடை செய்.. ஓலாவை தடை செய்..’ உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூறுகையில், “பழுதாகும் வாகனங்களை சரி செய்வதற்கு சர்வீஸ் சென்டர் இல்லை. வாகனம் வாங்கி 100 கி.மீ கூட ஓடவில்லை. வெளியே செல்லும்போது ஆங்காங்கே பழுதாகி நின்றுவிடுகிறது. ஒரு வருடமாக அலைந்து கொண்டிருக்கிறோம்.
உடனடியாக சர்வீஸ் செய்வதில்லை. அப்படி செய்தாலும் மீண்டும் பழுதாகிக் கொண்டே இருக்கிறது. பழுதடைந்த வாகனங்களை ஓலா திரும்பப் பெற்று கொண்டு, உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.” என்றனர்.