Phoenix: ``தமிழ் சினிமாவுக்கு 10 ஹீரோக்கள் கெடச்சுருக்காங்க..."- தயாரிப்பாளர் டி.சிவா
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி நாயகனாக அறிமுகமாகும் படம் ‘பீனிக்ஸ்’.
சண்டைப் பயிற்சியாளர் அனல் அரசு இயக்கியுள்ள இந்தப் படத்தில் வரலட்சுமி சரத்குமார், சம்பத், தேவதர்ஷினி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
பிரேவ் மேன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார்.

நாளை (ஜூலை 4) வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் பிரஸ் ஷோ நேற்று நடந்தது. இந்நிகழ்வுக்கு பல்வேறு நடிகர் நடிகைகள் வந்திருந்தனர். அதில் நடிகை ஆனந்தி, ``படம் ரொம்ப ஸ்பீடா இருந்தது. மாஸ்டர் இவ்வளவு வருஷ அனுபவம், அவரோட உழைப்பு படத்துல தெரிகிறது. மியூசிக் மிரட்டி விட்டிருக்காங்க.
சூரியா சேதுபதி... விஜய் சேதுபதி ரத்தம்னா சும்மாவா. சீரியஸ்லி அவர் எதிர்கால ஹீரோ... யார சொல்றது யார விடுறதுணு தெரியல. எல்லா டீமும் சேர்ந்து ஒரு சிறப்பான படத்தை கொடுத்திருக்காங்க. கண்டிப்பா தியேட்டர்ல வந்து பாருங்க." என்றார்.
அவரைத் தொடந்து பேசிய நடிகர் மூணாறு ரமேஷ், ``இந்தப் படம் மிகவும் அருமையாக வந்திருக்கிறது. இந்தப் படத்துக்காக நடித்த நடிகர்கள் கடினமாக உழைத்திருக்கிறார்கள். சுமார் ஒன்றரை வருடம் இந்தப் படத்துக்காக உழைத்திருக்கிறார்கள். ஷூட்டிங் முடிந்ததும் இதில் நடித்த பசங்க ரொம்ப சோர்வாகதான் செல்வார்கள். அவ்வளவு உழைப்பு இதில் இருக்கிறது. அது இந்தப் படத்தில் தெரிகிறது." என்றார்.

அதற்கு அடுத்து பேசிய தயாரிப்பாளர் டி. சிவா,``தமிழ் சினிமாவின் மிக முக்கியமானப் படம். இந்தப் படம் ஹிட் என்பதை எழுதி வச்சிக்கோங்க. இந்த வருஷத்தின் மிக முக்கியமானப் படம். விஜய் சேதுபதியின் மகன் இதைவிட சிறந்த ஒரு படத்தில் நடிக்க முடியாது. தமிழ் திரையுலகுக்கு 10 ஹீரோக்கள் கிடைச்சிருக்காங்க. இந்தப் படத்துக்கு எல்லோரும் சப்போர்ட் பண்ணுங்க." என்றார்.