பறந்து போ விமர்சனம்: மகன்களைப் பெற்ற அப்பாக்களுக்கு... நம்மையும் பறக்க அழைக்கும் ராமின் உலகம்!
சென்னையில் மளிகை அங்காடி தொடங்க வேண்டும் என்ற குறிக்கோளோடு ஓடிக்கொண்டிருக்கும் கோகுலை (சிவா), மாத இஎம்ஐ-க்களும் துரத்திக்கொண்டிருக்கின்றன.
அவரின் மனைவியான குளோரி (கிரேஸி ஆண்டனி) தன் சேலை விற்பனை தொழிலால் ஓரளவிற்குக் குடும்பப் பணப் பிரச்னையைச் சமாளிக்கிறார்.
பெற்றோரின் இந்த இயந்திரத்தனமான பொருளாதார ஓட்டத்தால், அவர்களின் ஒரே மகனான அன்பு (மிதுல் ரயான்) பகல் வேளையில் பூட்டிய வீட்டிற்குள் தனிமையில் ஆன்லைன் க்ளாஸ்களோடு பொழுதைக் கழிக்கிறார்.

இந்தத் தனிமையால், பெற்றோரின் மீது பிடிப்பின்மையும், குழந்தைப் பருவத்தை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையும் அன்புக்கு வருகின்றன.
இந்நிலையில், அலுவல் நிமித்தமாக குளோரி கோவை செல்ல, எதிர்பாராத தருணத்தில், கோகுலும் அன்பும் ஒரு சின்ன பைக் ரைடுக்குக் கிளம்புகிறார்கள்.
இந்தப் பயணத்தில் பெற்றோருக்குள்ளும், அன்புக்குள்ளும் நிகழும் நேர்மறை மாற்றங்களே ராம் இயக்கியிருக்கும் 'பறந்து போ'.
தன் வழக்கமான அப்பாவித்தனமான மேனரிஸத்தோடும், ஒன் லைன் கவுன்ட்டர் காமெடிகளோடும் உலாவும் சிவா, ஆங்காங்கே வரும் உணர்வுபூர்வமான தருணங்களையும் முதிர்ச்சியுடன் அணுகி, தன் கதாபாத்திரத்தை அழுத்தமாகப் பதிய வைக்கிறார்.
சிவாவின் கவுன்ட்டர்களைக் கதையிலிருந்து விலக வைக்காத வகையில், நேர்த்தியாகக் கையாண்டிருக்கிறார் இயக்குநர்.
மகன் மீதான பாசம், கணவன் மீதான காதல், பொருளாதாரம் கொடுக்கும் அழுத்தம், தங்கை மீதான ஏக்கம் என உணர்வுகளின் வெளியில் பறக்கும் குளோரி கதாபாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்திப் போகிறார் கிரேஸ் ஆண்டனி. இறுதிக்காட்சியில் லூட்டியடித்து சிரிப்பலைகளையும் அள்ளுகிறார்.

சிறிது மீறினாலும், ஓவர்டோஸ் மோடுக்குப் போய்விடும் அன்பு கதாபாத்திற்குத் தேவையான கச்சிதமான நடிப்பை மிதுல் ரயானிடமிருந்து வாங்கியிருக்கிறார் இயக்குநர். நகைச்சுவை தாண்டி, எமோஷனல் காட்சிகளிலும் நம் அன்பைப் பெறுகிறார் இந்த அன்பு!
அஞ்சலி, அஜு வர்கீஸ் ஆகியோர் குறைந்த திரை நேரத்திலும் கவனிக்க வைக்கிறார்கள். விஜய் யேசுதாஸ், பாலாஜி சக்திவேல் ஆகியோர் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள்.
பயணங்களில் நிலவியலையும், எமோஷனல் தருணங்களில் கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் பீல் குட் மீட்டரிலிருந்து விலகாமல் நேர்த்தியாகக் கடத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் என்.கே.ஏகாம்பரம்.
இதற்கு மதி வி.எஸ்-ஸின் படத்தொகுப்பும் தேவையான பங்களிப்பைத் தந்திருக்கிறது. ஆங்காங்கே வரும் 'டிரோன் ஷாட்'களும் இந்தப் பறத்தலுக்குச் சிறகை வீசியிருக்கின்றன.
சந்தோஷ் தயாநிதி இசையில் மதன் கார்க்கி வரிகளில் குழந்தைகளின் உலகத்தையும், அவர்களின் பார்வையையும் பேசும் பாடல்கள் குழந்தைகளின் மொழியிலேயே படம் நெடுகிலும் திரைக்கதையோடு பிணைந்து, கதைக்கருவிற்குக் கைகொடுத்திருக்கின்றன.
இப்பாடல்களுக்கு இடையில் ஆங்காங்கே தென்படும் மேகக்கூட்டம் போல் வரும் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையில் குறையில்லை.

சமகால குழந்தைகளின் உலகம், அவர்களுக்குள் இருக்கும் சிக்கல்கள், அவற்றைப் பெற்றோர்கள் அணுகும் முறையிலிருக்கும் சிக்கல்கள் போன்றவற்றை எமோஷனலாகவும், காமெடியாகவும் பேசியபடி தொடங்குகிறது திரைக்கதை.
அச்சிக்கல்களுக்கான தீர்வுகளைச் சின்ன சின்ன துணை கதாபாத்திரங்கள், கிளைக்கதைகளின் உதவியோடு விவாதிக்கிறது திரைக்கதை.
பரபரப்பு, திருப்பங்கள் இல்லாமல், நேர்க்கோட்டில் நிதானமாகப் பயணிக்கும் திரைக்கதை, காமெடி, எமோஷன் என மாறி, மாறி வந்தாலும் அழுத்தமாகவே நகர்கிறது.
சிறுவனின் சேட்டைகள், அதனால் அல்லாடும் தந்தை எனக் காட்சிகள் வரிசைக்கட்டுகின்றன. இவற்றில், சிறுவனின் சேட்டைகளில் அதீத தன்மை எட்டிப்பார்க்காத வகையில், நியாயமான காரணங்களும் அக்காட்சிகளினூடே இடம்பெற்றிருக்கின்றன.
இயக்குநர் ராமின் 'அன்பு சூழ்' உலகமும், மனிதர்களும் திகட்டாத வகையில் கச்சிதமான அளவில் 'நின்றுவிடுவது' படத்திற்குப் பலம்.
கோகுலின் தந்தை, கோகுல், அன்பு என மூன்று தலைமுறையினருக்குள் நடக்கும் உரையாடல் காட்சி கலகலப்பு!
காக்ரோச் எனத் தன்னை அறிமுக செய்துகொள்ளும் குட்டிக் குழந்தையிடமிருந்து பெறப்பட்ட நடிப்பில் க்யூட்னஸ் ஓவர் லோடட்!
தண்ணீர் கேன்கள் இருக்கும் கைப்பையை வைத்துக்கொண்டு, அதைத் திறந்துகூடப் பார்க்காமல், தாகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் சிவா, ஆண்களின் அவசரகதி உலகைப் பிரதிபலிக்கிறார்.

அதே சமயம், சில காட்சிகளில் எதார்த்தத்தை மீறும் வசனங்களைத் தவிர்த்திருக்கலாம். இறுதிக்காட்சியானது அதன் சுவாரஸ்ய எல்லையை மீறி, மலை ஏறிக்கொண்டே போவது அயற்சியை வர வைக்கிறது.
இறுதிக்காட்சியில் ஈழைநோய் உள்ள குளோரியிடம், இன்ஹேலரைத் தூக்கிப் போடச் சொல்வது இயக்குநருடைய அன்பின் அதிகப்பிரசங்கித்தனம். கிராம வாழ்க்கையைப் புனிதப்படுத்துவது போல நீட்டி முழக்கினாலும், இறுதியில் அதையும் விமர்சனத்திற்குள்ளாக்கியது சிறப்பு!
நவீன பொருளாதார சூழலும், நகரமயமாக்கலும் தரும் அதீத அழுத்தங்களால் பெற்றோர் மீது திணிக்கப்படும் சுமைகள்... அதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்படும் குழந்தைகள் என்ற பிரச்னையை பீல் குட் படமாக உரையாடி, நம்மையும் குழந்தைகளின் உலகில் பறக்கவிட்டிருக்கிறது இந்த 'பறந்து போ'.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...