Ranil : திடீர் இந்திய பயணம்; 4 நாள்கள் ஊட்டியில் தங்கும் ரணில் விக்கிரமசிங்க!
இலங்கை அரசியல் களத்தில் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான ரணில் விக்கிரமசிங்க,1994-ம் ஆண்டு முதல் ஐக்கிய தேசிய கட்சிக்கு தலைமை தாங்கி 6 முறை இலங்கையின் பிரதமராக பதவி வகித்தவர். கடந்த 2022- ம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட மிக மோசமான பொருளாதார நெருக்கடி நிலையால் மக்கள் புரட்சி வெடித்தது. அப்போது அதிபர் பதவியில் இருந்த கோத்தபய ராஜபக்ச, பிரதமர் பதவியில் இருந்த மகிந்த ராஜபக்ச ஆகியோர் பதவி விலகி நாட்டை விட்டே தப்பி ஓடினர்.
மக்கள் புரட்சியின் போது இலங்கை அதிபராக ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்றார்.
பின்னர் அவர்கள் இலங்கை திரும்பினாலும் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி உள்ளனர்.
இலங்கையில் அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் ரணில் விக்கிரமசிங்க. இந்தியாவுக்கு ரணில் திடீர் பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், 4 நாள் பயணமாக நேற்று ஊட்டிக்கு வருகைத் தந்திருக்கிறார். இலங்கையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த அவர், சாலை மார்க்கமாக ஊட்டியை அடைந்தார். ஊட்டியில் உள்ள தனியார் பங்களா ஒன்றில் தங்கியுள்ள அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவரின் பயணத்திட்டங்கள் மற்றும் சந்திக்கும் நபர்களின் விவரங்கள் குறித்து எதுவும் காவல்துறைக்கு இன்னும் வழங்கப்படவில்லை என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
தனது அரசியல் வாழ்க்கை தொடர்பான சுயசரிதையை எழுதும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் ரணில் விக்கிரமசிங்க என்ற தகவல்கள் வெளியாகியிருக்கிறது.