வேளச்சேரியில் அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்! 8 பேர் காயம்
Saudi-Pak Defence Pact: பாதுகாப்பைத் தருமா சௌதி - பாகிஸ்தான் ஒப்பந்தம் ? | Detailed Analysis
பாகிஸ்தானும் சௌதி அரேபியாவும் கடந்த புதன் கிழமை ( செப்டம்பர் 17) செய்து கொண்ட பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் மேற்கு ஆசியா, தெற்கு ஆசியா மட்டுமல்லாது மேற்குலகையும் சற்று சலசலப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
அணு ஆயுத வல்லமை பெற்ற இரண்டு தெற்காசிய நாடுகளில் ஒன்றான பாகிஸ்தானும், மேற்கு ஆசியாவில் மிகப்பெரிய பொருளாதாரங்களில் ஒன்றான சௌதி அரேபியாவும் கடந்த பல தசாப்தங்களாகவே பாதுகாப்பு உறவைப் பேணி வந்திருக்கின்றன.

1980களில் பாகிஸ்தானின் ராணுவம் சௌதி அரேபியாவில் சௌதியின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு உதவ நிலை நிறுத்தப்பட்டிருந்தது. சுமார் 20000 பாகிஸ்தானப் படையினர் சௌதியில் இருந்தார்கள்.
ஆனால் இந்த உறவு பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் என்ற அளவில் ஸ்திரப்படுத்தப்பட்டிப்பது மத்தியக் கிழக்கில் மாறி வரும் கேந்திர அரசியல் சூழலையும், அரபு நாடுகளின் இஸ்ரேல் குறித்த கவலைகளையும் , அமெரிக்காவுடனான அரபு நாடுகளின் நட்பில் எழுந்துள்ள நெருடல்களையும் காட்டுவதாகவே சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
பாகிஸ்தானின் பிரதமர் ஷெபாஸ் ஷரீபும் சௌதி அரேபியாவின் இளவரசர் மொகமது பின் சல்மானும் கையெழுத்திட்ட இந்தப் பாதுகாப்பு ஒப்பந்தம், முதன் முறையாக இந்த இரு நாடுகளையும் ஒரு பரஸ்பர பாதுகாப்பு பந்தத்தில் இணைக்கிறது.
ஒரு நாடு மீது தொடுக்கப்பட்ட எந்த ஒரு தாக்குதலும் மற்றொரு நாட்டின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகவே கருதப்படும் என்று கூறும் இந்த ஒப்பந்தம் , நேட்டோ அமைப்பின் பரஸ்பர பாதுகாப்பு அம்சங்களை எதிரொலிக்கிறது.
இஸ்ரேல் குறித்த அச்சங்கள், அமெரிக்கா குறித்த அவநம்பிக்கை இந்த ஒப்பந்தத்தின் சமகால அரசியல் காரணிகளாக மூன்று விஷயங்களைக் குறிப்பிடலாம்.

முதலாவதாக , இஸ்ரேல் மீதான ஹமாஸின் 2023 அக்டோபர் தாக்குதலை அடுத்து ஹமாஸ் மீது மட்டுமல்லாமல், காஸாவின் ஒட்டுமொத்த சமூகத்தின் மீதும் இஸ்ரேல் நடத்திவரும் பழி வாங்கும் தாக்குதல்.
ஹமாஸை வேரறுப்பது என்பதில் தொடங்கி, 20 லட்சம் மக்கள் தொகை கொண்ட அந்த சிறிய நிலப்பரப்பின் ஒட்டு மொத்த கட்டமைப்பையே அழித்த இஸ்ரேலின் இந்த குண்டுத்தாக்குதல், அரபு நாடுகளின் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அரபு மக்கள் மத்தியில் இஸ்ரேல் மீது பெரும் வெறுப்பையும் ஏற்படுத்தியது.
இரண்டாவதாக இந்தத் தாக்குதல் காசாவின் மீதோடு மட்டுமல்லாமல், அண்டையில் உள்ள அரபு நாடுகளான லெபனான், சிரியா, யேமன், கத்தார் மற்றும் மற்றொரு மேற்காசிய நாடான இரான் ஆகியவற்றின் மீதும் விஸ்தரிக்கப்பட்டதும் அரபு நாடுகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.
மூன்றாவதாக , மத்தியக் கிழக்கில் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து, அமெரிக்காவின் முதலீடுகளும், இப்பகுதியில் அனுமதிக்கப்பட்ட அமெரிக்க படைத் தளங்களும் இப்பகுதி நாடுகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்ற நம்பிக்கையை இஸ்ரேலின் கடந்த இரண்டாண்டு செயல்பாடுகள் தகர்த்திருக்கின்றன.
இரானின் மீது இஸ்ரேல் நடத்திய குண்டுத்தாக்குதலில் அமெரிக்காவும் கலந்து கொண்டு இரானின் ஃபோர்தோ அணு சக்தி நிலையத்தின் மீது நிலத்தடியில் ஊடுருவிச் செல்லும் குண்டுகளை வீசியது ஒரு வகையில் பெரும் அதிர்ச்சியைத் தரவில்லை.
ஏனெனில், டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, இரானின் அணு சக்தித் திட்டங்களுக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வந்தது. முந்தைய குடியரசுக் கட்சி நிர்வாகங்களைவிட, டிரம்ப் நிர்வாகம் இரான் மீது மேலும் கடும்போக்கு காட்டியது.

ஆனால், கத்தார் மீது செப்டம்பர் 9ம் தேதி நடத்தப்பட்ட இஸ்ரேலியத் தாக்குதல் , அரபு நாடுகளின் பார்வையை தீவிரமாக மாற்றியுள்ளது எனலாம். சௌதி அரேபியா போலவே கத்தாரும் அமெரிக்காவின் பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் ஒரு அமெரிக்க நட்புறவு நாடு.
1996ல் இருந்து அமெரிக்காவின் விமானப்படை தளம் ஒன்று கத்தாரில் இருந்து நிலை கொண்டிருக்கிறது. கத்தாரின் அல் உதெய்த் தளத்தில் இருக்கும் அமெரிக்காவின் விமானப் படை தளத்தில் சுமார் 10,000 அமெரிக்கப் படையினர் இருக்கிறார்கள்.
மத்திய கிழக்கின் அமெரிக்க கேந்திர ராணுவ தளங்களில் மிகப் பெரிய தளம் இது. இராக், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களை அமெரிக்கா நடத்திய போது, இந்த தளம் பெரும்பங்காற்றியது.
இதைத் தாண்டி இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே மத்யஸ்தம் செய்யும் நாடாகவும் கத்தார் இருந்து வருகிறது. இரண்டு ஆண்டுகளாக நடந்து வரும் காசா மீதான தாக்குதலை நிறுத்தவும், ஹமாஸ் பிடித்து வைத்திருக்கும் இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவிக்கவும் நடந்து வரும் சிக்கலான பேச்சுவார்த்தைகள் கத்தாரின் தலைநகர் தோஹாவில்தான் நடந்துவருகின்றன.
தோஹாவில்தான் ஹமாஸின் மூத்த தலைவர்கள் வாழ்ந்துவருகின்றனர். இந்த பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் சூழலில்தான், ஹமாஸ் இயக்கத் தலைவர்கள் வசித்து வரும் கட்டிட வளாகத்தின் மீது இஸ்ரேலிய ராணுவம் குண்டுத் தாக்குதலை நடத்தியது.

இத்தாக்குதலில் இஸ்ரேல் எதிர்பார்த்த அளவு “வெற்றி” கிடைக்கவில்லை. ஹமாஸ் இயக்கத்தின் தற்போதைய தலைவர் அல் ஹய்யாவின் மகன் ஒருவரைத் தவிர முக்கிய தலைவர்கள் யாரும் கொல்லப்படவில்லை.
கத்தார் தாக்குதல்கள் காட்டிய இஸ்ரேலின் மனப்போக்கு ஆனாலும், பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் சூழலில் நடந்த இத்தாக்குதல்கள் இரண்டு விஷயங்களைக் கோடிட்டுக் காட்டின. ஒன்று இஸ்ரேலின் மனப்போக்கு பற்றியது. ஹமாஸ் இயக்கத்துடன் சமாதானத்துக்கு அது தயாராக இல்லை என்பதை இந்தத் தாக்குதல் மற்றொரு முறை வெட்ட வெளிச்சமாக்கியது.
அதைவிட முக்கியமாக கத்தார் கருதுவது, தான் ஒரு அமெரிக்க நட்பு நாடாக இருந்த போதும், அமெரிக்கா இத்தாக்குதலுக்கு பெரிதாக எதிர்வினை ஆற்றாததுதான். சௌதி அரேபியா பாகிஸ்தானுடன் செய்து கொண்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை இந்தப் பின்னணியில்தான் பார்க்க வேண்டும். அமெரிக்காவுடன் பாதுகாப்பு உறவை நீண்ட காலமாகக் கொண்டிருக்கும் அரபு நாடுகளின் நம்பிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளில் வெகுவாகக் குறைந்திருக்கிறது.
கத்தார் மீது அமெரிக்காவின் மிக நெருங்கிய மத்தியக் கிழக்கு நாடான இஸ்ரேல் நடத்திய தாக்குதல், இதற்கு முன் 2019ல் இரான் , சௌதி அரேபியா மீது நடத்திய ட்ரோன் தாக்குதல் போன்ற சம்பவங்களின் போது அமெரிக்காவின் எதிர்வினை சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.
இந்த நிலையில்தான் தனது பாதுகாப்புக்கு அமெரிக்காவை மட்டும் நம்பிப் பயனில்லை, வேறு கூட்டாளிகளும் வேண்டும் என்ற நிலைக்கு சௌதி அரேபியா வந்திருக்கிறது.
பாகிஸ்தான் பிரதமருடன் கையெழுத்தான இந்த பாதுகாப்பு ஒப்பந்தம் எந்த அளவுக்கு அந்தப் பாதுகாப்பை உறுதி செய்யும் என்பது தெளிவாகவில்லை. பாகிஸ்தான் அணு வல்லமை பெற்ற ஒரே ஒரு இஸ்லாமிய நாடு.

ஆனால் சௌதி அரேபியாவுக்கு பாதுகாப்பு நெருக்கடி ஏற்பட்டால் , அதற்கு பாகிஸ்தானின் அணு ஆயுதப் பாதுகாப்பு கிடைக்குமா என்பது போன்ற கேள்விகளுக்கு கையெழுத்தான ஒப்பந்தத்தில் விளக்கம் இல்லை. ( இந்த அணு ஆயுதப் பாதுகாப்பு கிடைக்கும் என்று பாகிஸ்தான் தரப்பு கூறியிருக்கிறது என்பது வேறு விஷயம்).
ஆனால் பாகிஸ்தானைப் பொறுத்தவரை இந்த ஒப்பந்தம் அதன் பிராந்திய அந்தஸ்தை சற்றுக் கூட்டியிருக்கலாம். தெற்காசியப் பகுதியில் இந்தியாவுக்கு அடுத்த ஒரு ராணுவ பலம் கொண்ட , ஆனால் பொருளாதார ரீதியில் நலிந்த நாடு என்ற “பெயரை” பெற்றிருக்கும் பாகிஸ்தானுக்கு மேற்காசியாவின் மிகச் செல்வந்த நாடான சௌதி அரேபியாவுடன் கையெழுத்தாகியுள்ள இந்த ஒப்பந்தம் மேற்காசிய நாடுகள் மத்தியில் அதன் பிம்பத்தை சற்று உயர்த்தலாம்.
ஆனால், உண்மையில் பாகிஸ்தானுடைய ராணுவ செலவினங்களும் சரி, அதன் பாதுகாப்பு கவனமும் , இந்தியாவை நோக்கியே இருக்கின்றன, இந்தியாவை மையப்படுத்தியே அமைந்திருக்கின்றன. இது வரலாற்று ரீதியிலான ஒரு உண்மை.

இந்த நிலையில் சௌதி அரேபியாவுக்கு ஒரு பாதுகாப்பு நெருக்கடி ஏற்பட்டால் அதை பாகிஸ்தானால் எந்த அளவு சரி செய்ய முடியும் என்பது கேள்விக்குறிதான். பாகிஸ்தானுக்கும் சௌதி அரேபியாவுக்கும் புவியியல் ரீதியான இடைவெளி இருப்பதும் ஒரு யதார்த்தமான உண்மை.
மேலும், சௌதி அரேபியாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் என்பது இஸ்ரேலிடமிருந்து மட்டும் வரவில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தங்கள் உள்நாட்டு அரசியல் பிரச்சனைகளில் கத்தார் மூக்கை நுழைக்கிறது என்று சொல்லி கத்தாரை சௌதி அரேபியா, பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டுகள் ஆகிய மூன்று நாடுகளும் பல மாதங்கள் முற்றுகையிட்டது நினைவிருக்கலாம்.
அதைப் போலவே சௌதி அரேபியாவுக்கு இரானும், அதன் பினாமியாகக் கருதப்படும் யேமனில் இருந்து இயங்கும் ஹூத்தி இயக்கமும் தலைவலி கொடுத்துக்கொண்டு இருக்கும் ஷியா இஸ்லாமிய சக்திகள்.
இந்த சக்திகளிடமிருந்து சௌதி அரேபியாவுக்கு ஏற்படக்கூடிய பாதுகாப்புப் பிரச்சனைகளில், சௌதிக்கு ஆதரவாக பாகிஸ்தான் ஈடுபட அதன் ராணுவ வல்லமை போதுமா , அதன் விளைவுகள் என்னவாக இருக்கும், ஏற்கனவே காஷ்மீர் சிக்கலில் இருக்கும் பாகிஸ்தான், தேவையில்லாமல் மேற்காசிய பாதுகாப்பு சிக்கலிலும் கால் வைக்கிறதா என்ற கேள்விகள் சிக்கலானவை.

அதே போல இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே விரோதம் நீடித்துவரும் நிலையில், இன்னொரு மோதலில் சௌதி என்ன நிலைப்பாட்டை எடுக்கும் ?
சௌதி அரேபியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் கடந்த பல ஆண்டுகளாகவே சௌதி அரேபியாவுடன் நல்லுறவை மேலும் மேம்படுத்த இந்தியா எடுத்து வரும் முயற்சிகளுக்கு என்ன விதமான பாதிப்பை ஏற்படுத்தும் ?
சௌதியின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் இந்தியத் தொழிலாளர்கள். சுமார் 25 லட்சம் இந்தியர்கள் சௌதியில் பணிபுரிகிறார்கள்.
அவர்கள் தங்கள் குடும்பங்களுக்கு அனுப்பும் பணம் இந்தியா ஈட்டும் அந்நிய செலாவணியில் குறிப்பிடத்தக்க ஒரு தொகை. இதைத் தவிர இந்தியா ஏற்கனவே இஸ்ரேலுடன் ஏற்படுத்தி, கடந்த 10 ஆண்டுகளில் பலப்படுத்திவரும் உறவும் இந்த பாதுகாப்பு ஒப்பந்தத்தினால் மேலும் பலமடையக்கூடும்.
ஆனால் இந்த “எதிரியின் எதிரி என் நண்பன்” என்ற ரீதியிலான கூட்டணிகள் பிரச்சனைகளை தீர்ப்பதை விட, பிரச்சனைகளை மேலும் கடினமாக்கவே உதவும் என்ற கருத்தும் இருக்கிறது.
அதைப்போல, சௌதி அரேபியா , கத்தார் உள்ளிட்ட அரபு மற்றும் வளைகுடா நாடுகள் தம் பாதுகாப்பை உறுதி செய்ய, இது போன்ற வெளிநாட்டுக் கூட்டணிகளை ஏற்படுத்துவதைவிட , அப்பகுதி நாடுகளே சேர்ந்து ஒரு கூட்டுப் பாதுகாப்பு அமைப்பை ஏற்படுத்திக்கொள்வது பயனளிக்கும் என்று சில மத்திய கிழக்கு பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
வளைகுடா நாடுகள் கூட்டுறவு கவுன்சில் ( Gulf Cooperation Council) போன்ற பிராந்திய அமைப்புகள் இதற்கான முன் முயற்சியை சில ஆண்டுகளுக்கு முன் எடுத்தன.

அந்த முயற்சி எதிர்பார்த்த அளவில் வேர்விடாவிட்டாலும், இப்போதைய நிலையைல் அத்தகைய முயற்சிகளை மீண்டும் ஆராய நேரம் வந்திருக்கிறது என்று பிராந்திய பாதுகாப்பு வல்லுநர்கள் கருதுகிறார்கள்.
ஆனால் வளைகுடா நாடுகளிடையே ஏற்கனவே நிலவி வந்த் பொருளாதார, அரசியல் மற்று மதக் குழு போட்டிகளையும், மோதல்களையும், சமீப காலமாக, அதுவும், கடந்த இரண்டாண்டுகளில் ஏற்பட்டுள்ள பாதுகாப்புப் பிரச்சனைகள் நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவருமா என்பதை இனி வரும் காலம் காட்டும்.