செய்திகள் :

Seasonal Fevers: பரவிக் கொண்டிருக்கும் காய்ச்சல்கள்; வராமல் தடுக்க, வந்தால் மீள மருத்துவர் ஆலோசனை!

post image

'திடீர் காய்ச்சல்; உடல் அனலாய் கொதிக்கிறதே' என பக்கத்தில் இருக்கிற கிளினிக் போனால், காய்ச்சல் வந்தவர்களால் கிளினிக் நிரம்பி வழிகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் நள்ளிரவுகளில் 24 மணி நேர மருத்துவமனைகளுக்கு செல்வதையும் பார்க்க முடிகிறது.

மழையும் வெயிலும் மாறி மாறி வந்தால் காய்ச்சலும் வந்துவிடும். வருடத்தின் இறுதிக்கட்டத்தை நெருங்கும்போதும் ஊரெங்கும் காய்ச்சல், இருமல், சளித்தொல்லை என ஆரம்பித்துவிடும்.

தற்போதும் காய்ச்சல் காலம் ஆரம்பித்துவிட்டது. தற்போது என்னென்ன காய்ச்சல்கள் பரவிக்கொண்டிருக்கின்றன; வராமல் எப்படித் தடுப்பது; அறிகுறிகள்; தீர்வுகள் என்ன என சிவகங்கையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் ஃப்ரூக் அப்துல்லா அவர்களிடம் கேட்டோம்.

Seasonal Fever
Seasonal Fever

''தமிழ்நாட்டில் பருவநிலை மாறும்போது வைரஸ் தொற்றுப்பரவும். விளைவாக காய்ச்சலும் வரும்.

தற்போது இன்ஃப்ளூயன்சா ஏ வகை வைரஸ், அடினோ வைரஸ், ரெஸ்பிரேட்டரி சின்ஸிடியல் வைரஸ் (Respiratory syncytial virus), கொரோனா வைரஸ், சின்னம்மை வைரஸ், மம்ப்ஸ் எனப்படும் கூகைக்கட்டு அம்மை வைரஸ், மீசில்ஸ் எனப்படும் தட்டம்மை வைரஸ் ஆகியவை சுவாசப்பாதை வழி எளிதாகப் பரவுகின்றன.

கூடவே, ஆங்காங்கு பன்றிக்காய்ச்சலும், டெங்குவும்கூட இருக்கிறது.

இதில் இன்ஃபளூயன்சா மற்றும் அடினோ வைரஸ் வகையினால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது.

இந்த வைரஸ்களால் பாதிக்கப்பட்டால், 101 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் காய்ச்சலடிக்கும். இதனுடன் தசைவலி, கடுமையான உடல் சோர்வு, சுவாசத்தொற்றுகளான தொண்டை வலி, வறட்டு இருமல், சளியுடன் இருமல் வருவது, தும்மல், மூக்கடைப்பு, மூக்கு ஒழுகுதல் ஆகிய பிரச்னைகளும் வரும்.

Seasonal Fever
Seasonal Fever

இன்ஃப்ளூயன்சா மற்றும் ரெஸ்பிரேட்டரி சின்ஸிடியல் வைரஸ்கள், ஐந்து வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கு, குறிப்பாக ஒரு வயதுக்கும் குறைவான சிசுக்களுக்கு தீவிர நுரையீரல் தொற்றாக வெளிப்படலாம், கவனம்.

ஒரு வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு அதீத காய்ச்சலுடன் தீவிர நுரையீரல் தொற்றும் ஏற்பட்டால், அது நிம்மோனியா.

பொதுவாக மூச்சு விடும்போது வயிற்றுப்பகுதி தசைகள் மேலே இழுக்காது. ஆனால், நிம்மோனியா வந்த குழந்தைகளுக்கு நெஞ்சுப்பகுதி தசைகள் சோர்வடைந்துவிடுவதால், வயிற்றுப்பகுதி தசைகளும் சேர்ந்து வேலை செய்யும்.

இதனால், குழந்தை குழந்தை மூச்சு விடுவதற்கு திணறும். இழுத்து இழுத்து மூச்சு விடும். இந்த நிலையில், குழந்தையின் மேல் சட்டையை நீக்கி, ஒரு நிமிடத்துக்கு 20 முதல் 40 முறைக்கு மேல் மூச்சு விடுகிறதா என கவனியுங்கள். அப்படியிருந்தால் குழந்தைக்கு 'நிம்மோனியா தொற்று இருக்கிறது; மூச்சுத்திணறல் பிரச்னையும் இருக்கிறது' என்று அர்த்தம். உடனே மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.

இந்த வைரஸும் இருமல், தும்மல் வழியாகவே பரவும். இந்தத் தொற்றில் காய்ச்சலுடன் கழுத்தின் இருபுறமும் காதுகளுக்குக் கீழ் நெறிகட்டிக் கொண்டு வீக்கம் ஏற்படும். இது பெரும்பாலும் பத்து வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ஏற்படுகிறது.

Seasonal Fever
Seasonal Fever

இது மிக மிக எளிதாக சுவாசப்பாதை வழியாக பரவும். இந்தத் தொற்று ஏற்பட்டால், காய்ச்சல், இருமல், சளி, சிவந்த கண்கள், உடல் முழுவதும் தோலில் கொப்புளங்கள் இருக்கும், வாயினுள் நீல-வெள்ளை நிற மையப்பகுதி கொண்ட சிறிய சிவப்பு நிற புள்ளிகள் போல வரும்.

இந்த நோய் வராமல் தடுப்பதற்காகத்தான் 9 மாத முடிவிலும் 16 முதல் 24 மாதங்களிலும் மீசில்ஸ் ரூபெல்லா தடுப்பூசியை குழந்தைகளுக்குப் போட வேண்டும் என்கிறோம்.

இந்த நேரத்தில் பன்றிக்காய்ச்சல், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கும், குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் சற்று தீவிரத்துடன் வரலாம்.

இதைத் தடுக்க தடுப்பூசி இருக்கிறது. மருத்துவரின் பரிந்துரையின் பேரில் இதை போட்டுக்கொள்ளலாம்.

காய்ச்சல்
காய்ச்சல்

பருவமழை பொழியும் காலங்களில் கொசுக்களின் பெருக்கம் அதிகரிக்கும். விளைவு டெங்கு காய்ச்சலும் பரவி வருகிறது.

டெங்கு காய்ச்சலைப் பொறுத்தவரை, காய்ச்சல் ஆரம்பிக்கும்போதே 101 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் இருக்கும். கடும் உடல்வலி, சோர்வு, சளி, இருமல், தொண்டை வலி, தலைவலி, கண்களுக்குள் வலி, மூட்டுகளில் வலி ஆகியன இருக்கும்.

டெங்குவைப் பொறுத்தவரை முதல் மூன்று நாள்கள் காய்ச்சல் இருந்து சரியாகும். அதன்பிறகுதான் சோர்வு, தூக்கம், உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்கள் குளிர்ந்துபோதல் போன்ற அறிகுறிகளைக் காட்டும்.

உடனே மருத்துவமனை சென்றுவிட வேண்டும். இல்லையென்றால், தட்டணுக்கள் குறைந்து உடலெங்கும் சிவப்பு புள்ளிகள், பல் ஈறுகளில் ரத்தம் வருதல், மலத்தில் ரத்தம் வெளியேறுதல் என உயிராபத்து வரை ஏற்படலாம்.

இவையெல்லாம் என்பது கடந்த சில வருடங்களாக எல்லோருக்குமே தெரிந்திருக்கும். அதனால், டெங்கு காய்ச்சல் விஷயத்தில் சற்று காலதாமதம் செய்யாதீர்கள்.

டெங்கு

இது வராமல் தடுக்க, வீட்டைச்சுற்றி நன்னீர் தேங்காமல் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். குழந்தைங்களுக்கு உடல் முழுக்க மறைக்கிறபடி ஆடை அணிவியுங்கள். கொசுவலைக்குள் தூங்க வையுங்கள். பெரியவர்களும் இதையே ஃபாலோ செய்யுங்கள்.

டெங்கு காய்ச்சல் வந்தவர்களுக்கு, சுவாசப்பாதை வழியாக பரவுகிற வைரஸ் தொற்றும் ஏற்பட்டால் தீவிரமான காய்ச்சல் ஏற்படும்.

இவர்கள் காலதாமதம் செய்யாமல் உடனே மருத்துவரைப் பார்க்க வேண்டும்.

Protein
Protein

இந்த சீசனில் பரவும் வைரஸ் தொற்றுகள் இருமுவது மற்றும் தும்முவது மூலமே பரவுகின்றன. அதனால், தொற்று ஏற்பட்டவர்கள் பொது இடங்களுக்கு செல்வதைத் தவிருங்கள். இதன் மூலம் தொற்று பிறருக்குப் பரவுவதைத் தடுக்கலாம்.

அப்படியே செல்ல வேண்டிய சூழல் வந்தால், மாஸ்க் அணிந்துகொள்ளுங்கள். கொரோனாவுக்கு செய்ததைப்போலவே இந்த நேரத்திலும் கைகளை சோப் அல்லது சானிட்டைஸர் கொண்டு அவ்வப்போது சுத்தம் செய்துகொள்ளுங்கள்.

பருவ மழை பொழிய ஆரம்பித்தவுடனே புரதச்சத்து நிரம்பிய முட்டை, மாமிசம், மீன், நட்ஸ், பயறு, கடலை, சோயா போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். இது தொற்றுகளுக்கு எதிரான நோய் எதிர்ப்புசக்தியை நமக்குத் தரும்.

 டாக்டர் ஃபரூக் அப்துல்லா
டாக்டர் ஃபரூக் அப்துல்லா

பொதுவாக சீசனல் வைரஸ் காய்ச்சல் என்பது ஒரு வார காலம் வரை இருந்து, பின்னர் தானாக குறையும். பெரும்பாலும் உயிர் ஆபத்து ஏற்படாது. அதற்காக, எந்த காய்ச்சலாக இருந்தாலும் கைவைத்தியம் செய்துகொண்டு வீட்டிலேயே இருக்காதீர்கள். உடனடியாக மருத்துவரை நாடுங்கள்.

காய்ச்சல் வந்தால், உடலில் நீர்ச்சத்துக் குறையும் என்பதால் நிறைய நீர் அருந்துங்கள். தேவையென்றால், கொதிக்க வைத்து ஆறிய நீரில் ஓ.ஆர்.எஸ் கலந்து அருந்துங்கள். முக்கியமாக ஓய்வெடுங்கள்'' என்கிறார் டாக்டர் ஃப்ரூக் அப்துல்லா.

டேக் கேர் மக்களே..!

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Brain Eating Amoeba: மூளை தின்னும் அமீபா; நாமும் அச்சப்பட வேண்டுமா? - விளக்கும் மருத்துவர்

பள்ளிக்கூடத்தில் அமீபா என்கிற ஒரு செல் உயிரியைப் பற்றி நாம் எல்லோருமே படித்திருப்போம். அதன்பிறகு உயிரியல் மாணவர்கள் அதைப்பற்றி விளக்கமாகப் படித்திருப்பார்கள். அதற்கு மேல் அமீபா பற்றி நாம் யாருமே யோசித... மேலும் பார்க்க

கேரளாவில் மூளையைத் தின்னும் அமீபா தொற்று; தமிழகத்திற்கு பாதிப்பு உண்டா? - அமைச்சர் மா.சு விளக்கம்

மூளையைத் தின்னும் அமீபா பாதிப்பு என்பது தொற்றுநோய் அல்ல என்று மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.அண்டை மாநிலமான கேரளாவில் மூளையைத் தின்னும் அமீபாவால் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர... மேலும் பார்க்க