நான் பிரதீப் ஜான் கிடையாது; செங்கோட்டையன் கெடு குறித்து டிடிவி தினகரன் பதில்
பௌர்ணமியில் வரும் சந்திர கிரகணம்... கிரிவலம் செய்யலாமா? சாஸ்திரம் சொல்வது என்ன?
திருவண்ணாமலை முதலான மலைத்தலங்களில் பௌர்ணமி கிரிவலம் மிகவும் பிரசித்தி பெற்றது. திருவண்ணாமலையில் பௌர்ணமி நாளில் ஒருமுறை கிரிவலம் வந்தால் கர்ம வினைகள் தீரும் என்பது நம்பிக்கை.
திருவண்ணாமலையில் சிவனே மலையாக அருள்வதால் ஒருமுறை பிரதட்சிணம் செய்துவழிபட்டால் புண்ணிய பலன்கள் பெருகும் என்பார்கள். கிரிவலத்தில் ஒவ்வோர் அடி எடுத்து வைப்பதற்கும் ஒரு பலன் உண்டு. வறுமை விலகும். காரியத் தடைகள் நீங்கும். கர்ம வினைகள் கழிவதால் வாழ்வில் நன்மைகள் பெருகும்.
எனவேதான் நாள்தோறும் அங்கே பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக பௌர்ணமி திதியில் வலம் வருவது மிகவும் விசேஷம். அப்படிப்பட்ட பௌர்ணமி திதி இந்த மாதம் நாளை (7.9.25) அன்று வருகிறது. இந்த நாளில் அதிகாலை 1.48 முதல் மறுநாள் (8.9.25) அன்று அதிகாலை 12.32 வரை பௌர்ணமி திதி உள்ளது.

இந்த வேளையில்தான் கிரகணமும் தோன்றுகிறது. நாளை இரவு 9:51 மணிக்குத் தொடங்கி, பின்னிரவு 2:25 மணிக்கு கிரகணம் முடிவடைகிறது. இந்தக் காலத்தில் ஜபங்கள் செய்வது, பித்ருக்களுக்கு உரிய தர்ப்பணங்கள் செய்வது ஆகியன விசேஷம். கிரகண வேளையில் கிரிவலம் செல்லலாமா என்று பலரும் கேட்கிறார்கள். இது குறித்து சாஸ்திரம் சொல்வது என்ன என்பது குறித்துக் கேட்டோம்.
"கிரகண வேளையில் இறைவழிபாட்டில் நிலைத்திருக்க வேண்டும். இறைவனைத் தியானம் செய்ய வேண்டும். அவனது நாமங்களைச் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். கிரகண காலத்தில் ஒருமுறை சொல்லும் நாம ஜபம் பன்மடங்கு செய்த பலனைத் தரும் என்கிறது சாஸ்திரம்.
அந்த வகையில் கிரிவலம் என்பதும் இறைவழிபாட்டில் ஒரு அங்கம் தான். பொதுவாக கிரிவலம் செய்யும்போது அமைதியாக ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்தபடி மெதுவாக நடக்க வேண்டும். வேகவேகமாக நடைப்பயிற்சி போன்று செல்லக்கூடாது. மேலும் நடக்கும்போது ஏதேனும் சாப்பிட்டுக்கொண்டு செல்லக் கூடாது. அப்படிச் செல்வது எப்போதுமே தவறு.
கிரகண வேளையில் சாப்பிடுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று சாஸ்திரம் வலியுறுத்துகிறது. எனவே அது கிரகண காலத்தில் செய்யும் கிரிவலத்தின் போதும் பொருந்தும். அதேவேளையில் தொடர்ந்து நான்கு, ஐந்து மணி நேரங்கள் நடக்கும்போது உடல் சோர்வடையும். தண்ணீரேனும் பருக வேண்டும் என்கிற அவசியம் ஏற்படும். அதனால்தான் கிரகண காலத்தில் கிரிவலம் வேண்டாம் என்று சிலர் சொல்கிறார்கள்.
உங்களால் தண்ணீர் பருகாமலும் உணவு ஏதும் உட்கொள்ளாமலும் ஆரோக்கியமாக கிரிவலம் செய்ய முடிந்தால் தாராளமாகச் செய்யலாம். சந்தேகம் இருப்பவர்கள் ஓரிடத்தில் அமர்ந்து கிரகண வேளையில் ஜபம் செய்து கிரகணம் முடிந்ததும் நீராடிப் பின் கிரிவலம் வரலாம். தவறில்லை. ஈசனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும்" என்கின்றனர் பெரியோர்கள்.