18-ம் படி கருப்பணசாமி: `பணத்தை தர்றியா கருப்புகிட்ட வர்றியா?' - கதவு திறக்கும் வைபவம்
"உங்கிட்ட நான் கை நீட்டிக் காசு வாங்கல. வாங்கினேன்னு நீ சொன்னா அதுக்கு சாட்சி இருந்தாக் கூட்டிக்கிட்டு வா... எங்க வேண்ணா போ... எந்தக் கோர்ட்ல வேணும்னாலும் கேஸ் போடு. உன்னால ஆனதப் பாரு. என்னால் ஆனத நான் பாக்குறேன்."
"கை நீட்டிக் காசுவாங்கிவிட்டு, 'இல்லை' என்று சொல்லும் ஆளை என்ன செய்வது? ஏமாத்த மாட்டான்... நிச்சயம் கொடுத்துருவான்னு நம்பித்தானே கொடுத்தேன். இப்படி இல்லைன்னு ஒரேடியா மறுத்தா நான் எங்க போவேன்? கஷ்டப்பட்டு உழைச்ச காசு?" என்று புலம்பும் அந்த அப்பாவி மனுஷனை ஊரார் பரிதாபமாகப் பார்த்தனர்.
கோர்ட் என்பது சாட்சியங்களின் அடிப்படையில் இயங்குவது. அங்கு போனால் நிச்சயம் இந்த வழக்கு நிற்காது. மேலும் அதற்கும் செலவு செய்ய அந்த மனுஷனால முடியாது. ஊர்த் தலைவர் குறுக்கிட்டுப் பேசினார்.
"ஏம்பா... அந்த மனுஷனைப் பார்த்தாப் பொய் சொல்ற மாதிரியா இருக்கு..."
"அப்போ என்னைப் பார்த்தா பொய் சொல்ற மாதிரி இருக்கா? அப்பாவியா மூஞ்ச வச்சிக்கிட்டுப் பொய் சொன்னா நம்பிடுவீங்களா... நான் சத்தியம் பண்ணிச் சொல்றேன். அவர்ட்ட நான் காசு வாங்கல" என்று மேலும் உறுதியாக மறுத்தான் அந்த ஆள்.
"சரி... நீ வாங்கலல்ல... அப்படீன்னா பதினெட்டாம்படிக் கருப்பு சந்நிதிக்கு வா. சத்தியம் பண்ணிச் சொல்லு. நீ சொல்றத நம்புறோம்" ஊர்த்தலைவர் உறுதியாகச் சொன்னார்.
இதைக் கேட்டதும் அந்த ஆள் முகத்தில் ஒரு பதற்றம் தொற்றிக்கொண்டது.
"நான் ஏன் வரணும்... என்னால எல்லாம் அவ்ளோதூரம் வரமுடியாது. இங்கேயே வேணும்னா கற்பூரத்தைக் கொண்டுவாங்க சத்தியம் செய்றேன்." முதல்முறையாக அவன் குரல் நடுங்குவது தெரிந்தது.
"அப்பூ... இது ஊர் வழக்கம். நீ காசு வாங்கலைங்கிறது உண்மைன்னா அங்க வந்து சத்தியம் பண்ணு. ஊர்க்காரங்க ஏத்துக்கிடுறோம். முடியாதுன்னு சொன்னேன்னா... பஞ்சாயத்துல நீ பணம் வாங்கினது உண்மைன்னு தீர்ப்பு சொல்லிடுவோம். அப்புறம் நீ பணம் கட்டாமல் ஊர்க்குள்ள வாழ முடியாது. என்ன சொல்ற..."
ஊர்த்தலைவரின் கறாரான பேச்சைக் கேட்டபின் அமைதியாக நின்றான் அந்த ஆள். ஏமாந்த மனுஷன் முகத்தில் நம்பிக்கை வந்தது. கை தூக்கி அழகர்மலை இருக்கும் திசை நோக்கிக் கும்பிட்டார். மூடிய அவர் கண்களுக்குள் தலையில் உருமால், தோளில் வல்லவேட்டு, இடுப்பில் சுங்குவைத்துக் கட்டிய கச்சை, கையில் கத்தி, ஈட்டி, வல்லயம், வீச்சரிவாள், தோளில் சாத்திய கட்டாரி, காலில் சல்லடம் என்று கம்பீரமாகக் காட்சி கொடுத்தார் கருப்பர். அவர் கண்களில் கண்ணீர் பெருகியது.
"என்னப்பா உன் சௌகர்யம் எப்படி? கருப்பு கோயிலுக்கு வர்றியா இல்லை... பணம் வாங்கியதை ஒப்புகிடுறியா?" கிடுக்கிப் பிடியாகக் கேட்டார் தலைவர்.
கருப்பின் சந்நிதியில் பொய் சத்தியம் செய்வதாவது? அப்படிச் செய்து வாழ்வையே தொலைத்தவர்கள் எத்தனைபேர்... பணத்துக்கும் சொத்துக்கும் ஆசைப்பட்டு சத்தியம் செய்து பைத்தியமாகத் திரிபவர்கள் எத்தனை பேர்...
"ஐயா என்னை மன்னிச்சிடுங்க... நான் காசு வாங்கினது உண்மைதான். திருப்பிக் கொடுத்திடுறேன்" என்று சொல்லி அந்த ஆள் நடுக்கத்தோடு ஊர் மத்தியில் வீழ்ந்து வணங்கினான்.
இது ஏதோ ஒரு காலத்தில் நடந்த கதை அல்ல. இன்றைக்கும் மதுரையைச் சுற்றியிருக்கிற மக்கள் அடிக்கடிக் காணும் காட்சி. தீராத வழக்குகளுக்கெல்லாம் தீர்வு காணும் இடமாக இன்றும் திகழ்கிறது பதினெட்டாம்படி கருப்பின் சந்நிதி. காரணம் அவரே காவல் தெய்வம்.
அழகர் மலையில் அந்தக் காவல் தெய்வத்தின் சந்நிதி என்பது இரண்டு கதவுகள்தான். அதன் பின்னணியில் 18 படிகள் உள்ளன. ஆனால் அவற்றை ஆண்டுக்கு ஒருமுறைதான் தரிசனம் செய்ய முடியும். அதுவும் ஆடி மாதம் பௌர்ணமி அன்று நடைபெறும். அதுவும் சில நிமிடங்கள் மட்டுமே.
மூடிய கதவுகள் பிரமாண்ட மலர் மாலைகளால் அலங்கரிக்கப் பட்டிருக்கும். சந்தனமும் அரைத்துப் பூசப்பட்டிருக்கும். அந்த அலங்காரமே காண்பதற்கு கருப்பு விஸ்வரூபம் எடுத்து நிற்பதுபோல இருக்கும். அதன் இருபுறங்களிலும் பிரமாண்டமான அரிவாள்கள் சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கும். எப்போது கதவு திறக்கப்படும் என்று பல ஆயிரம் பக்தர்கள் காத்திருப்பார்கள். கதவு திறக்கப்பட்டதும், 'கருப்பா... கருப்பசாமி' என்று பக்தர்களின் கோஷம் அழகர் மலையில் மோதி எதிரொலிக்கும். அந்த கணம் அந்த இடமே தேவலோகம்போல் இருக்கும். திறக்கப்பட்ட கதவுகளுக்குப் பின் இருக்கும் பதினெட்டு படிகளிலும் ஜோதி ஏற்றப்பட்டிருக்கும்.
கைகளைத் தூக்கி பக்தர்கள் கும்பிட்டு நிற்பார்கள். எல்லோரும் தரிசனம் செய்ய வேண்டும் என்று வழிவிட்டு நகரும் பக்தர்களின் புரிதல் சிறப்பாக இருக்கும். சில நிமிடங்களில் மீண்டும் கதவுகள் மூடப்படும்.

அந்தக் கதவுகள் மூடப்படும்போது தம் பிரச்னைகளும் மூடப்படுவதாக பக்தர்கள் உணர்வார்கள். மனதில் வாழ்வில் இருந்த பயங்கள் எல்லாம் அற்றுப்போகும். புதிய நம்பிக்கை பிறக்கும். அடுத்த ஓராண்டுக்கான உற்சாகம் மனதில் பிறக்கும்.
இப்படிப்பட்ட அற்புதமான ஒரு தருணம் இந்த ஆண்டு வரும் 9.8.25 அன்று நடைபெற இருக்கிறது. மாலை ஐந்து மணிக்கு மேல் ஆறு மணிக்குள் கதவு திறக்கும் வைபவம் நடைபெறும் என்று அறிவித்திருக்கிறார்கள்.
அழகர்மலையில் பெருமாள் எவ்வளவு விசேஷமோ அவ்வளவு விசேஷம் கருப்பருக்கும் உண்டு. கருப்பரைப் பற்றிய பல நம்பிக்கைகளும் சம்பவங்களும் இன்றும் உயிர்ப்போடுதான் இருக்கின்றன. அப்படிப்பட்ட அந்த காக்கும் கடவுளான பதினெட்டாம்படி கருப்பணசாமியை வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஆகஸ்ட் 9 அன்று அழகர்மலை சென்று வழிபட்டு வாருங்கள். இயலாதவர்கள் மனதிலேயே அவரை வணங்குங்கள். வாழ்க்கை வளமாகும்.