``அடிப்படை உரிமைகள் எதுவும் மீறவில்லை'' - டெல்லி நீதிபதியின் மனுவை தள்ளுபடி செய்...
கவின் கொலை: சிபிசிஐடி காவலுக்கு சுர்ஜித், தந்தை சரவணன் தரப்பு எதிர்ப்பு
சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணன் இரு வரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸாரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு இருவரது சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் ஐடி ஊழியர் கவின் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கே.டி.சி. நகரைச் சேர்ந்த சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணன் இரு வரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸார் தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
கவின் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணன் ஆகிய இருவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஐ.டி. ஊழியரான கவின் செல்வகணேஷ்(27), பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் கடந்த ஜூலை 27ஆம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவரது காதலியின் தம்பி சுர்ஜித் கைது செய்யப்பட்டார். காவல் உதவி ஆய்வாளர்களான அவரது தந்தை சரவணன், தாய் கிருஷ்ணகுமாரி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இதையடுத்து ஜூலை30-இல் கைது செய்யப்பட்ட சரவணனுக்கு ஆக.8 வரையும் சுர்ஜித்துக்கு ஆக.14 வரையும் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகுமாரி ஆக.15-க்குள் சிபிசிஐடி காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டுமென சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவ்வழக்கில் 8 வாரங்களுக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டதையடுத்து, பாளையங்கோட்டை காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் முருகன் மற்றும் ஒரு காவலரிடம், சிபிசிஐடி போலீஸார் புதன்கிழமை விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், சுர்ஜித், அவரது தந்தை சரவணன் ஆகிய இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜ்குமார் நவ்ரோஜ், காவல் ஆய்வாளர் உலகராணி தரப்பில் திருநெல்வேலி மாவட்ட 2-ஆவது கூடுதல் அமர்வு (வன் கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம்) நீதிமன்றத்தில் புதன்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இவ்வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்த நிலையில் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க சுர்ஜித் மற்றும் சரவணன் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வருகின்ற 11ஆம் தேதி வழக்கு விசாரணை ஒத்திவைத்து நீதிபதி ஹேமா உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து சுர்ஜித் மற்றும் எஸ்ஐ சரவணன் ஆகிய இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டனர்.