தேனிலவுக் கொலை: சோனம் முக்கிய குற்றவாளி! 790 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்!!
நாட்டையே உலுக்கிய மேகாலயா தேனிலவுக் கொலை வழக்கில், சிறப்பு விசாரணைக் குழுவினர், விசாரணையை முடித்து, 790 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.
ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கில், அவரது மனைவி சோனம் ரகுவன்ஷி, காதலர் ராஜ் குஷ்வாஹா உள்ளிட்ட ஐந்து பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மேகாலயா காவல்துறை கூறுகையில், இந்தூரைச் சேர்ந்த தொழிலதிபரான ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கில், 790 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஐந்து பேரும் தற்போது கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள சோனம் மற்றும் ராஜ் தவிர, மற்ற மூன்று பேரும், மே 23ஆம் தேதி தேனிலவு அழைத்துச் சென்று கணவரைக் கொலை செய்ய, மனைவிக்கு உதவியதாகக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொலை செய்தல், சாட்சிகளை மறைத்தல், குற்றச் செயலில் ஈடுபடுவதற்காக ஒன்றாக சதி செய்தல் உள்ளிட்டக் குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தடயவியல் அறிக்கைகள் வெளிவந்ததும், சோனம் மறைந்திருக்க உதவியக் குற்றச்சாட்டு உள்ள இணைக் குற்றவாளிகள் மூன்று பேர் மீது, கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் காவல்துறை கூறியிருக்கிறது.