செய்திகள் :

Seeman: `சீமான் Vs வருண்குமார் ஐ.பி.எஸ்' - மோதல் முழு விவரம்

post image

கடந்த ஜூலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெற்றது. அப்போது அந்த தொகுதியில் களம் கண்ட நா.த.க வேட்பாளர் மருத்துவர் அபிநயாவை ஆதரித்து, அக்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளரான சாட்டை துரைமுருகன் பிரசாரம் செய்தார். அப்போது மறைந்த முன்னாள் முதலவர் கருணாநிதி தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சாட்டை துரைமுருகன் மீது திருச்சி சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.

திருச்சி எஸ்.பி வருண்குமார்

பிறகு தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வைத்து தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். அப்போது பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் உள்பட 5 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பிறகு திருச்சி முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், 'சாட்டை துரைமுருகன் நீதிமன்ற காவலுக்கு செல்ல தேவையில்லை' எனக் கூறி விடுவித்தது. இந்த பரபரப்புக்கு மத்தியில் நா.த.க நிர்வாகிகள் குறித்து சீமான் பேசியதாக சில ஆடியோ பதிவுகள் வெளியாகின.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த சீமான், "ஆடியோ பதிவுகள் வெளியாவதற்கு பின்னணியில் திருச்சி எஸ்.பி வருண்குமார் இருக்கிறார். சாட்டை துரைமுருகனை கைது செய்தபோது அவரது செல்போன் கைப்பற்றப்பட்டது. அப்போது அதிலிருந்த ஆடியோக்களை எடுத்து பொதுவெளியில் பரப்பினர்" எனக் கொதித்தார். பிறகு பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய சீமான், "ஒரு எஸ்.பி தொடர்ச்சியாக விளையாடி வருகிறார். எங்கள் மீது அவருக்கு வெறுப்பு உள்ளது. மேலிடம் கொடுத்த அழுத்தத்தில்தான் துரைமுருகன் மீது வழக்குப் போட்டேன் என்கிறார். இன்னும் எத்தனை நாள் மேலிட ஆதரவில் இருப்பீர்கள்?" எனக் கேள்வியெழுப்பினார். அப்போது சாதி ரீதியாகவும் சீமான் சில விஷயங்களைப் பேசியதாகக் செய்திகள் வெளியாகின.

கைதுசெய்யப்பட்ட சாட்டை துரைமுருகன்

இதையடுத்து வருண் குமார் தனது எகஸ் பக்கத்தில் சீமான் பேசிய வீடியோவுடன், பாரதியாரின், 'சாதிகள் இல்லையடி பாப்பா' என்ற பாடலைக் குறிப்பிட்டு பதிவு ஒன்றை போட்டிருந்தார். இதில் கடுப்பான சீமான் மீண்டும் வருண்குமாரை விமர்சனம் செய்தார். இதையடுத்து தனது வழக்கறிஞர் மூலம் வக்கீல் நோட்டீஸ் ஒன்றை சீமானுக்கு வருண்குமார் அனுப்பினார். பிறகு அவர் வெளியிட்ட எகஸ் பதிவில், "சீமானுக்கு கிரிமினல் அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன். நீதிமன்றத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. பொதுவெளியில் சீமான் பேசும் பேச்சுக்களை மக்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள்" எனத் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சீமான், "அவர் எனக்கு எதிரி அல்ல. ஐ.பி.எஸ் படித்தால் அதற்குரிய வேலையை மட்டும் பார்க்க வேண்டும். துரைமுருகனை கைது செய்தபோது இரண்டு முறையும் செல்போன்களை பறித்துள்ளனர். அந்த செல்போனில் உள்ள உரையாடல்களை எடுப்பதுதான் ஓர் ஐ.பி.எஸ் அதிகாரியின் வேலையா?. என்னுடைய கட்சிக்காரர்களிடம் நான் பேசுவதில் அவருக்கு என்ன பிரச்னை?. துரைமுருகனின் செல்போனில் இருந்து ஆடியோவை எடுத்து வெளியில் கசியவிட்டதே வருண்குமார்தான். அவர் நோட்டீஸை சட்டரீதியாக நீதிமன்றத்தில் சந்திக்க உள்ளேன்" என்றார்.

சீமான்

இதையடுத்து சமூக வலைதளங்களில் சிலர் வருண்குமாருக்கு எதிராக பதிவுகளை வெளியிட்டதாக சர்ச்சை வெடித்தது. இதில் 22 பேர் மீது திருச்சி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதில் இருவர் கைது செய்யப்பட்டனர். இந்த சூழலில்தான் சண்டிகரில் ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கான மாநாடு நடைபெற்றது. அதில் பேசிய வருண்குமார், "நாம் தமிழர் கட்சி பிரிவினைவாத கட்சி, அது தடைசெய்யப்பட வேண்டிய ஒன்று. அக்கட்சிக்கு உலகம் முழுவதும் ஆதரவாளர்கள் உள்ளனர். அக்கட்சியினரின் சைபர் குற்றங்களால் நானும் என் குடும்பத்தாரும் பாதிக்கப்பட்டுள்ளோம். அந்த கட்சியினர் என் மனைவி, குழந்தைகள் புகைப்படத்தை மார்பிங் செய்து பொதுவெளியில் நா.த.க-வினர் பரப்புகிறார்கள்" என்றார்.

வருண் எக்ஸ் பதிவு

இதில் சூடான சீமான், "இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து 13 ஆண்டுகளாக இந்தக் கட்சியை நடத்துகிறோம். தனித்து நின்று அங்கீகாரம் பெற்ற கட்சியாக நாம் தமிழர் உள்ளது. திடீரென பிரிவினைவாத இயக்கம், கண்காணிக்க வேண்டும் என்றால் இவர் தான் நாட்டை ஆள்கிறாரே?. பிரதமர், உள்துறை அமைச்சர் பங்கேற்ற விழாவில் இவர் பேசியது மட்டும் பொதுவெளியில் வருகிறது. மோதுவோம் என்றாகிவிட்டது, மோதிப் பார்த்துவிடுவோம்" என்றார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய வருண்குமார், "நான் சாதிரீதியாக செயல்படுவதாகக் கூறியும் என் குடும்பப் பெண்களை மார்பிங் செய்தும் நாம் தமிழர் கட்சியினர் செயல்பட்டுள்ளனர்.

நீதிமன்றம்

ஆனால், அதை அவரது கட்சியினர் செய்யவில்லை என சீமான் கூறுகிறார். கைதான நபர்கள் அவரது கட்சி அலுவலகத்தில்தான் வேலை பார்த்து வருகின்றனர். நா.த.க நிர்வாகிகள் மீது நான் எடுத்த நடவடிக்கைக்கு என் பெற்றோரும், மனைவியும் என்ன செய்தார்கள்?. ஓய்வு பெற்ற பிறகு பார்த்துக் கொள்கிறேன் என சீமான் கூறுகிறார். இது மிரட்டல் தானே?. தொழிலதிபர் ஒருவர் மூலமாக தூது அனுப்பிய சீமான், தனி காரில் வந்து தன்னிடம் மன்னிப்பு கேட்பதாக கூறினார்" என்றார். இதனால் மீண்டும் இந்த விவகாரம் விவாதத்தை கிளப்பியது.

இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சீமான், "நான் யாரிடமும் மன்னிப்பு கேட்க முயற்சிக்கவில்லை. என்னுடைய பரம்பரையில் மன்னிப்புக் கேட்கும் வழக்கம் யாருக்கும் இல்லை. தவறு செய்தது அவர்தான். அவர் ஏதோ காமெடி செய்து கொண்டிருக்கிறார். அவர் ஒரு சாதாரண டிஐஜியாக இருக்கிறார். அவர் டிஜிபியாக கூட வரட்டும். அதனால் எங்களுக்கு என்ன?. அவர்தான் அந்த தொழிலதிபரை அனுப்பினார்" என்றார். இதனால் மீண்டும் இருவருக்கும் இடையிலான பிரச்னை பெரிதாக வெடித்திருக்கிறது.

Canada: பதவி விலகுகிறாரா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ? - பரபரக்கும் தகவல்கள்... என்ன நடக்கிறது அங்கே?

கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை ராஜினாமா செய்யவிருக்கிறார் எனத் தகவல் பரவிவருகிறது. இது குறித்து அவர் உறுதியான முடிவை எடுக்கவில்லை எனினும், ராஜினாமா செய்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக ராய்டர்ஸ... மேலும் பார்க்க

ஆளுநர் R N Ravi Vs DMK மீண்டும் மோதல், TN Assembly-ல் நடந்தது என்ன? | Imperfect show | Vikatan

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* - வந்தார்... சென்றார் ஸ்பூஃப்.* - TN சட்டமன்றம்: "யார் அது சார்?" சட்டையில் அச்சிடப்பட்ட மேற்கோள், அதிமுகவுடன்?* - ஆளுநர் உரை: ஆளுநர் உரை நிகழ்த்தாமல் பேரவைக்கு வந்து வ... மேலும் பார்க்க

`அதிஷி தனது தந்தையையே மாற்றிவிட்டார்' - பாஜக வேட்பாளர் மீண்டும் சர்ச்சை... அழுத டெல்லி முதல்வர்

ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவரும் டெல்லியில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இத்தகைய சூழலில், கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் பகுஜன் சமாஜ் எம்.பி டேனிஷ் அலிக்கெதிராக வகுப்புவாத கரு... மேலும் பார்க்க

`திமுக ஓட்டை விழுந்த கப்பல் ஆகிவிட்டது...' - செல்லூர் ராஜூ விமர்சனம்

"கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியதற்கு திமுக-வின் நாளிதழான முரசொலியில் முக்கால் பக்கம் ஒப்பாரி வைத்துள்ளனர்..." என்று செல்லூர் ராஜூ கடுமையாக விமர்சித்துள்ளார்.கே.பாலகிருஷ்ணன்மதுரை புதுவிளாங்குடி பகுதிய... மேலும் பார்க்க