Seeman: "நாம் தமிழர் கட்சியைத் தடை செய்ய வேண்டும்" - தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி மனு; பின்னணி என்ன?
"நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று டெல்லி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க ஒருங்கிணைப்புக் குழுவிலுள்ள புகழேந்தி மனு அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியிலுள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த புகழேந்தி அளித்துள்ள மனுவில், "தமிழ்நாட்டில் நடைபெறும் ஈரோடு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பொதுக் கூட்டங்களில் பேசும்போது கடுமையான, மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்.
திராவிட இயக்கத்தின் ஒப்பற்ற தலைவராக விளங்கும் தந்தை பெரியார் உள்ளிட்ட திராவிட இயக்க தலைவர்களைக் கொச்சைப்படுத்தி ஏளனமாகப் பேசுவது மட்டுமின்றி, மதம் ஜாதி, இனம் எனப் பேசி கலவரத்தை ஏற்படுத்தத் தொடர்ந்து முயன்று வருகிறார்.
குறிப்பாக, தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு எதிராக, 'குண்டு கையில் இருக்கிறது. அதை இன்னும் வீசவில்லை. என் தலைவன் கொடுத்த அந்த குண்டை வீசினால் முற்றிலுமாகப் பற்றி எரிந்து விடும். அங்குப் புல் பூண்டு கூட முளைக்காது. ஒரு கோடி எரிமலையைக் காத்த தீதான் எனது தலைவன். நாங்கள் கொளுத்திப் போட்டுட்டு போயிடுவோம். தமிழகமே பற்றி எரியும்' என ஈரோடு இடைத்தேர்தல் பிரசார மேடையில் பேசியுள்ளார். மேலும், கொலை வெறியில் உள்ளதாகவும் ஆவேசமாக மிரட்டி உள்ளார்.
இவரைப் போலவே இவரது கட்சியின் கொள்கை பரப்புச்செயலாளர் சாட்டை முருகன் என்பவர், பிரசார மேடையைப் பயன்படுத்திச் செருப்பைத் தூக்கி பொதுமக்களிடம் காண்பிக்கிறார். அசிங்கமான வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசி வருகிறார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பெயரைப் பயன்படுத்தி மிரட்டி வருகிறார், இவருடைய நடவடிக்கைகள் அனைத்தும் பெரிய கலவரத்தை ஏற்படுத்தும் முயற்சி எனப் புரிந்து கொள்ள முடிகிறது. அமைதியான முறையில் தேர்தல் நடத்த முயலும் தேர்தல் ஆணையத்தின் சட்ட விதிகளுக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறார். ஆகவே இவரின் நாம் தமிழர் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்து இவரது இயக்கத்தைத் தடை செய்ய வேண்டும்" என்று தனது மனுவில் குறிப்பிட்டுள்ள புகழேந்தி, சீமான் பேசிய ஆதாரங்களை மனுவில் இணைத்துள்ளார்.
இந்த மனுவைத் தலைமைத் தேர்தல் ஆணையம், தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம், ஈரோடு மாவட்ட ஆட்சியர், காவல்துறை தலைவர் ஆகியோருக்கும் அளித்துள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb