ASC: ரவி வர்மன் இணைந்த அமெரிக்க சங்கத்தின் சிறப்பு என்ன? - அதில் இணைவது ஏன் கடி...
Seeman: ``சிங்கள அரசு ஈழத்தில் செய்ததை சீமான் தமிழ்நாட்டில் செய்கிறார்' - ஈழத்தமிழர் சபேசன் பேட்டி
சமீபகாலமாக தமிழகத்தில் பெரியார் குறித்த உரையாடல் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. ஈழத்தமிழர் vs பெரியார் என்று உரையாடல் தொடர்ந்து நடந்து கொண்டிருக்க பெரியாரை ஈழத்தமிழர்களும், புலம்பெயர்ந்த தமிழர்களும் எப்படியாக பார்க்கிறார்கள் என்பது குறித்த புலம்பெயர்ந்த தமிழரான ஜெர்மனியில் வாழும் ஈழத்தமிழர் சபேசன் நம்மிடம் உரையாடுகிறார்.
விடுதலைப்புலிகள் பெரியாரை எப்படி பார்த்தார்கள் ?
" எனக்குத் தெரிந்த வரை விடுதலைப்புலிகள் பெரியாரைப் பற்றி பொதுவெளியில் பேசியது கிடையாது. விடுதலைப்புலிகளோட அலுவலகம் பெரியார் திடலில் தான் இருந்தது. கூட்டங்களிலோ, பொது மேடைகளிலோ, அறிக்கைகளிலோ தாங்கள் பெரியாரின் பாதையில் வந்தவர்கள் என்று குறிப்பிட்டது கிடையாது. அவர்கள் குறிப்பிடவில்லையே தவிர பெரியார் முன் மொழிந்த விடயங்களைத்தான் விடுதலைப்புலிகள் செய்தார்கள். பெரியார் சொன்னார் இவர்கள் செய்தார்கள் என்று நாங்கள் சொல்லுவோம். பெண் விடுதலையாகட்டும், சாதி ஒழிப்பாகட்டும் நடைமுறைப்படுத்தினார்கள். அவர்கள் பல விடயங்களை பெரியாரிடமிருந்து பெற்றிருக்க வாய்ப்பிருக்கிறது. ஆரம்ப கட்டத்திலிருந்து அவர்கள் பெரியாரிய தோழர்களோடு தொடர்போடிருந்தார்கள். தமிழகத்தில் இருந்து கொண்டு கருப்புச்சட்டை அணிந்துகொண்டு பல்வேறு உதவி செய்தார்கள். சிறை சென்றார்கள். இவர்கள் யாரென்று விடுதலைப்புலிகள் தேடாமலா இருப்பார்கள். பெரியாரிய கருத்தியலை உள்வாங்கி ஈழத்துக்கு ஏத்த வடிவத்தை அவர்கள் ஈழத்தில் செய்தார்கள் என்றே சொல்வேன்".
இலங்கையில் டொமினிக் ஜீவா பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தார். இலங்கையில் சுயமரியாதை இயக்கம் எப்படி இருந்தது ?
" இலங்கை திராவிடர் முன்னேற்றக் கழகமும் கம்யூனிஸ்ட் இயக்கமும் பல்வேறு போராட்டங்களை நடத்தியது. ஆலய நுழைவுப் போராட்டம், பகுத்தறிவு துண்டுப் பிரசுரங்களை வெளியிடுவது போன்ற பலவற்றைச் செய்தது. டொமினிக் ஜீவா இலக்கியத்தின் ஊடாகத்தான் அறிமுகமாகிறார். 1978 ஆம் ஆண்டு தந்தை பெரியாருடைய 100வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்ட போது அவர் இலங்கையில் தந்தை பெரியாரைப் பற்றி ஒரு கட்டுரை எழுதுகிறார். அதில் அவர் பெரியார் எப்போதோ இந்த சமூகப் போராட்டங்களைத் தொடங்கிவிட்டார். இலங்கையில் உள்ளவர்களுக்கு இப்போது தான் இந்த ஞானோதயம் வந்திருப்பதாகவும், பெரியாரைப் போல களத்தில் இறங்கிப் போராடுவதற்கு இங்குள்ளவர்களுக்கு துணிவும் கிடையாது. முதுகெலும்பும் கிடையாது தந்தை பெரியாரைப்போல போராடுங்கள் என்று எழுதி இருந்தார்".
ஈழத்தில் முன்பு செயல்பட்ட தீவிர இடதுசாரி ஆயுதக்குழுக்கள், திராவிடக்கட்சிகள் தான் போராட்டத்தை மட்டுப்படுத்தியதாக சிலர் பேசுவதைக் கேட்க முடிகிறதே அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் ?
" அப்படி ஒரு பார்வை தமிழ்நாட்டிலும் கூட இருக்கிறது. அது ஒரு நீண்ட விவாதத்துக்கு உரியது. இவர்களுடைய பார்வை சரியென்றும் தவறென்றும் சொல்ல மாட்டேன். அந்தந்த கள யதார்த்தங்களைப் பொறுத்தது".
சீமானின் உரையாடலில் இருந்து அவர் விடுதலைப்புலிகளோடு நெருங்கியத் தொடர்புடையவரென்கிறார். பிரபாகரனோடு நெருங்கி நட்பு பாராட்டியிருக்கிறார், போர் உச்சத்தில் இருந்த சமயத்தில் விடுதலைப் புலிகளின் விருந்தோம்பலில் கலந்து கொண்டதாகப் பேசியிருக்கிறார். அந்த மாதிரி நடக்கவே இல்லை என்கிற பேச்சும் விவாதிக்கப்படுகிறது. இதில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறது என்பது பற்றிச் சொல்லுங்கள் ?
"இதைப்பற்றி பலவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன. 2006 காலகட்டத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பல நாடுகளைச் சேர்ந்தவர்களை நேரில் சந்தித்தார். தமிழ் நாட்டிலிருந்தும் பலரைச் சந்திந்தார். அவர்களைப் போல் சீமானும் பிரபாகரன் சந்தித்து புகைப்படம் எடுத்திருக்கலாம். இப்போது உள்ள உண்மையா பொய்யா என்பதை தொழில்நுட்ப வல்லுநர்கள் தான் சொல்ல வேண்டும். அவர் படமெடுப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது ஆனால் அவர் சொல்கிற மற்றைய கதைகளை நம்புவதா? வேண்டாமா? என்று எனக்குத் தெரியவில்லை. அவர் சொல்வது எல்லாமே உண்மையாக இருக்கட்டும் ஈழத்திலிருந்த 14 நாட்களும் இதைத்தான் பெற்றுக்கொண்டு போனீர்களா என்ற கேள்விதான் இருக்கிறது. நாங்கள் பிரபாகரனை ஒரு தத்துவமாகத்தான் பார்க்கிறோம். அந்தத் தத்துவத்தை கடத்துவதற்கு பதிலாக இவர் என்ன செய்தார் என்பதுதான் கேள்வி. ஒரு தனியரசை 30 ஆண்டுகள் நடத்தி சமூக சீர்திருத்ததைச் செய்த தலைவரின் தத்துவத்தை பக்கத்தில் இருக்கின்ற அதே மொழி பேசுகிற மக்களிடம் எப்படிக் கடத்துகிறார் என்பதுதான் முக்கியமாகப் பார்க்கணும். அதை செய்ய இவரால் முடியாது. அவரை இயக்குபவர்கள் அதைச் செய்ய அனுமதிக்கவும் மாட்டார்கள்".
சீமானை இயக்குபவர்கள் என யாரைக் குறிப்பிடுறீர்கள்?
"அவரை ஒரு குறிப்பிட்ட அதிகார மையம் இயக்குகிறதாக நான் முழுதாக நம்புகிறேன். ஒரு பெரும் தலைவரை இங்க இப்படித்தான் காட்டணும் வேறெந்த மாற்றமும் வரக்கூடாது அங்கே உள்ளவர்கள் ரசிகர் மனப்பாங்கோடு தான் பார்க்க வேண்டும் என்று இயக்குகிறது. எங்களுக்கெல்லாம் பெரியார் விடுதலைப்புலிகளின் இதழ்களைப் படித்துத்தான் அறிமுகம் ஆகிறார். தமிழ்ச்சூழலில் தமிழர்களுக்கென்று சுதந்திரமான தனிநாடு, பெண் விடுதலை, சாதி ஒழிப்பு, புராண இதிகாசத் தன்மைகள் இந்த நான்கையும் எதிர்த்த தலைவர்கள் தந்தை பெரியாரும் தலைவர் பிரபாகரனும் தான். இவர்களைத்தவிர வேறு யாரும் கிடையாது. அவரால் இந்தக் கதைகளைத்தான் சொல்ல முடியும். கதைகளைச் சொல்லி கைத்தட்டல் வாங்கி இடையிடையே பிரபாகரனின் பிள்ளைகள் என்று சொல்லி மற்ற சினிமா ஹீரோக்களைப் போல தலைவர் பிரபாகரனையும் ஹீரோவாகத்தான் காட்டமுடியும். இதைத்தான் இவர் செய்கிறாரே தவிர தத்துவமாக கடத்துவது கிடையாது. அவர் அப்படி செய்தால் அவருக்கு சிக்கல் வரும்."
தமிழர்களாக ஒருங்கிணைவதற்கு திராவிடமும் பெரியாரும் தான் தடையாக இருப்பதாக குறிப்பிடுகிறார்களே அதைப்பற்றிச் சொல்லுங்கள் ?
"கலைஞர் அளவிற்கு தமிழ்ப்பற்று பேசியவர்கள் யாரும் தமிழ்நாட்டில் கிடையாது. இவர் பேசுவது முழுவதும் இனவாதம். சீமான் இருக்கின்ற தமிழர்களையெல்லாம் குறைத்துக் கொண்டிருக்கிறார். நான் சீமானை எந்த இடத்தில் எதிர்க்க வேண்டுமென்று முடிவெடுத்தேனென்றால் சிங்களப் பேரினவாதம் எங்களைப் பார்த்து என்னவெல்லாம் சொன்னதோ அத்தனையையும் அவர் அங்கிருக்கும் சிறுபான்மை சமூகங்களைப் பார்த்துச் சொல்கிறார். தமிழர்கள் தான் எல்லா இடத்திலும் இருக்கிறார்கள் என்று சொல்லி சொல்லித்தான் சிங்கள அரசு எங்களை இன அழிப்பு செய்தது. அதே மொழியை தமிழ்நாட்டில் 400, 500 ஆண்டு காலமாக வாழும் மக்களைப் பார்த்து பேசுகிறாரென்றால் அதைப்பார்த்துக் கொண்டு அறமுள்ள எந்த மனிதனும் சும்மா இருக்க முடியாது."
சீமான் போர் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் தான் ஈழத்திற்கு வந்திருக்கிறார். பின்னால் புகைப்படங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தவறான எண்ணத்திலா வந்திருக்க முடியும் ?
" அவருடைய எண்ணமே தவறு என்பதை நான் நம்ப வில்லை. அவரை யாராவது தவறாக கூட நம்ப வைத்திருக்கலாம். ஈழப்போராட்டம் அழிவிற்கு வந்த நேரத்தில் தமிழ்நாட்டிலே இருந்த இளைஞர்களுக்கு யார்மீது கோபம் வந்தது. மாபெரும் ஒரு விடுதலை இயக்கத்தின் அழிவிற்கு ஒரு மாநிலத்தின் முதலமைச்சரா காரணமாக இருக்க முடியும். எங்களுடைய உண்மையான எதிரிகள் மிக பலமானவர்கள் அவர்களை எதிர்க்க முடியாது. அதனால் பலவீனமானவர்களை எதிர்த்தார்கள். அதைத்தான் சீமானும் செய்கிறார். இதுதான் காரணம் நீ வந்தால் இதை மாற்றலாம் என்று யாரோ அவரை நம்ப வைத்திருக்கலாம் அல்லது அவராகவே விலை போய் அதைச் செய்திருக்கலாம். சீமான் எங்களுக்கு ஒரு பெரியாரிய வாதியாகத்தான் அறிமுகமாகிறார். விடுதலைப்புலிகள் ஆதரித்த சீமான் ஒரு பெரியாரிஸ்ட். சீமான் ஏறுகின்ற மேடைகளிலே பெரியார் என்ற சொல்லை உச்சரிக்காமல் இறங்கமாட்டார். நாங்கள் இங்கே நடைமுறைப்படுத்துகிற கொள்கைகளை தமிழ்நாட்டிலே பேசியவர் பெரியார். அந்த பெரியார் வழியைப் பின்பற்றுகின்ற துடிப்புமிக்க இளைஞன் என்பதால் தான் விடுதலைப்புலிகள் அவரை ஆதரித்தனர். எந்தக் காரணத்திற்காக ஆதரித்தார்கள அதை மாற்றிருப்பது துரோகம் தானே. அன்றைக்கு குக்கிராமங்கள் தோறும் தலைவரைக் கொண்டு போய் சேர்த்தது திராவிட இயக்கங்கள். இவருக்கே விடுதலைப்புலிகளை திராவிட இயக்கங்கள் சொல்லித்தானே தெரியும். 2009க்கு பிறகு பிறந்தவர்கள் தலைவரைக் கொண்டு போய் சேர்த்தது சீமான் என்று தான் நம்புகிறார்கள். எந்தக் காலக்கட்டத்தில் தலைவருடைய பெயரை உச்சரிக்க முடியாதோ அந்தக் காலத்தில் உச்சரித்தவர்கள் தான் போற்றுதலுக்குரியவர்கள். தமிழ்நாட்டு அரசியலில் நாங்கள் எந்த இடத்திலும் குழப்பிவிடக்கூடாது என்பதில் தலைவர் பிரபாகரன் கவனமாயிருந்தார். அவர் ஒருநாளும் தமிழ்நாட்டு அரசியல் பற்றி கருத்து சொன்னது கிடையாது. ஆனால் இன்றைக்கு எங்களுடைய தலைவர் பெயரை இடைத்தேர்தல்களில் பயன்படுத்துகிறார்கள். அவர் வென்றாலும் தோற்றாலுமே எங்களுக்கு தோல்வி தான். இன்றைக்கு இவர் இப்படியான ஒரு நிலைக்கு வந்திருக்கிறார் என்றால் அதுக்கு பின்னால் ஒரு சக்தி இருக்க வேண்டும்."
இவ்வாறு மிக விரிவாக உரையாடிய சபேசனின் முழுமையான உரையாடலை வீடியோவில் காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.