Serial Update: வரிசையாக வெளியேறும் நடிகர்கள்; `சந்தியா ராகம்' சீரியலில் என்ன நடக்குது?
ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் `சந்தியா ராகம்' தொடரிலிருந்து அடுத்தடுத்து நடிகர்கள் வெளியேறுவது சின்னத்திரை வட்டாரத்தில் ஒருவித சலசலப்பை உருவாக்கியுள்ளது.
'சந்தியா ராகம்' ஜீ தமிழ் சேனலில் கடந்தாண்டு அக்டோபர் மாதத்திலிருந்து ஒளிபரப்பாகி வருகிற ப்ரைம் டைம் சீரியல். நடிகை சந்தியா, சுர்ஜித், அந்தரா, வி.ஜே.தாரா உள்ளிட்டோர் நடித்து வந்த நிலையில் சீரியல் ஆரம்பித்த கொஞ்ச நாளிலேயே தாரா வெளியேறினார். இவரது வெளியேற்றத்துக்குத் தனிப்பட்ட காரணம் எனச் சொல்லப்பட்டது. தொடர்ந்து சீரியலின் ஒளிபரப்பு நேரம் 7 மணியிலிருந்து 9.30க்கு மாற்றப்பட்டது.
இருந்தும், இன்னும் மாற்றங்கள் மட்டும் நின்ற பாடில்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த ஒரு மாதத்துக்குள் மட்டும் முக்கிய கேரக்டர்களில் நடித்து வந்த மூன்று ஆர்ட்டிஸ்ட்டுகள் மாறியிருக்கிறார்கள்.
முதலாவதாக தொடரில் நடித்து வந்த 'பிக்பாஸ்' மணிகண்டன் மனைவி சோபியா கடந்த சில தினங்களுக்கு முன் வெளியேறினார். சில காரணங்களால் தன்னால் சீரியலில் தொடர்ந்து நடிக்க முடியாது எனக் கூறிவிட்டு அவரேதான் வெளியேறியதாகக் கூறப்படுகிறது.
சோபியாவின் வெளியேற்றம் நிகழ்ந்த அடுத்த சில தினங்களிலேயே நடிகர் நவீனும் தொடரை விட்டு விலகுவதாக அறிவித்தார். இவரது வெளியேற்றத்துக்கு உண்மையான காரணம் என்பது இதுவரை தெரியவில்லை.
இந்தச் சூழலில் தற்போது 'சீனு' கதாபாத்திரத்தில் நடித்து வந்த தொடரின் ஹீரோ சுர்ஜித் குமார் சீரியலில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்திருக்கிறார்.
'கடவுள் எல்லாத்தையும் ஒரு காரணத்துக்காகத்தான் செய்கிறார்' எனக் குறிப்பிட்டு தொடரிலிருந்து தான் விலகுவதை உறுதிப்படுத்தியிருக்கிற அவர், 'தன் சொந்தக் குடும்பத்தை விட அதிகமாக 'சந்தியா ராகம்' குடும்பத்தை நேசித்ததாகவும் கூறியிருக்கிறார்.
கடந்த ஒரு மாதத்திற்குள்ளாக அடுத்தடுத்து மூன்று முக்கிய கேரக்டர்கள் வெளியேறி இருப்பது அந்தத் தொடரின் ரசிகர்களிடையே ஒருவித குழப்பத்தை உருவாக்கியிருக்கிறது. மெகா சீரியல்களில் 'இவருக்குப் பின் இவர்' என்கிற மாற்றம் சகஜம்தான் என்றாலும் அடுத்தடுத்து வரிசையாக ஆர்ட்டிஸ்ட்டுகள் வெளியேற்றம் என்பதுதான் இங்கே ஹைலைட்டாகிறது.
வரிசையான இந்த மாற்றங்களுக்கு என்ன காரணம்? சீரியல் உடன் தொடர்புடைய சிலரிடம் பேசினோம்.
''வெளியேறியவர்கள் சிலர் தனிப்பட்ட காரணம்ன்னு சொல்லிட்டு போறாங்க. ஆனா விசாரிச்சா சிலருக்கு யூனிட்டுடன் கருத்து வேறுபாடுன்னும் தெரிய வருது. வேலைப்பளு, அப்புறம் இங்கயும் நடிச்சுட்டு வேறு சீரியல்கள்லயும் நடிச்சிட்டிருக்கிறவங்களுக்கு ஷூட்டிங் ஷெட்யூலில் பிரச்னைன்னு பல காரணங்கள் சொல்றாங்க' என்கின்றனர். சீரியலில் வேலைப்பளுவா என்றால், சேனல்ல இன்னொரு சீரியலை இயக்கியவர்தான் இந்த சீரியலையும் டைரக்ட் செய்தார். அதனால இயக்குநருக்கு ரேட்டிங் டென்ஷன். அதனால சமயங்கள்ல அவர் அந்த டென்ஷனை ஆர்ட்டிஸ்ட்டுகள் மேல காட்டுறதா புலம்பிட்டிருந்தாங்க சிலர்' என்கிறார்கள்.