Sriram Sridharan: ஆஸி., அணிக்கு 6 வருடம் பயிற்சயளித்த ஸ்ரீராம் - உதவிப் பயிற்சியாளராக நியமித்த CSK
சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிந்ததும் மார்ச் 22-ம் தேதி கொல்கத்தா vs பெங்களூரு போட்டியுடன் இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) 18-வது சீசன் தொடங்கவிருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் இரு போட்டிகளில் மும்பை மற்றும் பெங்களூரு ஆகிய அணிகளுடன் சேப்பாக்கத்தில் மோதுகிறது. இந்த நிலையில், சென்னை அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி, பந்துவீச்சு ஆலோசகர் எரிக் சைமன்ஸ் ஆகியோருடன் பந்துவீச்சு உதவிப் பயிற்சியாளராக தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் இந்திய வீரர் ஸ்ரீராம் ஸ்ரீதரன் இணைந்திருக்கிறார்.
Say Yellove to our assistant bowling Coach Sriram Sridharan!
— Chennai Super Kings (@ChennaiIPL) February 24, 2025
Brought up from the tracks of Chepauk to a packed portfolio of coaching tenures in Australia and Bangladesh, he embarks on this new
journey with the pride! #WhistlePodu#Yellovepic.twitter.com/adrzPFnwlq
சென்னையைச் சேர்ந்தவரான ஸ்ரீராம் ஸ்ரீதரன் இடதுகை சுழற்பந்துவீச்சாளராகத் தனது கிரிக்கெட் கரியரைத் தொடங்கினார். 1992–93ல் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் 19 வயத்துக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ஸ்ரீராம், அந்தத் தொடரில் மொத்தம் 29 விக்கெட்டுகள் வீழ்த்தினார். கூடவே பேட்டிங்கிலும் சிறப்பாக ஆடி ஆல்ரவுண்டராக உருவெடுத்த ஸ்ரீராம், 1999-2000 ரஞ்சி தொடரில் தமிழக அணியில் களமிறங்கி 5 சதங்கள் உட்பட 1075 ரன்கள் குவித்து அந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான பி.சி.சி.ஐ விருது வென்றார். அதே ஆண்டில் இந்திய ஆடும் வாய்ப்பையும் பெற்றார்.
2000-ம் ஆண்டில் நாக்பூர் மைதானத்தில் தென்னாப்பிரிக்காவுக்கெதிராகத் தனது முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகமானார் ஸ்ரீராம். அதே ஆண்டில், சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியிலும் தேர்வானார். ஆனால், சாம்பியன்ஸ் டிராபியில் ஒரு போட்டியில் கூட பிளேயிங் லெவனில் இடம் பிடிக்கவில்லை. பின்னர், தனது 6 ஆட்டங்களிலேயே அணியிலிருந்து ஸ்ரீராம் கழற்றிவிடப்பட்டார். மீண்டும், உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாகச் செயல்பட்டதால், 2004-05ல் பங்களாதேஷுக்கெதிரான தொடரில் ஸ்ரீராமுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைத்தது. அந்தத் தொடரில் இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ஸ்ரீராம், முதல் போட்டியில் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார். இரண்டாவது போட்டியில் அரைசதம் அடித்தார். ஆனாலும், அதன்பிறகு இந்திய அணியில் விளையாடும் வாய்ய்பு ஸ்ரீராமுக்கு வழங்கப்படவில்லை. அதோடு, அவரின் சர்வதேச கிரிக்கெட் கரியரும் முடிவுக்கு வந்தது.

ஸ்ரீராம் தனது சர்வதேச கிரிக்கெட் கரியரில் மொத்தம் 8 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 81 ரன்கள் அடித்து, 9 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார். ஐ.பி.எல்லில் 2010-ல் பெங்களூரு அணியில் ஒரு போட்டியும், 2011-ல் டெல்லி அணியில் ஒரு போட்டியிடும் விளையாடியிருக்கிறார். அதன்பின்னர், பயிற்சியாளராக உருவெடுத்த ஸ்ரீராம், 2015-ல் இந்தியா வந்த ஆஸ்திரேலியா `A' அணியின் பயிற்சியாளர் குழுவின் ஓர் அங்கமாக இருந்தார். பின்னர், அதே ஆண்டில் பங்களாதேஷுக்கெதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் குழுவில் ஆலோசகராச் செயல்பட்டார்.
2016-ல் ஆஸ்திரேலிய அணியில் சுழற்பந்துவீச்சு உதவிப் பயிற்சியாளராக உயர்ந்த ஸ்ரீராம், 2018-ல் இந்தியாவுக்கெதிரான டெஸ்ட் தொடரிலும், 2019 ஆஷஸ் டெஸ்ட் தொடரில் குறிப்பிடத்தக்க வகையில் செயல்பட்டார். ஆஸ்திரேலிய அணியில் இவர் உதவிப் பயிற்சியாளராகச் செயல்பட்ட காலத்தில்தான், தனது முதல் டி20 உலகக் கோப்பையை (2021) வென்ற ஆஸ்திரேலியா வென்றது. குறிப்பாக 2018-ல் அப்போதைய ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித், துணைக் கேப்டன் வார்னர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில், சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட இருவருக்கும் ஓராண்டு தடைவிதிக்கப்பட்ட சமயத்தில் ஆஸ்திரேலிய அணி எப்போதும் இல்லாத அளவுக்கு சரிவைக் கண்டது.

அந்த சமயத்தில், ஆஸ்திரேலிய அணியில் உதவிப் பயிற்சியாளராக உறுதுணையாக இருந்த ஸ்ரீராம், இன்றைக்கு ஆஸ்திரேலிய மீண்டும் வலுவான நிலைக்கு வந்திருப்பதற்கு முக்கிய காரணியாக இருந்திருக்கிறார். 2022-ல், ஆஸ்திரேலிய உதவிப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, ஐ.பி.எல்லில் பெங்களூரு அணியின் பயிற்சியாளர் குழுவில் இணைந்தார்.
ஆஸ்திரேலிய அணியிலிருந்து விலகிய அந்த சமயத்தில் ஸ்ரீராம், ``உலகக் கோப்பைகள், ஆஷஸ் போட்டிகளில் பணியாற்றியது எனக்குச் சிறந்த அனுபவமாக இருந்தது. ஆறாண்டு காலம், ஆஸ்திரேலியாவின் உதவிப் பயிற்சியாளராக நம்ப முடியாத அளவுக்கு நுணுக்கங்களைப் பெற்றிருக்கிறேன். ஆஸ்திரேலியாவின் அனைத்து ஆதரவிற்கும் நான் கடமைப் பட்டிருக்கிறேன்." என்று கூறியிருந்தார்.

2022-ல் ஆசிய கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பையில் பங்ளாதேஷ் அணியில் ஆலோசகராக ஸ்ரீராம் செயல்பட்டார். அதைத்தொடர்ந்து, கடந்த ஐ.பி.எல் சீசனில் லக்னோ அணியின் உதவிப் பந்துவீச்சு பயிற்சியாளராகப் பணியாற்றினார். இப்படி பயிற்சியாளராக நீண்ட அனுபவம் கொண்டிருக்கும் ஸ்ரீராமை சென்னை அணி நிர்வாகம் உதவிப் பந்துவீச்சுப் பயிற்சியாளராகத் தற்போது நியமித்திருக்கிறது. சென்னை அணியில் இவரின் நியமனம் ஜடேஜா, அஸ்வின், நூர் அகமது சுழற்பந்து கூட்டணிக்கு நிச்சயம் பலமானதாக இருக்கும்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
