'StartUp' சாகசம் 10 : சார்ஜிங் சிக்கலை தீர்க்க சேலத்திலிருந்து ஒரு நிறுவனம் - இது `TamiraBot’ ஸ்டோரி
இந்திய மின்சார வாகன சார்ஜிங் சந்தை 2023-ல் USD 588.6 மில்லியன் மதிப்பீடு செய்யப்பட்டது. மேலும் 2024 முதல் 2030 வரை 39.1% CAGR வளர்ச்சியுடன் 2030-ல் USD 5695.6 மில்லியனை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்திய மின்சார வாகன சார்ஜிங் சந்தை வருடந்தோறும் வளர்வதற்கு மத்திய அரசாங்கமும், மாநில அரசாங்கமும் எடுத்து வரும் திட்டங்களும் உந்துதலாக இருக்கிறது.
* அரசாங்க முயற்சிகள்: மானியங்கள் மற்றும் ஊக்கத்தொகைகள் வழங்குதல் போன்ற மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க மத்திய அரசும், மாநில அரசும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
* நிதி முதலீடுகள்: பல தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மின்சார வாகன சார்ஜிங் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் முதலீடு செய்கின்றன. நிறைய ஆய்வுகள் மின்சார வாகனம் சார்ந்த அனைத்துப் பிரிவுகளிலும் நடைபெற்று வருகின்றது. இதனால் சந்தையில் இதன் தேவையும் அதற்கேற்ப புதிய புதிய மாற்றங்களும் ஏற்படுகிறது.
* மின்சார வாகனங்களின் அதிகரித்து வரும் பயன்பாடு: மின்சார வாகனங்களின் விலை குறைந்து, அவற்றின் பயன்பாட்டு வரம்பு அதிகரிப்பதால் மக்கள் மின்வாகனங்களின் மேல் ஆர்வம் கொள்கின்றனர்
இந்திய மின்சார வாகனத்தில் மிக முக்கியமான பங்கை சார்ஜர் வகைகள் கொண்டுள்ளது.
சார்ஜர் வகை, வாகன வகை மற்றும் பயன்பாடு அடிப்படையில் சந்தை பிரிக்கப்பட்டுள்ளது. மிகவும் பொதுவான சார்ஜர் வகை AC சார்ஜர் ஆகும், இது வீடு அல்லது அலுவலகத்தில் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்ய பயன்படுத்தப்படுகிறது.
மிகவும் அதிகமாக பொது இடங்களில் பயன்படுத்தப்படுவது பயணிகளுக்கான கார் ஆகும். இந்தியாவில் சுமார் 135 மின்சார வாகனங்களுக்கு 1 சார்ஜிங் நிலையம் தான் உள்ளது. நாடு 2030க்கான மின்சார வாகன பயன்பாட்டு இலக்குகளை அடையும் போது, அது சார்ஜிங்க்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.
* இந்திய மின்சார வாகன சார்ஜிங் சந்தை அறிக்கையின்படி, பொது மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களின் எண்ணிக்கையில் கர்நாடகா முன்னணியில் உள்ளது,
* தொழில்துறை அறிக்கைகளின்படி, கணிசமான எண்ணிக்கையிலான பொது மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களைக் கொண்ட மற்ற மாநிலங்களில் மகாராஷ்டிரா (3,079), டெல்லி (1,886), கேரளா (958), தமிழ்நாடு (643), உத்தரப்பிரதேசம் (583), மற்றும் ராஜஸ்தான் (500) ஆகியவை அடங்கும்.
இந்திய மின்சார வாகன சார்ஜிங் சந்தையின் முக்கிய நிறுவனங்களில் டாடா பவர், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அதர் எனர்ஜி ஆகியவை முன்னணயில் உள்ளன.
இப்போது சந்தையில் Rapid Chargers, Fast Chargers, Slow Chargers ஆகியவை உள்ளன. இந்தியாவில் இந்த சார்ஜர்களில்தான் நிறைய சிக்கல்கள் உள்ளது. ஏனெனில் சார்ஜருக்கு பயன்படுத்தும் ஃப்ளக்குகள் ஒவ்வொரு வடிவமைப்பில் இருக்கும். இதனால் எல்லா சார்ஜிங் ஸ்டேசனையும் நம்மால் பயன்படுத்த இயலாது. இதற்காக உலகளாவிய அளவில் ஒரு பொதுவான சார்ஜர் அவசியமாகிறது.
இந்த சிக்கலை தீர்க்க சேலத்திலிருந்து ஒரு நிறுவனம் புறப்பட்டிருக்கிறது. டெஸ்லா, ஆப்பிள், போயிங் போன்ற நிறுவனங்களில் வேலை பார்த்த சேலத்தைச் சேர்ந்த வேலாயுதம் என்பவரின் `தாமிரா போட்’ என்ற நிறுவனம், இத்துறையில் பல சவாலான பணிகளில் ஈடுபட்டு வெற்றிகரமாக தனது சார்ஜிங் கனெக்டர்களை அறிமுகப்பத்தி உள்ளது.
இனி அவரின் அனுபவத்தை நாம் அவருடைய நேர்க்காணல் வழியே காண்போம்...
உங்களைப்பற்றியும், உங்கள் பணி அனுபவம் பற்றியும் சொல்லுங்கள்?
``நான் வேலாயுதம், தொழில்துறைகளில் தானியங்கு துறையிலும், ரோபோட்டிக்ஸ் மற்றும் தனித்துவமான பொருட்களை உருவாக்குவதிலும் சுமார் 14 வருடங்கள் அனுபவம் பெற்றிருக்கிறேன்.தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மிக முக்கிய நிறுவனங்களிலும்பணியாற்றி உள்ளேன். இது மட்டுமல்லாமல் எலான் மஸ்க்கின் Tesla, BME Mining Explosives, Singapore Aerospace Manufacturing, Apple போன்ற நிறுவனங்களில் பல தனித்துவமான திட்டங்களை நிர்வகித்து மேலாண்மை செய்துள்ளேன். என்னுடைய இரண்டு காப்புரிமை தொழில்நுட்பங்களை டெஸ்டலா நிறுவனமும், விமான நிறுவனங்களுக்கும் பயன்படுத்தி வருகின்றன.
1. Tesla -- பேட்டரி சுவர் குளிர்விப்பு அமைப்புகளில் கசிவு கண்டறியும் அமைப்பில் ஹீலியம் நுகர்வை 95% குறைத்தல்.
2. ( ரகசியமானது என்பதால் வெளிப்படையாக சொல்லமுடியாது) -- விமானங்கள் ஒரு பிரதேசத்திலிருந்து மற்றொரு பிரதேசத்திற்கு மாறும்போது மறைவுப்பகுதியின் கால தாமதத்தை குறைக்கும் தொழில்நுட்பம் ஆகியவை என்னுடைய காப்புரிமையின் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் வேலை செய்கின்றன.”
``தாமிராபோட்டைத் தொடங்க உங்களைத் தூண்டியது எது? நீங்கள் எலான் மஸ்கின் டெஸ்லாவில் வேலை செய்தால் அங்கேயே நன்றாக இருந்திருக்கலாமே? ஏன் இங்கே வந்து ஒரு நிறுவனம்... அதுவும் 3 நிலை நகரமாக சேலத்தில்?”
``GTRI-ன் படி, இருபதாண்டுகளுக்கு முன்பு, சீனா மற்றும் இந்தியா தொழில்துறை பொருட்களின் ஏற்றுமதியில் 44.2% என்ற அதே சதவீதத்தில் இருந்தன. ஆனால் 2025-ல், இந்தியாவின் ஏற்றுமதி 24.7% ஆக சரிந்ததோடு, சீனாவிலிருந்து 30% தொழில்துறை பொருட்களை இறக்குமதி செய்கிறது.
உலகளாவிய தேவைக்கு ஏற்ப பொருட்களை உற்பத்தி செய்யும் அளவிற்கு இந்தியா இன்னமும் தயாராக இல்லை. மேலும் தொழில்நுட்ப விழிப்புணர்வு, பொறியியல் பட்டதாரிகளின் திறன் ஆகியவற்றில் நாம் பின்தங்கியுள்ளோம். இந்திய கல்வி முறை உலகத்தரம் வாய்ந்தது. ஆனால் புதுமைகள் கண்டுபிடிப்பில், பயன்பாட்டு பொறியியல் மற்றும் உற்பத்தி பொறியியலில் நாம் பின்தங்கியுள்ளோம். கடந்த இருபதாண்டுகளில், மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைப்புகளில் கவனம் செலுத்தும்போது, சமூகத்தில் இயற்கையாக சுழற்சி பொருளாதாரத்தை உருவாக்கும் முக்கியமான உற்பத்தி தொழில்நுட்பத்தை நாம் மறந்து கிட்டத்தட்ட அவற்றில் நம் பங்களிப்பை இழந்துவிட்டோம்.
மேலும் மின்சார வாகன சார்ஜிங் இணைப்பான்கள் துறையில், பல சீன நிறுவனங்கள் இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்தியாவில் மின்சார வாகன இணைப்பான் சந்தையில், குறிப்பாக இருசக்கர மற்றும் முச்சக்கர வாகனப் பிரிவில், சார்ஜிங் நெறிமுறைகள் தரப்படுத்தப்படவில்லை. ஒவ்வொரு OEM-ம் வெவ்வேறு முறைகளைப் பின்பற்றுகிறது. இது பொது சார்ஜிங் நிலையங்களையும், IC என்ஜின் வாகனங்களைப் போல எந்த பெட்ரோல் பங்கிலும் நிரப்பப்படலாம் என்பதற்கு மாறாக வீடுகளில் மட்டுமே சார்ஜ் செய்ய பயனர்களின் வசதியையும் பாதிக்கிறது. மின்சார வாகன தொழில்நுட்பத்தின் மீதான சந்தேகத்தைத் தவிர, இந்த தரப்படுத்தல் விரைவான மின்சார வாகன ஏற்பு விகிதத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த பிரச்னைகளை நிவர்த்தி செய்ய, 2020-ல், குறிப்பாக LEV பிரிவிற்கான சார்ஜிங் நெறிமுறையை தரப்படுத்துவதற்காக இந்திய அரசு IS 17017 நெறிமுறையை வெளியிட்டது. ஆனால், அந்த குறிப்பிட்ட தரத்திற்கான விருப்பமான சப்ளையர் சோகோரி என்ற சீன நிறுவனமாகும். ஏன் இந்தியாவில் யாரும் இல்லை?
2025-ல், எளிமையான கார் ECU சிப்பிற்கும் கூட சீன தயாரிப்புகளையே நம்பியுள்ளோம். கோவிட்டுக்குப் பிறகு சானிடைசர் டிஸ்பென்சர் கேப் முதல் மின்னணு பொருட்கள் வரை அனைத்து துறைகளிலும் உலகளாவிய சப்ளை சங்கிலி தடுமாற்றத்தை சந்தித்தது. தமிழ்நாட்டில் துணிகளுக்கான முன்னணி ஜவுளி நிறுவனங்கள் இருந்தாலும், உற்பத்தி தொழில்நுட்பம் / உபகரணங்கள் சீனாவை சார்ந்திருப்பதால், நமது நாட்டிற்குள் N95 மாஸ்க் தேவையை கூட பூர்த்தி செய்யும் நிலையில் நாம் இல்லை.
இந்த தாக்கம் என்னை தாமிரபோட் நிறுவனத்தை துவங்க வைத்தது, பெரிய நிறுவனங்களில் பணியாற்றியம் அனுபவம் எனக்கு உதவியது. இதனால் இந்திய தரத்தை மட்டுமல்லாமல் சர்வதேச தர தேவைகளை மிஞ்சும் பிரீமியம் தயாரிப்பை உருவாக்குவதில் தாமிராபோட் கவனம் செலுத்துகிறது.
குறிப்பாக டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்களில் இருந்து புதிதாக பட்டம் பெற்ற பல பொறியியல் பட்டதாரிகள் பல நிறுவனங்களில் ஆபரேட்டர்களாக பணியமர்த்தப்படுவதை நான் பார்த்தேன். பொறியாளர்கள் பெரிய விஷயங்களைச் செய்யப் பிறந்தவர்கள் என்றும், பொறியாளர்கள் உலகத்தை உருவாக்குகிறார்கள் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன். பொறியாளர் ஆபரேட்டர் வேலையைச் செய்ய முடியாது என்று அர்த்தமல்ல. ஆனால் புளூ காலர் ஊழியர்களாக அவர்கள் இருக்காமல் ஆய்வு செய்து அவர்களுக்கு அடுத்த நிலைக்கு செய்ய பணியாற்றவேண்டும்.
சேலம் போன்ற டயர் 2 மற்றும் டயர் 3 நகரத்தில் ஒரு சிறப்பு பொறியியல் வாய்ப்பை உருவாக்க விரும்புகிறேன், இதனால் அது பொறியியல் பட்டதாரிகளையும் ஊக்குவிக்கும். இன்றைய நிலையில் எங்கிருந்து வேண்டுமானாலும் பணியாற்றலாம் என்பதால் சேலம் எனக்கு விருப்பமாகிறது.”
`தாமிராபோட் தயாரிப்புகளின் இப்போதைய சிறப்பம்சம் என்ன?’
``நாங்கள் IS 17017 -- 2 -- 6, CCS2 மற்றும் Type 2 இணைப்பான்கள் போன்ற தர இணைப்பான் உற்பத்தியில் கவனம் செலுத்துகிறோம், இவை சந்தையில் அதிகமான தேவையாக இருக்கிறது. சீன நிறுவனங்களின் நுழைவைத் தடுப்பதன் மூலம் விற்பனைக்குப் முந்தைய, பிந்தைய வாய்ப்பும் நிறைய உள்ளது. சந்தை தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஆண்டுக்கு 36,000 பாகங்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட உற்பத்தியை நாங்கள் உருவாக்குகிறோம். உற்பத்தி உபகரணங்களுக்கு கூட்டு உற்பத்தி நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் சிக்கனமான பொருளாதாரம் & லைட் வெயிட் அசெட் மாடலைப் பின்பற்றுகிறோம். இது முதலீட்டு செலவை மட்டுமல்லாமல் உயிரி சிதைவடையும் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் தொழில்துறை கழிவுகளின் நுகர்வையும் குறைக்கிறோம். எங்கள் காப்புரிமை தொழில்நுட்பமும் சந்தையில் தனித்துவமாக நிற்பதால் தாமிராபோட் இப்போது நிலைத்து நிறகிறது.”
``ஒரு EV சார்ஜிங் கனெக்டர் நிறுவனத்தைத் தொடங்குவதில் உள்ள சவால்கள் என்ன?”
``எந்த தொழிலும் விரைவான பணமீட்டும் முறைகள் இல்லை. நிறைய ஆய்வுகள், தொழில்நுட்ப அறிவு நிறையவும் வேண்டும். அதோடு நிறுவனருக்கும் தன்னுடைய இலக்கை தெரிந்திருக்கவேண்டும், இவைகளைக்கொண்டு புதுமைகளை புகுத்தினால் நிச்சயம் நம்மாலும் தரமான பொருளை சந்தைக்கு அறிமுகப்படுத்த இயலும் . சீன நிறுவனங்கள் இந்திய சந்தையில் ஊடுருவ சந்தைப்படுத்தலில் நிறைய முதலீடு செய்கின்றன. பெரும்பாலும் அவை நம் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கலாம். பெரிய நிறுவனங்களை தாண்டி நாமும் நம்பகமான, தரம் மற்றும் பாதுகாப்பு தயாரிப்புகளுடன் வாடிக்கையாளரை உருவாக்கி அணுகும் நிலையான உத்தி வெற்றி பெறும்.
தொழில்நுட்ப ரீதியாக, தயாரிப்பு வடிவமைப்பின் போது IEC 62196 போன்ற சர்வதேச தரங்களைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். இது தரத்தை மட்டுமல்ல, தயாரிப்பின் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது. சார்ஜிங் ஸ்டேஷனில் இருந்து வாகனத்திற்கு மின்சாரம் கடத்துவதற்கு இணைப்பிகள் முக்கியமாக இருப்பதால், ஸ்பார்க்கிங் / ஃபயர் பாதிப்புகள் அதிகமாக உள்ளன. எனவே CE & UL 94 V0 தரநிலைகள் போன்ற உயர் மட்ட பாதுகாப்பு தரங்களை உறுதி செய்யும் ஒரு தயாரிப்பை நாம் உருவாக்க வேண்டும். அதில் தாமிராபோட் தனக்கென தனி நுட்பங்களை ஆய்வு செய்து உருவாக்கி வருகிறது.”
``EV சார்ஜிங்கில் இருக்கும் இன்னொரு பெரும் பிரச்னை, ஒவ்வொரு நிறுவனமும் அவர்களுக்கு என தனி பின்பாயின்ட் உருவாக்கியிருக்கும்போது நீங்கள் எப்படி எப்படி இதை சமாளிக்கிறீர்கள்?”
``ஒவ்வொரு சார்ஜிங் இணைப்பானும் சீன காப்புரிமை தொழில்நுட்பம் / வடிவமைப்பைப் பயன்படுத்தி தங்கள் தயாரிப்பைத் உருவாக்கிவருகின்றன. பல சார்ஜிங் இணைப்பான்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்து ஒன்றாக இணைக்கின்றன. ஆனால், தாமிராபோட் சார்ஜிங் தொடர்பு பின்னுக்கான தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது, இது ஒவ்வொரு சார்ஜிங் சுழற்சியிலும் அதிக செயல்திறன் மற்றும் ஆற்றல் சேமிப்பை வழங்குகிறது. இந்த தொழில்நுட்பத்தை இந்தியாவிலும் காப்புரிமை பெறவுள்ளோம்.(காப்புரிமை ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது). இந்த பின்கள் கோயம்புத்தூரில் உள்ளூரில் தயாரிக்கப்படுகின்றன, எனவே எங்கள் தயாரிப்பு "இந்தியாவில் தயாரிக்கப்பட்டது, Made in India" என்று பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்”
``உங்கள் முயற்சிகள் கடினமாக இருக்கும்போது நீங்கள் எப்படி உத்வேகத்துடன் இருக்கிறீர்கள்?”
``தாமிராபோட் நிறுவனத்தை தொழில்நுட்ப காப்பக நிறுவனங்களான டிபிஐ - கொங்கு பொறியியல் கல்லூரி, எஸ்எஸ்என், ஐஐடிஎம் இன்குபேஷன் செல், தியாகராஜர் பொறியியல் கல்லூரி ஆகியவை எனது யோசனையை ஆதரிப்பது மட்டுமல்லாமல், எங்கள் ஸ்டார்ட்அப்பை அடுத்த கட்டத்திற்குக் கட்டியெழுப்புவதில் தொடர்ந்து பயணிக்கின்றன. குறிப்பாக, ஸ்ரீ சண்முகா நிறுவனங்கள் எங்களுக்கு அலுவலகம் மற்றும் உற்பத்திக்கான இடத்தையும், எங்கள் இலக்குகளை அடைய மனித வளங்களையும் வழங்குகின்றன. எனவே, நான் தோல்வியடைந்தால், நான் மட்டுமல்ல, என்னை ஆதரிக்கும் முழு மக்களும் எனது செயலால் தோல்வியடைவார்கள் என்று என் மனம் எப்போதும் என்னிடம் கூறுகிறது.
மேலும், தங்கள் தொலைநோக்குப் பார்வைக்காக கடுமையாகப் போராடும் பல ஸ்டார்ட்அப்களைப் பற்றி நான் படிப்பேன், அவற்றின் ஒவ்வொரு சிறிய வெற்றியும் என்னை மகிழ்ச்சியடையச் செய்கிறது மற்றும் உந்துதலால் எனது அடுத்த நடவடிக்கையைத் தொடர்கிறது.”
``சேலம் போன்ற நகரங்களில் உங்கள் திட்டத்திற்கு ஏற்றார்ப் போல் திறனுள்ள பணியாளர்கள்கிடைக்கின்றார்களா? அவர்களை எப்படி தயார் படுத்துகின்றீர்கள்.?”
``நாங்கள் சேலத்தைச் சுற்றியுள்ள கல்லூரிகளில் 3 ஆம் ஆண்டு மாணவர்களை தேர்ந்தெடுத்து பயிற்சி அளித்து பணியமர்த்துகிறோம். சிக்கலான பணிகளை சிறிய சிறிய பணிகளாகப் பிரித்து புதுமையான தயாரிப்புகளுக்குப் எளிய பணிகளாக ஆக்குகிறோம். புதுமையான தயாரிப்புகளுக்குப் பயிற்சி அளிப்பதற்கான இரண்டு எடுத்துக்காட்டுகள். தேவியாகுருச்சியில் உள்ள ஒரு 3 ஆம் நிலை கல்லூரியில், அகம் - AI அடிப்படையிலான ஸ்டெதஸ்கோப்பிற்காக மாணவர்களுக்கு நாங்கள் பயிற்சி அளிக்கிறோம். AI மாதிரியை உருவாக்குவதில் அவர்களின் முயற்சிகள் மூலம், AIக்கு 1,00,000 தரவுகளை உருவாக்கியுள்ளோம், இதில் AFib இன் ஆரம்பகால நோயறிதல், ஆரம்ப கட்ட ஆஸ்துமா, ஆரம்ப கட்டத்தில் கண்டறியப்பட்டது. இது ஆய்வு நிலையில் இருக்கிறது என்றாலும் எதிர்காலத்தில் நிறைய மாற்றங்கள் இந்த நுட்பங்கள் வழியே நடைபெறும்.
மற்றொரு உதாரணம் விழி - கிளௌகோமா, நீரிழிவு கண் ரெட்டினோபதி போன்ற 50 வெவ்வேறு கண் நோய்கள் மற்றும் மஞ்சள் காமாலை, உயர் இரத்த அழுத்தம் போன்ற 8 பொதுவான நோய்களைக் கணிக்க AI அடிப்படையிலான சாதனம் மற்றும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இந்திய சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, இந்திய கிராமப்புற மக்களில் 70% பேர் கிளௌகோமாவால் பாதிக்கப்படலாம் என்று தெரிவிக்கிறது, ஆரம்ப கட்டத்தில் கண்டறியத் தவறினால் நிரந்தர விழிச்சவால் ஏற்படுகிறது. இதுபோன்ற சமூகம் எதிர்கொள்ள உள்ள சிக்கல்களை கண்டறிவது அவற்றுக்கு தீர்வுகளை வழங்குவது சவாலானது
எனவே, நமது நாட்டிற்கு மிகவும் தேவைப்படும் பொறியாளர்கள் மற்றும் அவர்களின் புதுமையான யோசனைகள் மற்றும் அதற்கான பொறியியல் சவாலை எதிர்கொள்ள மாணவர்களுக்கு நாங்கள் பயிற்சியும் அளிக்கிறோம். எங்கள் துறை சார் பயிற்சியும் அளிக்கின்றோம்.”
``உலகில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் மற்ற தொழில்முனைவோருக்கு உங்களிடம் என்ன அறிவுரை இருக்கிறது?”
``நீங்கள் எதிலிருந்து வெளியேறினாலும் அதற்கு முன், நீங்கள் ஏன் தொடங்கினீர்கள் என்று சிந்தியுங்கள்
தெய்வத்தான் ஆக தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்”
``தாமிரபோட்டின் எதிர்காலம் திட்டம் என்ன?”
``அடுத்த 3 ஆண்டுகளில் 100 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் இலக்கை நோக்கியும், OEMS-க்கான EV- சார்ஜிங் துறையில் முதலிடம் பெறவும் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். மலேசியா, தாய்லாந்து, துபாய், ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கும் எங்கள் விநியோகத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம்.”
``எதிர்காலத்தில் மின்சாரம் பற்றாக்குறை வரவாய்ப்பிருக்குமா? இதில் மாற்று எரிபொருள் திட்டம் என்னவாக இருக்கும்?”
``மின்சாரத் தேவை மிக அதிகமாக உள்ளது தான். எல்லா பக்கமும் மின்சாரம் சார்ந்த மாற்றம் பெற்று வருவதால் ஐக்கிய நாடுகள் சபை ஆற்றல் மற்றும் செயல்திறனுக்கான நிலையான வளர்ச்சி இலக்கு 7 (நிலையான வளர்ச்சி இலக்குகள்) கொண்டுள்ளது. மேலும், சூரிய சக்தி தொழில்நுட்பத்துறை வளர்ந்து வருகிறது, சூரிய ஒளி பிரதிபலிக்கும் போது, அது ஆற்றலை உற்பத்தி செய்யும் இரண்டு பக்க பேனல்களைக் கொண்டுள்ளது. இன்னொரு புறமும் காற்றாலை எண்ணிக்கையில் அதிகரித்து வருகின்றன. மின்சார உற்பத்தி குறித்து பல விதமான ஆய்வுகளும் ஒருபுறம் நடைப்பெற்றுகொண்டுதானிருக்கின்றன.”
``உங்கள் திட்டத்திற்கு முதலீடுகளை எப்படி தயார் செய்கின்றீர்கள்?முதலீட்டாளர்கள் பற்றியும் சொல்லுங்கள்?”
``மின்சார வாகனத்துறையில் நமது அரசாங்கமும் பல முயற்சிகளைத எடுத்து வருகிறது. அதற்கு சில மானியங்களையும் வழங்கிவருகின்றது. முதல் ஆண்டில், DST நிதி பிரயாஸ், SISFS, EDII TN IVP A போன்ற அரசாங்க மானியங்களைப் பெறுவதில் நாங்கள் கவனம் செலுத்தினோம். அரசாங்க மானியங்கள் மூலம் 25 லட்சங்களை நாங்கள் பெற்றோம். எங்களுக்கான இடத்தை சண்முகா கல்லூரிதான் எங்களுக்கு வழங்கி ஊக்குவித்துவருகிறது ,இரண்டாம் ஆண்டு மற்றும் முதலீட்டு நிறுவனங்களிடமிருந்து ஏஞ்சல் முதலீட்டாளர்களிடமிருந்து கடன் மற்றும் பங்கு நிதிகளை திரட்டுவதற்கான ஒரு மாதிரியையும் நாங்கள் உருவாக்கியுள்ளோம். முதலீட்டாளர்களையும் எதிர்பார்த்து வருகின்றோம்”
தமிழகத்தில் இருந்து பெரும் தொழிற்புரட்சி செய்ய இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில் இருந்து தயார் நிலையில் இருக்கிறது. எனவே பெரும் நகரங்களில்இருந்துதான் தொழில் செய்யவேண்டும் என்ற நிலை இனி இல்லை என்பதும் இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில் இருந்து செயல்பட அரசு அமைப்புகளும், தனியார் முதலீட்டாளர்களும் தயாராக இருப்பதும் தமிழ்நாட்டிற்கு சாதகம்!
தொடரும்..!
Vikatan Play
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!