இந்தியாவில் எச்எம்பிவி பாதிப்பு 7 ஆக அதிகரிப்பு! அச்சப்பட வேண்டாம்-நட்டா
'StartUp' சாகசம் 5: `ரூ.400, மிதிவண்டிதான் முதலீடு’ - `Ungal Greenery' சீனிவாசன் சொல்லும் ஃபார்முலா
இந்தியாவில் டெலிவரி சேவைகள் எனும் விநியோகச் சேவைகள் மிகவும் வளர்ந்து வரும் சந்தையாகும். இந்த சந்தையின் மொத்த மதிப்பு ₹1.5 லட்சம்கோடி (1.5 trillion) என மதிப்பிடப்படுகிறது.
ஏனெனில் உலகின் அதிக மக்கள் தொகையும் நம்மிடம்தான் இருக்கிறது. பெரும் நகரங்களில் அதிக மக்கள் அடர்த்தி (குறைவான இடத்தில் அதிகமான மக்கள் வசிப்பது) அதிகம். எனவே உணவு , மளிகை, மருந்து சார்ந்த விநியோக சேவைகள் 2023-2028 காலகட்டத்தில் CAGR (Compound Annual Growth Rate) 20% ஆக வளர வாய்ப்பு உள்ளது.
இந்தியாவின் முன்னணி விநியோக நிறுவனங்கள் பெற்றுள்ள சந்தை
சொமேட்டோ (Zomato)
300+ நகரங்களில் சேவை
மாதம் 1.5 கோடி ஆர்டர்கள்
ஸ்விக்கி (Swiggy)
500+ நகரங்களில் இயங்குகிறது
இன்ஸ்டாமார்ட் மூலம் மளிகை பொருள்களும் விநியோகம்
தினசரி 1.5 மில்லியன் ஆர்டர்கள்
-
டன்சோ (Dunzo)
பல்வேறு பொருட்கள் டெலிவரி
8 பெரு நகரங்களில் சேவை
20 நிமிட மளிகை டெலிவரி
-
பிளிப்கார்ட் (Flipkart)
இ-காமர்ஸ் டெலிவரி முன்னோடி
கிராமப்புற சந்தையில் வலுவான தளம்
சொந்த லாஜிஸ்டிக்ஸ் பிரிவு
இந்தியாவில் விநியோகத்திற்கான வாய்ப்புகள்:
டிஜிட்டல் இந்தியா திட்டம், அதோடு திறன்பேசிகளின் பயன்பாடும் , இணையத்தின் வேகமும் இதன் வளர்ச்சிக்கு காரணம். இணையத்தில் அதிகமான நேரம் செலவிடுதலும் இந்தியாவில் அதிகரித்துள்ளது. இது மட்டுமல்ல இவர்களுக்கான வாடிவாசல் கொரோனாவால் திறந்து வைக்கப்பட்டது.
நாடடங்கிய நேரத்தில் நாங்களிருக்கிறோம் என்ற விநியோக நிறுவனங்களின் சேவை அந்ந நேரத்தில் அதிகமாக தேவையாக இருந்தது. அதன்பின்னர் அதுவே பழகிவிட்டது நம் மக்களுக்கு.
நகர்ப்புறங்களில் அதிகமான வாய்ப்புகள் இருந்தாலும் 3ம் நிலை, 4ம் நிலை நகரங்கள் மற்றும் கிராமப்புறன்களில் வாய்ப்புகள் இன்னமும் அதிகமாக உள்ளன.
கிராமப்புறங்களில் டெலிவரி சேவைகள் இன்னும் வளர்ச்சி அடையவில்லை. ஆனால் இங்கு புதிய சந்தைகள் உருவாகும் வாய்ப்பு உள்ளது. கிராமப்புறங்களில் உணவு மற்றும் பொருட்கள் கிடைக்காததால், விநியோகச் சேவைகள் முக்கியமான ஒன்றாக மாறலாம்.
சமூக மாற்றங்கள்: கிராமப்புற மக்கள் நகர்ப்புற வாழ்க்கை முறை மற்றும் வசதிகள் தேடி வருவதால், விநியோக சேவைகளுக்கு தேவைகள் அதிகரிக்கின்றன.
நகர்ப்புற பகுதிகளில் மக்கள் தொகை 23.74% இருப்பதால் சேவைகளின் அணுகல் அதிகம், வாடிக்கையாளர்களும் அதிகம். கிராமப்புற பகுதிகளில் மக்கள் தொகை 11.21% ஆக இருப்பதால் சேவைகளின் அணுகல் குறைவாக, வாடிக்கையாளர்கள் குறைவு என்றாலும் எதிர்காலத்திம் இதுவும் மாறும்.
கொரோனா நேரத்தில்தான் ஸ்ரீனிவாசன், தனது சொந்த ஊரான ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் `கிரீனரி’ எனும் விநியோக நிறுவனத்தை ஆரம்பித்துளார். 50,000 பேர் உள்ள இந்த நகரத்தில் மேலே குறிப்பிட்டுள்ள விநியோக நிறுவனங்கள் பலரும் தங்கள் சேவைகளை கொடுத்து வந்தாலும் அவர்களோடு ஒரு இளைஞர் தனது நிறுவனத்தையும் சேர்த்து இன்றும் அவர்களோடு போட்டிப்போட்டு வருகிறார் என்பது ஆச்சர்யம்.
பெரும்பாலும் விநியோகம் சார்ந்த நிறுவனத்தை நடத்த எண்ணி அதில் வரும் சிக்கல்களை பார்த்து சோர்ந்து இது வேண்டாம் என்று வெளியேறிய சிலரை நானறிவேன். ஆனால் கொரோனா காலம் முதல் இன்று வரை அவர்கள் ஊரில் வாட்ஸ்அப் வழியே ஆரம்பித்து பின் ஒரு சிறு செயலியைக்கொண்டு உணவு முதல் இறைச்சி வரை அனைத்தும் என்ற நோக்கோடு ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் Ungal Greenery (உங்கள் கிரீனரி) என்ற விநியோக நிறுவனத்தை தனத சொந்த முதலீட்டில் ஆரம்பித்திருக்கிறார் சீனிவாசன்.
வெறும் 400 முதலீடு , ஒரு துணி பை, ஒரு மிதிவண்டி இதை முதலீடாக வைத்து ஆரம்பித்து இன்று 10 பேர் பணியாற்றும் சிறிய நிறுவனத்தையே நடத்திவருகிறார்.
சீனிவாசன் உடனான உரையாடல் இனி...
’’எப்படி இந்த விநியோக எண்ணம் உங்களுக்குத் தோன்றியது?
``நான் திருச்செங்கோட்டில் உள்ள கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போது நண்பர்களுடன் வெளியே வீடு எடுத்து தங்கினேன். அப்போது குடும்பத்தை மேலும் தொந்தரவு செய்யாமல் இருக்கவேண்டும். என் உணவுத்தேவை மற்றும் வீட்டு வாடகைக்கு அவர்களைத் தொந்தரவு செய்யாமல் நானேபார்த்துக்கொள்ள வேண்டும் என தினமும் காலையில் செய்தித்தாள் விநியோகமும், மாலையில் உணவகத்தில் வேலை செய்ய ஆரம்பித்தேன்.
அன்று ஒரு நாள் வந்த அலைபேசி அழைப்பில், `உணவை அவர்கள் வீட்டுக்கு வந்து விநியோகம் செய்ய முடியுமா? என்று கேட்டார்கள். ஆனால் எங்கள் உணவகத்தின் உரிமையாளர் முடியாது என்று மறுத்துவிட்டார். அது என் மனதில் அவ்வப்போது தோன்றிக்கொண்டே இருந்தது. படித்து முடித்துபின் வேலைக்கும் சென்றுவிட்டேன். பிறகு எம்பிஏ படிக்கலாம் அல்லது வேறு ஏதேனும் செய்யலாம் என்று வேலையை விட்டு வந்தபின் கொரோனா காலம் தொடங்கியது.
கொரோனா லாக்டவுனில் விநியோகச் சேவை ஏன் ஆரம்பிக்கூடாது என்று தோன்றியது, உடனே செயலில் இறங்கிவிட்டேன். எங்கள் ஊரில் உள்ள எல்லா சமூக வலைத்தளங்களிலும் என் செல்பேசி எண் பதிவிட்டு விநியோகத்திற்கு என்ன தேவை என்றாலும் என்னை அழைக்கலாம் என்று பதிவிட்டேன்.
அவ்வளவுதான் அந்த நிமிடமிருந்து இப்போது வரை எங்கள் Ungal Greenery (Green Delivery) என்பதை சுருக்கி Ungall Greenery என்று வைத்து ஆரம்பித்தேன்”
``உங்கள் சேவை ஆரம்பித்தபோது என்ன மாதிரியான தொழில்நுட்பத்தை பயன்படுத்தினீர்கள்?”
``சொன்னால் நம்ப மாட்டிங்க, நான் எல்லா சமுக வலைத்தளங்களிலும் பதிவிட்டபின் என்ன செய்யலாம் என்று யோசித்தபோது, வாட்ஸ்அப்பிலயே இதை ஆரம்பிக்கலாம் என்று வாட்ஸ்அப் கொண்டே ஆரம்பித்துவிட்டேன். யாருக்கு என்ன தேவை என்றாலும் வாட்ஸ்அப்பில் அனுப்புவர்கள். நான் அவர்களை தொடர்பு கொண்டு உறுதி செய்தபின் அந்த ஆர்டர்களை குறிப்பிட்ட கடையில் இருந்து வாங்கிச்சென்று விநியோகம் செய்வேன்.
2021ஆகஸ்டு 8ம் தேதி இனி இதுதான் என் எதிர்காலம் என்று முடிவெடுத்து பின் அதற்கான செயலி ஒன்றை வடிவமைத்து செயலிகொண்டு முழு வீச்சில் ஆரம்பித்தேன். இன்று 100 க்கும் மேற்பட்ட கடைகள் எங்கள் சேவையில் இணைந்துள்ளன.10 பேர் என்னுடன் பணியாற்றுகின்றனர். விரைவில் இதனையும் விரிவாக்கம் செயயவும் உள்ளேன்.
`Start with what you have’ என்று சொல்வார்கள். நான் ஆரம்பித்தபோது என்னிடம் 400 ரூபாய் பணம், ஒரு மிதிதிவண்டி, கல்லுரிக்குச் செல்லும் பை ஒன்று. உடன் வாட்ஸ்அப். இவ்வளவுதான். இதைக்கொண்டுதான் ஆரம்பித்தேன்.”
`உங்கள் விநியோகச்சேவையைப்பற்றி சொல்லுங்களேன்?’
``தினமும் காலை 8 முதல் இரவு 9.30 மணி வரை எங்கள் சேவை இருக்கும். உணவு, மருந்து முதல் இறைச்சி வரை எது கேட்டாலும் நாங்கள் கொண்டுபோய் விநியோகம் செய்வோம். எங்கள் சேவையைப் பார்த்து மக்களே மற்றவர்களுக்குப் பரிந்துரை செய்ய இப்போது நாங்களும் விரிவாக்கம் செய்ய உள்ளோம்.”
``ஸ்விகி, சொமோட்டா போன்ற பல போட்டியாளர்கள் உங்கள்ஊரில் இருக்கும்போது எப்படி சமாளிக்கின்றீர்கள்?”
`அதெல்லாம் கம்பெனி சீக்ரெட்!’ என்றவர் `நாங்கள் புதிய டிரெண்டாக எதுவெல்லாம் வருமோ அதையெல்லாம் நாங்கள் உடனே எங்கள் சேவையுடன் இணைத்துவிடுகிறோம்.
உணவகங்களில் உணவை வீண் செய்யாதீர்கள், நீரை சேமியுங்கள் என்று நாங்கள் சில உணவங்களில் விளம்பரம் செய்தோம். அவை கைக்கொடுத்தன. இப்போது நாங்கள் 3P திட்டத்தினை முன்னெடுத்துள்ளோம்.இந்த 3 பி என்பது
Planet, People, Profile, உலகம் இயற்கை சமநிலையைப்பேண பெட்ரோல் இல்லாத வண்டியாக மின்சார வண்டியை பயன்படுத்துகிறோம். இதனால் கார்பன் வெளியீட்டில் நாங்கள் நேரடியாக இல்லை. சுற்றுப்புற சுழலுக்கு ஏற்றவாறு நாங்கள் செயல்படுகின்றோம். நாங்கள் மற்ற நிறுவனங்களை விட குறைவான கட்டணம் வாங்குகிறோம். இதையெல்லாம் கவனிக்கும் மக்கள் அவர்களே பரிந்துரை செய்கின்றார்கள் என்பதை எங்கள் செயல்பாட்டிற்கு கிடைக்கும் வெற்றியாக நாங்கள் பார்க்கின்றோம்.
இனி வரும் நாட்களில் எங்கள் உணவு விநியோகத்தின்போது நாங்கள் கழிவு மேலாண்மைப் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தஉள்ளோம்.”
``உங்களின் எதிர்கால திட்டம் என்ன?”
``ஈரோடு,கோவை மாவட்டத்தில் உள்ள 3ம் நிலை, 4ம் நிலை நகரங்களில் எங்கள் சேவையை விரிவிபடுத்த உள்ளோம். அதற்குத்தேவையான முதலீடுகளை பெற முயலுகிறோம். எல்லா தரப்பு மக்களின் தேவையை புர்த்தி செய்வதே எங்களின் நோக்கம்” என்கிறார் சீனிவாசன்
பலரும் தொழில் துவங்க முதலீடு வேண்டும் என்ற முதலீட்டாளர்கள நோக்கி பயணப்படும்போது நான் என்னிடம் இருப்பவற்றை வைத்து ஆரம்பிக்கின்றேன் என்று ஆரம்பித்து பெரும் நிறுவனங்களோடு போட்டிபோட்டு பயணித்து தனது சேவை வழியாக குறிப்பிட்ட அளவு சந்தையையும் பெற்றுள்ளனர் சீனிவாசனும் அவர்களின் உங்கள் கீரீனரி நிறுவனமும்.
எனவே தொழில் துவங்க ஆரம்பத்தில் நமக்குத் தேவையான வெற்றிச்சூத்திரம் SWWUH (Start with what you have).