ARR: 'அன்று போதையிலிருந்த கிட்டாரிஸ்ட் சொன்ன வார்த்தை...' - ரஹ்மான் சொல்லும் வாழ...
'StartUp' சாகசம் 4 : ஹேக்கத்தானில் கிடைத்த பொறி... டயப்பர் கழிவு மேலாண்மையில் புதுமை செய்யும் மாணவன்
தொடரின் நோக்கம்:
1. தமிழகத்தின் மூலை முடுக்குகளில் இருந்து புதுமையான தயாரிப்புகளை உருவாக்கும் தொழில் முனைவோர்களை அடையாளம் காணுதல்
2. அவர்களின் பொருட்கள், தயாரிப்புகள், சேவைகளை உலகிற்கு அறிமுகப்படுத்துதல்
3. இவர்களைப் பார்த்து மற்றவர்களுக்கும் ஊக்கம் வந்து புதிய தொழில் முனைவோர்களை உருவாக்குதல்
4. சிறு தொழில் முனைவோர்களின் தயாரிப்புகளுக்கு சந்தை வாய்ப்பை உருவாக்குதல்
இந்த தொடர் தமிழக தொழில் முனைவோர் சூழலை மேம்படுத்த உதவும் ஒரு முக்கிய ஆவணமாக இருக்கும்.!
இந்தியாவின் மிகப்பெரிய சவால்களில் ஒன்று, நாள்தோறும் நாம் உருவாக்கும் கழிவுகளை சரியாக கையாள்வதுதான். குறிப்பாக, டயபர் கழிவுகள் பெரும் பிரச்னையாக மாறி வருகின்றன
இந்தப் பிரச்னைக்காகக் காவு வாங்கப்படுவது ஒவ்வொரு சிறு கிராமங்களில் உள்ள குளம், குட்டைகள், ஏரிகள், ஆறுகள்தான். பெரும் நகரங்களில் அருகில் உள்ள கிராமங்களில் பெரும்பாலும் அந்நகரின் குப்பைகள் எவரெஸ்ட் மலைக்கே சவால் விடும் அளவு குவிக்கப்பட்டு வருகிறது.
கழிவு மேலாண்மையில் வெகு குறைவான நிறுவனங்களே இருப்பதும் அதற்காக ஆய்வுகள் இந்தியாவில் வெகு குறைவாகவே நடைபெறுவதும் பிரச்னையின் முக்கிய காரணங்கள்.
நமது தமிழ்நாட்டில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (TNPCB) அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் தினமும் உருவாகும் மொத்த திடக்கழிவு அளவு 13,422 டன் ஆகும். இந்தத் தரவு உள்ளாட்சி அமைப்புகளின் அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது.
நாள்தோறும் சேகரிக்கப்பட்ட குப்பைகளின் அளவு: 12,844 டன்/நாள்
நாள்தோறும் சேகரிக்கப்பட்ட குப்பைகளில் பதப்படுத்தப்பட்டது: 9,423.35 டன்/நாள்
நாள்தோறும் சேகரிக்கப்பட்ட குப்பைகள் குப்பை மலையில் கொட்டப்பட்டது: 2,301.04 டன்/நாள்
ஒரு நாளைக்கு 2300 டன் எனும்போது நாள்தோறும் எவ்வளவு ஆகும் என்பது உங்கள் கவனத்திற்கே.
இந்தத் தகவல் TNPCB இன் 2021 ஆம் ஆண்டு திடக்கழிவு மேலாண்மை குறித்த ஆண்டு அறிக்கையிலிருந்து எடுக்கப்பட்டது.
(குறிப்பு: இது ஒரு மதிப்பீடு ஆகும், உண்மையான கழிவு சேகரிப்பு அளவு மாறுபடலாம்)
இந்தக் கழிவுகளைச் சரியாகக் கையாளவில்லை என்றால் நமக்கு இன்னும் சிக்கல்கள் அதிகமாகும்.
இன்றைய சூழ்நிலையில் இந்தியாவில் எல்லா ஊர்களிலும் டயப்பர் விற்பனை நாள்தோறும் அதிகரித்துவருகிறது.
வயது அடிப்படையில் (Age-based)
பிறந்த குழந்தைகளுக்கான டயப்பர் (Newborn Diapers): பிறந்த குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் மென்மையான மற்றும் உறிஞ்சும் திறன் கொண்டவை.
குழந்தைகளுக்கான டயப்பர் (Baby Diapers): 3 மாதங்கள் முதல் 2 வயது வரை குழந்தைகளுக்கு ஏற்றவை.
குழந்தைகளுக்கான டயப்பர் (Toddler Diapers): 2 வயது முதல் 4 வயது வரை குழந்தைகளுக்கு ஏற்றவை.
பெரியவர்களுக்கான டயப்பர் (Adult Diapers): பெரியவர்களுக்கானவை, குறிப்பாக மலம் மற்றும் சிறுநீர் கட்டுப்பாடு இல்லாதவர்களுக்கு ஏற்றவை.
பாலின அடிப்படையில் (Gender-based)
ஆண் குழந்தைகளுக்கான டயப்பர் (Boys Diapers)
பெண் குழந்தைகளுக்கான டயப்பர் (Girls Diapers)
பயன்பாடு அடிப்படையில் (Usage-based)
பகல் நேர டயப்பர் (Daytime Diapers)
இரவு நேர டயப்பர் (Nighttime Diapers): அதிக உறிஞ்சும் திறன் கொண்டவை, இரவில் நீண்ட நேரம் பயன்படுத்த ஏற்றவை.
சிறப்பு டயப்பர்கள் (Special Diapers): நீச்சல் போன்ற சிறப்பு நிகழ்வுகளுக்காக வடிவமைக்கப்பட்டவை.
பொருள் அடிப்படையில் (Material-based)
கைத்தறி துணி டயப்பர் (Cloth Diapers)
ஒரே பயன்பாட்டு டயப்பர் (Disposable Diapers)
தரம் அடிப்படையில் (Quality-based)
பிரீமியம் டயப்பர்கள் (Premium Diapers)
பட்ஜெட் டயப்பர்கள் (Budget Diapers)
என 5 வகையில் பல வகையான டயபர்கள் சந்தையில் இருக்கின்றன.
இந்த டயபர் கழிவு மேலாண்மையில் நிறைய சவால்கள் உள்ளன.
குறைந்த மறுசுழற்சி விகிதம்: பெரும்பாலான டயப்பர்கள் பிளாஸ்டிக் மற்றும் உறிஞ்சும் பொருட்களால் ஆனவை. இவை மிகவும் மெதுவாகச் சிதைவடைகின்றன.
சுத்திகரிப்பு பிரச்சினைகள்: திறமையான கழிவு மேலாண்மை அமைப்புகள் பல பகுதிகளில் இல்லை. இதனால், டயப்பர்கள் திறம்பட தரம் பிரிக்கப்படாமல், குப்பை மலைகளில் குவிக்கப்படுகின்றன.
சுற்றுச்சூழல் பாதிப்பு: டயப்பர்கள் நிலத்தில் புதைக்கப்பட்டால், நீண்ட காலத்திற்கு நிலத்தடி நீரை மாசுபடுத்தும். திறந்த வெளியில் கொட்டப்பட்டால், விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும்.
டயப்பர்கள் மிகவும் மெதுவாகச் சிதைவடைகின்றன. சில ஆய்வுகளின்படி, 450 ஆண்டுகள் வரை ஆகலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சுற்றுச்சூழல் பாதிப்புகள்:
நிலம் மற்றும் நீர் மாசுபாடு: டயப்பர்களில் உள்ள ரசாயனங்கள் நிலத்தில் கசிந்து, நிலத்தடி நீரை மாசுபடுத்தும். மேலும், கழிவுத் தொட்டிகளில் இருந்து கசிந்த நீர் நீர்நிலைகளைப் பாதிக்கும்.
விலங்குகளுக்கு ஆபத்து: திறந்த வெளியில் கொட்டப்படும் டயப்பர்கள் விலங்குகளுக்கு உணவாகவோ அல்லது தவறுதலாக உட்கொள்ளப்படலாம். இதனால், அவற்றின் உடல்நலம் பாதிக்கப்படும்.
காலநிலை மாற்றம்: டயப்பர் உற்பத்தி மற்றும் கழிவு மேலாண்மை செயல்முறைகள் கிரீன்ஹவுஸ் வாயுக்களை வெளியிட்டு காலநிலை மாற்றத்திற்கு பங்களிக்கின்றன.
HMU Green Revolution
கேரளாவிற்கு கல்லூரி வழியே கண்காட்சிக்குச் ஒன்றுக்கு சென்ற மாணவர் உதயா வேல்ராஜுக்கு, கேரளாவில் உள்ள டயப்பர் கழிவு மேலாண்மை பற்றியும் அதன் சிக்கல்களையும் அங்கே விவாதித்ததைக் கண்ட பிறகு, "நாம் ஏன் இதைச் செய்ய முடியாது?" என்ற கேள்வி எழுந்ததுதான் துவக்கப்புள்ளி. அங்கிருந்து பயணப்பட்டு இன்று தன்னுடைய திட்டப் பணியை முழுமையாக முடித்துச் செயல்படுத்தி தனது டயப்பர் கழிவு மேலாண்மைக்கான இயந்திரத்திற்குக் காப்புரிமைக்கு விண்ணப்பித்துள்ளார். இத்தனைக்கும் 2023ஆம் ஆண்டுதான் பட்டப்படிப்பினை முடித்துள்ளார் அவர்.
உதயா வேல்ராஜ் சிறிய வயதிலிருந்தே சுற்றுச்சூழலுக்கும் பயன்தரும் முயற்சிகளில் ஈடுபட விரும்பியுள்ளார். அதற்கேற்றாற்போல் கேரளா ஸ்டார்ட்அப் மிஷன் நடத்திய டெக்கத்தான் எனும் ஹேக்கத்தானில் டயப்பர் கழிவு மேலாண்மை பற்றிப் பேச, அவருக்குள் இருந்த பொறி தனது அடையாளத்தைக் கண்டுகொண்டது. உடனே 2022-ல் டயப்பர் கழிவுகளை மறுசுழற்சி செய்வதில் தனது ஆராய்ச்சியைத் தொடங்கினார். 2022லேயே அவரின் முயற்சியான HMU Green Revolution-ஐ மத்திய அரசின் உதயன் தளத்தில் பதிவு செய்துள்ளார்.
அது இப்போது HMU Green Revolution Private Limited என்ற தனியார் நிறுவனமாக வளர்ந்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் நாடர் சரஸ்வதி பொறியியல் கல்லூரியில் இயந்திரப் பொறியியல் துறையில் பட்டம் பெற்றுள்ளார். தற்போது ME இல் உற்பத்திப் பொறியியல் (Manufacturing Engineering) படித்து வருகிறார்.
2022-ல் தனது ஆராய்ச்சியை கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் இனோவேஷன் மற்றும் இங்குபேசன் கவுன்சில் (KIIC) இல் தனது டயப்பர் கழிவு மேலாண்மைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கிருந்து தனது ஆய்வுகளையும் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். கற்பகம் இனோவேஷன் மற்றும் இங்குபேசன் கவுன்சில் (KIIC) யில் ஆய்வுக்கான இடம், அலுவலக இடம், பரிசோதனை மையம் ஆகியவற்றைக் கொடுத்துள்ளனர்.
SWIFT தொழில்நுட்பம்
உதயாவின் நிறுவனம் தனது பிரத்யேக தொழில்நுட்பமான SWIFT-ஐப் பயன்படுத்தி டயப்பர் கழிவுகளை வெற்றிகரமாக மறுசுழற்சி செய்கிறது. இந்த SWIFT தொழில்நுட்பம், டயப்பரில் இருந்து கழிவுகளை அகற்றி, அதனுள் இருப்பவற்றையும் தனித்தனியாகப் பிரித்து அந்தக் கழிவுகளில் இருந்து மாசுபடாத பொருட்களாக மாற்றி, சுற்றுச்சூழலுக்கான பாதுகாப்பை உறுதி செய்கிறது.
இப்போது உள்ள இயந்திரத்தைக் கொண்டு 500 கிலோ ஒரு நாளைக்குக் கழிவு மேலாண்மை செய்ய இயலும். ஒரு வருடத்தில் ஒரு லட்சத்து எண்பதாயிரம் கிலோ டயப்பர் கழிவுகளை மேலாண்மை செய்ய இயலும்.
தற்போது பல மாநகராட்சிகளில் இவர் தனது ஸ்விப்ட் தொழில்நுட்பத்தால் ஆன இயந்திரங்களை நிறுவிட அனுமதி பெற விண்ணப்பித்துள்ளார்.
தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் இன்னோவேஷன் மிஷன் (StartupTN) அமைப்பின் கீழ் TANSEED 6.0 நிதி உதவியால், உதயாவின் நிறுவனத்துக்கு ரூ.15 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளனர். இதனைக் கொண்டு தன்னுடைய தொழில்நுட்பத்தை மேம்படுத்தி, டயப்பர் கழிவுகளைச் செயல்படுத்தும் தனது திறனை மேலும் அதிகரிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
விருதுகள்
உதயாவின் இந்த முயற்சிகள் டயப்பர் கழிவுகளின் மாசுபாட்டை தடுப்பது மட்டுமல்லாமல், பசுமையான தொழில்நுட்பங்களை உலகத்திற்கு அறிமுகம் செய்கிறது. இதன் மூலம், சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு மறுசுழற்சி அடிப்படையில் பொருட்களும் உருவாவதால் சுற்றுச்சூழலுக்கு மிகவும் நன்மை பயக்கும்.
EDII-TN (Entrepreneurship Development and Innovation Institute) வழங்கிய TNSI விருது, உதயாவின் முயற்சிக்கான அங்கீகாரமாக இருக்கிறது
எதிர்வரும் நாட்களில் தேவையின் கருத்தைக்கொண்டு பார்த்தால் எல்லாவித டயப்பர் பயன்பாடும் அதிகரிக்கும். அதை சரியான முறையில் மறுசுழற்சி செய்யாவிடில் அவையும் குப்பைமலைகளில் சேர்ந்துகொண்டு நமது சுகாதாரத்தை சீர்கேடாக்கும். இதுபோன்ற நிலைகள் வராதிருக்க ஒவ்வொரு பஞ்சாயத்திலும் இதுபோன்ற இயந்திரங்களை நிறுவி அதிக குப்பை மலையாக்காமல் நீர் நிலைகளையும், இடங்களையும் பேணி காப்போம். !
தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் இன்னோவேஷன் மிஷன் (ஸ்டார்ட்அப்டிஎன்) தமிழ்நாடு விதை நிதி, ஒரு புதிய தொழில்முனைவோர் தனது புதுமையான யோசனையை நனவாக்க, அதற்குத் தேவையான மூலதனம், வழிகாட்டுதல், ஆதரவு போன்றவற்றை அளிக்கிறது. இதற்காகவே உருவாக்கப்பட்ட ஒரு முக்கியமான கருத்தாக்கம் தான் "StartupTN Seed Fund".
StartupTN Seed Fund வழியாக முதலீடு மட்டும்தான் கிடைக்கும் என்பதில்லை.
யோசனையை நனவாக்குதல்: தங்கள் யோசனையைச் செயல்படுத்தத் தேவையான மூலதனத்தைப் பெறுதல்.
தொழில் வளர்ச்சி: திட்டப் பணி தயாரிப்பு, பொருள்/சேவை தயாரிப்பு மேம்பாடு, சந்தைப்படுத்தல், குழு விரிவாக்கம் போன்றவற்றிற்கு ஆலோசனை வழங்குதல்.
வல்லுநர் வழிகாட்டுதல்: Startup TN Seed Fund பெரும் நிறுவனங்கள், தொழில்முனைவோர்களுக்கு வணிகத் திட்டமிடல், சந்தை ஆராய்ச்சி, நிர்வாகம் போன்ற துறைகளில் வல்லுநர் வழிகாட்டுதலை வழங்குகின்றன.
நெட்வொர்க்கிங் வாய்ப்புகள்: விதை நிதி வழியாக, தொழில்முனைவோர்கள் முதலீட்டாளர்கள், தொழில் வல்லுநர்கள், மற்றும் பிற தொழில்முனைவோர்களுடன் இணைந்து செயல்பட வாய்ப்புகள் கிடைக்கின்றன.
சாகசங்கள் தொடரும்!