Steve Smith: `புன்னகைத்திருங்கள் ஸ்மித்' - மன்னிப்பு கேட்டு சிந்திய கண்ணீர்; காலத்தின் நாயகனின் கதை
இடம்: சிட்னி விமான நிலையம் - ஆஸ்திரேலியா
ஆண்டு: 2018
விமான நிலையம் வழக்கத்திற்கு மாறாக மிகவும் பரபரப்பாகக் காட்சியளிக்கிறது. கேமராக்களின் ப்ளாஷ் வெளிச்சம் கண்களைக் கூசச் செய்யும் அளவுக்கு மின்னிக்கொண்டிருந்தது. அந்த ப்ளாஷ் வெளிச்சம் அந்த வீரனுக்கு அவனுள் இருந்த குற்றவுணர்ச்சியின் மீது வெளிச்சம் பாய்ச்சியது. ‘நான் தவறு செய்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள். என் குடும்பத்திற்கும், நாட்டிற்கும் அவப்பெயரைத் தேடித் தந்துவிட்டேன். காலம் என்னை மன்னிக்குமா எனத் தெரியவில்லை. இளம் தலைமுறையினருக்கு மிகமோசமான முன்னுதாரணமாக ஆகிவிட்டேன் ’ என்று நா தழுதழுக்க பேசிவிட்டுத் தேம்பித் தேம்பி அழுதான் அந்த வீரன். அவனின் அந்த அழுகை அன்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களின் மனதைக் கலங்கடித்தது.

கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒரு வீரன் இப்படி தான் செய்த தவறை பல கோடி மக்களுக்கு முன் ஒப்புக்கொண்டு கண்ணீர் விட்டு பகிரங்கமாக மன்னிப்புக் கேட்ட சம்பவம் நடந்ததில்லை. அப்படி பகிரங்கமாக மன்னிப்புக் கேட்ட அந்த கிரிக்கெட் வீரனை வரலாறு என்றுமே மறக்காது. அந்த வரலாற்று வீரன் ஸ்டீவ் ஸ்மித் கிரிக்கெட்டின் டாப் பேட்டர்களில் ஒருவராகத் திகழ்ந்து தன் அணிக்குத் தன் பங்களிப்பைச் செலுத்தி விடைபெற்றிருக்கிறார்.
2018 ஆம் ஆண்டு 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. 1-1 கணக்கில் இரு அணிகளும் சமமாக இருந்தன. ஆனால் மூன்றாவது ஆட்டத்தை ஆஸ்திரேலிய அணி சரியாக விளையாடவில்லை. தோல்வியை நோக்கி ஆஸ்திரேலிய அணி சென்றுகொண்டிருந்தது. சூழல் இப்படி இருக்க ஆட்டத்தின் மூன்றாவது நாளில் ஆஸ்திரேலிய பேட்டர் கேமரூன் பான்கிராஃப்ட் விரல் இடுக்குகளில் மஞ்சள் நிறத்தில் எதையோ வைத்துக்கொண்டு பந்தை தேய்த்துக்கொண்டே இருக்கிறார். (கிரிக்கெட் பந்து பழையதாக பழையதாக பௌலர்கள் ரிவர் ஸ்விங் செய்ய ஏதுவாக மாறும்.)

சந்தேகத்துக்கிடமான அந்தச் செயலை அத்தனை கேமராக்களும் வெளிச்சம் போட்டுக்காட்டின. அன்றைய நாள் ஸ்மித்தின் தலையில் இடி விழுந்தது. போட்டி முடிந்த பிறகு ஸ்மித்தும், பான்கிராஃப்ட்டும் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்கள். ‘இந்த தவறுக்கு பான்கிராஃப்ட் மட்டும் காரணமில்லை. நானும்தான் அதற்கு உடந்தையாக இருந்தேன்’ என்று ஸ்மித் தன்னுடைய தவறை ஒப்புக்கொண்டார். அந்த உப்புத்தாள் ஐடியா அவருடையதல்ல. அந்த உப்புத்தாளை அவர் தொடவும் இல்லை. அதை இன்னொருவர் கையில் அவர் திணிக்கவும் இல்லை. ஆனால், ஒரு கேப்டனாக நின்று இதையெல்லாம் தடுத்திருக்கவேண்டும்.
மாறாக வேடிக்கை பார்த்தார் ஸ்மித். இதற்கான விளைவு பெரியதாக இருக்கும் என்று அவர் கனவிலும் நினைத்திருக்கமாட்டார். போட்டி முடிந்த பிறகு ஆஸ்திரேலியாவிற்கு சென்ற ஸ்மித்தை குற்றவாளியை அழைத்துச் செல்வதுபோல் பாதுகாப்புப் படையினர் அழைத்துச் சென்றனர். இந்தச் சம்பவத்தால் பல விமர்சனக் கத்திகளை அவர் எதிர்கொண்டார். அதனால் குத்திக் கிழிக்கப்பட்டார். இதனால் அடைந்த மன உளைச்சல் நீங்குவதற்கு முன்பாகவே ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மிகப்பெரிய தண்டனையைக் கொடுத்தது.

கிரிக்கெட்டில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்திருந்த ஸ்மித்தின் சாம்ராஜ்யம் சரிந்தது. மோசடிக்காரன், ஏமாற்றுக்காரன் என ஸ்மித்தை குத்திக் கிழித்தனர். பான்ஃகிராப்ட் பந்தை சேதப்படுத்துவது முன்கூட்டியே தெரிந்தும் அவருக்கு உடந்தையாக இருந்ததால் கேப்டனாக இருந்த ஸ்மித்திற்கும், துணை கேப்டனாக இருந்த டேவிட் வார்னருக்கும் அனைத்து விதமான கிரிக்கெட்டுகளிலும் விளையாடுவதற்கான ஓராண்டு காலத்தடை விதிக்கப்பட்டது.
தடையை எதிர்கொண்ட ஸ்மித் ஓர் ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு ஆஷஸ் தொடர் மூலம் மீண்டும் பேட்டை எடுத்து களமிறங்கினார். 2019 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையே நடைபெற்ற ஆஷஸ் தொடரில் களம் இறங்கினார். ஆனால் ஸ்மித் மைதானத்திற்குள் களம் இறங்கியபோது பந்தை சேதப்படுத்தியதை மனத்தில் வைத்துக்கொண்டு அவர் மன்னிப்பு கோரும்போது அழுத முகத்தை முகமூடியாக அணிந்து வந்து அவருக்கு எதிராகக் கோஷமிட்டனர். தவறை உணர்ந்து அதற்கான தண்டனையை அனுபவித்து மீண்டுவந்து, தற்போது தன்னை மீண்டும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலியா திணறியபோது, `எதிர்பாராததை ஏதிர்பாருங்கள்' என்று தனி ஆளாக இறங்கி நான்கு போட்டிகளில் 774 ரன்களைக் குவித்து எதிரணியை கதிகலங்கச் செய்தார். ஸ்மித்தின் பங்களிப்பால் ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. அந்தத் தொடரில் தொடர் நாயகன் விருதை வென்ற ஸ்மித்தை ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கினர். `நான் மீண்டும் விளையாடுவேன் என்று நினைக்கவில்லை. கடந்த 15 மாத காலத்தில் நான் என்னை இழந்ததுபோல உணர்ந்தேன். அதிலிருந்து மீண்டு வந்தபோது மீண்டும் தன்னம்பிக்கையாக உணர்ந்தேன். நாம் விரும்புவதைச் செய்தால் எல்லாம் தானாக நடக்கும்’ என்று அன்றைய நாள் ரசிகர்களிடம் தன்னம்பிக்கை வார்த்தையை உதித்திருந்தார்.
செய்த தவறை உணர்ந்து, பகிரங்கமாக மன்னிப்பு கோரி கண்ணீர் சிந்த ஒரு மனதிடம் வேண்டும். ஸ்மித்துக்கு அந்த மனதிடம் இருந்தது. ஸ்மித் 1989 ஆம் ஆண்டு பீட்டர் மற்றும் மில்லியன் தம்பதியினருக்குப் பிறந்தவர். அவரின் அம்மா லண்டனைச் சேர்ந்தவர் என்பதால் ஸ்மித்திற்கு ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என இரு நாட்டுக் குடியுரிமைகளும் இருந்தன. 2010-ல் மலேசியாவில் 19 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது 114 ரன்களையும், ஏழு விக்கெட்டுகளையும் எடுத்து அசத்தியிருந்தார். லெக் ஸ்பின்னரைத் தேடிக்கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்மித் ஒரு வரப்பிரசாதமாக அமைந்தார். அதன்பிறகு டி20, டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. முதலில் பவுலிங்கில் சிறப்பாக விளையாடிய ஸ்மித் அதன்பிறகு பேட்டிங்கிலும் தன்னுடைய திறனை வளர்த்துக்கொண்டார்.

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணிக்கு எதிராக சதம் அடித்து ஆட்டநாயகன் விருதை வாங்கியது மட்டுமில்லாமல் இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடி கோப்பையை உச்சி முகரச் செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஸ்மித்திற்கு அதே வருடம் கேப்டன் பதவியும் கொடுக்கப்பட்டது. 2015- லிருந்து 2018 வரை ஒருநாள் போட்டியின் கேப்டனாக ஸ்மித் செயல்பட்டார். உலகிலேயே மிகச்சிறிய வயதில் ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதை வென்ற பெருமை ஸ்மித்தையே சேரும். டெஸ்ட்டில் 10,000 ரன்களைக் கடந்த ஆஸ்திரேலிய வீரர், ஒரு நாள் போட்டிகளில் மிக விரைவில் 3000 ரன்களைக் கடந்த வீரர் எனப் பல சாதனைகளைத் தன்வசமாக்கினார். கிரிக்கெட் உலகில் நம்பர் 1 பேட்ஸ்மேனாக ஸ்மித் மிளிர்ந்துகொண்டிருந்த நேரம் விராட் கோலியும் பேட்டிங்கில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தார். எப்படி சினிமாவில் விஜய், அஜித் என்று பேசிக்கொள்கிறார்களோ அதேபோல கிரிக்கெட்டில் ஸ்மித்தும், கோலியும் இருந்தார்கள்.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் ஸ்மித் மைதானத்தில் விளையாடியக் கொண்டிருந்தபோது இந்திய ரசிகர்கள் ‘சீட்டர்’ என்று ஸ்மித்தை சாடினர். ஆனால் விராட்கோலி ரசிகர்களைப் ‘பார்த்து அப்படி சொல்ல வேண்டாம். அவரை உற்சாகப்படுத்துங்கள்’ என்று கை அசைத்துக் காண்பித்தார். அந்தளவிற்கு அவர்கள் இருவருக்கும் இடையே ஒருவித ஆரோக்கியமான போட்டிதான் நிலவியது. பந்தை சேதப்படுத்தியதற்காக ஸ்மித் ஓராண்டு காலத் தடையில் இருந்தபோது விராட் நம்பர் 1 பேட்ஸ்மேனாகத் திகழ்ந்தார். ஆனால் ஓராண்டிற்கு பிறகு களத்தில் இறங்கிய ஸ்மித் மீண்டும் நம்பர் 1 பேட்ஸ்மேன் என்ற இடத்தைப் பிடித்தார்.
ஒருமுறை உலகின் நம்பர் பேட்ஸ்மேன் விராட் கோலியா, ஸ்மித்தா என்று ஆஸ்திரேலிய வீரர் பிரட் லீயிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்விக்கு திணறிய பிரட் லீ சிறிது நேரம் கழித்து ‘மன உளைச்சலில் இருந்து மீண்டு வந்து சிறப்பாக ஆடுகிறார் ஸ்மித். அதனால் அவர்தான் நம்பர் ஒன் பேட்ஸ்மேன்' என்று சொல்லி இருக்கிறார். கேப்டன்ஷிப் பறிப்பு, ஓராண்டு காலம் கிரிக்கெட் விளையாடத் தடை, ‘ஏமாற்றுக்காரன்’ என்ற பட்டம் என்று பல அவமானங்களைச் சந்தித்த ஸ்மித் அதிலிருந்து வெளிவந்து மீண்டும் ஒரு சிறந்த பேட்ஸ்மேனாக உச்சத்தில் நின்றார். காலம் அந்த வீரனை பக்குவப்படுத்தியிருந்தது.

துபாய் இன்டர்நேஷனல் கிரிக்கெட் ஸ்டேடியம் - துபாய்
ஆண்டு - 2025
மீண்டும் அதே ப்ளாஷ் வெளிச்சம் ஸ்மித்தை சூழ்ந்தன. அவர் முன் பத்திரிகையாளர்களின் மைக்கள் குவிந்திருந்தன. இப்போது அதே வீரன் தன் அணியைத் தலைமை தாங்கி தோல்வியைத் தழுவியிருந்தது. ஆனாலும் அந்த வீரனின் முகத்தில் இப்போது எந்தவித குற்றவுணர்ச்சியும் இல்லை. எந்த ப்ளாஷ் ஒளியையும்விட அவன் பிரகாசமாகத் தெரிந்தான். ஒரு நல்ல கேப்டனாக ஸ்மித் நிதானத்துடன் பத்திரிகையாளர்களை எதிர்கொண்டார். “இது ஒரு சிறந்த பயணம். இந்த பயணத்தில் ஒவ்வொரு நிமிடத்தையும் நான் ரசித்தேன். இந்தப் பயணத்தில் பல அற்புதமான தருணங்களும், நினைவுகளும் இருக்கின்றன" என்று தனது ஓய்வு முடிவை நெகிழ்வாக அறிவித்தார். ஓடிஐ போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்திருக்கும் ஸ்மித் மற்ற ஃபார்மட்களில் கவனம் செலுத்தப்போவதாகச் சொன்னார்.வருங்காலங்களிலும் அவரின் உச்சபட்ச மேதமை வெளிப்படும் இன்னிங்ஸ்களை கிரிக்கெட் உலகம் தரிசிக்க வேண்டும் என்பதே அத்தனை ரசிகர்களின் விருப்பமும்! எல்லா வீரர்களும் திறமையாளர்களும் நாயகர்களாக ஆவதில்லை. காலம் சிலரை மட்டுமே நாயகன் ஆக்குகிறது. தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கோரி, தண்டனை அனுபவித்து, மீண்டும் தன் நாட்டின் வெற்றிக்காக திறமையையும் நேர்மையையும் மட்டுமே நம்பகிறவனாக வந்த ஸ்மித் காலத்தின் நாயகனாக நிற்கிறார். புன்னகைத்திருங்கள் ஸ்மித்!
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...